02. பணம் பந்தியிலே - (சிறுகதை)
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
காசிம் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவனுக்கு உலகத்தை நினைத்தால் வியப்பாக இருந்தது. எத்தனை விதமான மனித மனங்கள் விசித்திரமாகக் காணப்படுகின்றன என்பதை எண்ணும்போதே வியப்பில் புருவம் நெற்றியைத் தொட்டது.
வெளியிலும் மேடைகளிலும் காட்டும் முகத்தில், தனிப்பட்ட ரீதியில் முகமூடி அணிந்திருக்கும் சிலர் அல்லாஹ்வை மறந்து தம்பட்டமடித்துக் கொண்டிருக்கிறார்களே. இவர்கள் மறுமையில் எப்படித்தான் பதில் சொல்லப் போகிறார்களோ?
காசிம் இவ்வாறு எண்ணுவதற்கு முக்கியமான காரணம் இருந்தது. அதுதான் அவனுக்கு ஏற்பட்ட மனதை வருத்தும் அந்த நிகழ்வு. இன்றைய காலத்தைக் கலி காலம் என்று சொல்வார்களே அதில் எத்தனை நிதர்சனம் இருக்கிறது?
ஒரு மனிதன் எத்தனை விதமான கஷ்டங்களை அனுபவிக்கின்றான்? குடும்பத்தைக் காப்பாற்ற எவ்வாறெல்லாம் யோசிக்கின்றான்? ஆனால் அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் உதவி பெற்றவர்கள் உபத்திரவம் செய்கையில் அந்த வலிமிகுந்த மன உணர்வுகள் எப்படியிருக்கும்?காசிம் மிகவும் இளகிய மனம் படைத்தவன். அல்லாஹ் அவனுக்கு தயாள குணத்தைக் கொடுத்திருந்தான். அதே தயாள குணம் அவனை இத்தனை ஆபத்தில் சிக்க வைக்கும் என்று அவன் அறிந்திருக்கமாட்டான்.
காசிம் சிறு வயதிலிருந்தே நற்குணத்தைப் பெற்றிருந்தான். அவன் சிறந்த கல்வியைப் பெற்று நல்லதொரு தொழில் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டான்.
காசிம் பணிபுரியும் அந்த நிறுவனத்தில் உள்ள எல்லோருக்;கும் காசிமை மிகவும் பிடித்திருந்தது. அவனது எளிமையையும் நேர்மையையும் பலரும் மெச்சினார்கள். அப்படி இருக்கையில்தான் அலுவலகத்தில் பணிபுரிய வந்த புதியவர்களின் அறிமுகங்களையும் காசிம் பெற்றான். அதில் ஒருத்தி தான் சரீனா தாத்தா. பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். ஆனால் குணத்தில் நரித்தனம் இருந்தது. அதனை காசிம் அறிந்திருக்காமையால் அவளுடன் அலுவலக விடயங்களில் சகஜமாகப் பழகினான். சரீனா ஒருநாள் காசிமிடம் வந்து,
"காசிம் தம்பி.. நல்லதொரு ஐடியா இருக்கு. எங்கள் நானாவின் நண்பன் பெரிய பிஸ்னஸ் செய்றார். அவங்களுக்கு ஒரு தொகை காசு கொடுத்தால் நல்ல லாபம் பெறலாம்.." என்றாள்.
இதுவும் நல்ல உத்தியாகத் தோன்றியது காசிமுக்கு. "அதில் பிரச்சினையில்லை சரீனா தாத்தா. ஆனால் உங்கள் நானாவின் நண்பனை எனக்குத் தெரியாதே.." என்றான்.
"உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இருக்கிறதுதானே..? அதுக்கு நான் பொறுப்பு. சரியா..?"
"ம்;.. ஆனா கவனம் சரீனா தாத்தா.." என்ற காசிம், இரண்டு வாரங்களின் பின்னர் இரண்டு இலட்சங்களை சரீனாவிடம் கையளித்தான்.
மாதங்கள் சில கழிந்தன. காசிமுக்கு சரீனாவுக்கு கொடுத்த பணம் தேவைப்பட்டது. சரீனாவிடம் கேட்டான். சரீனாவும் கேட்ட தினத்துக்கு முதல் நாளே இலாபத்துடன் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள். நம்பிக்கை அதிகமானது. பல தடவைகள் இதுபோல் நடந்துவிட்டன.
அப்போதுதான் சரீனாவின் கணவர் ரியாஸுக்கு தொழிலில் சில பிரச்சனைகள் நிகழத் தொடங்கின. இலாபம் எப்படிப் போனாலும் முதல் காசும் சேர்ந்து கரையத் தொடங்கியது. வியாபாரம் மெல்ல மெல்ல நஷ்டமடைந்து கொண்டு வந்தது.
தலைநகரில் வாழ்ந்து கொண்டிருந்தமையால் செலவுகள் கூடிக்கொண்டே சென்றன. குடும்பத்தை எப்படிக் கரைசேர்ப்பது என சரீனாவுக்கும் புரியவில்லை. அவளின் மாத வருமானம் எந்த மூலைக்கு?
சரீனா இதுபற்றி காசிமுக்கு அலுவலக மதிய இடைவேளையின் போது கூற நேர்ந்தது.
"காசிம் தம்பி.. ஒரு விஷயம் கதைக்கனும்.."
"ஏன் சரீனா தாத்தா.. ஒரு மாதிரி இருக்கீங்க? தயக்கமில்லாமல் கதைங்க.. எதுவானாலும் பரவாயில்ல சொல்லுங்க.."
"விஷயத்த நான் எப்படி சொல்லுவதென்றுதான் புரியல்ல தம்பி.."
"எதுனாலும் சொல்லுங்க தாத்தா.. நான் முடிஞ்சா ஏதும் பண்றேன்.." என்று காசிம் கூறியபோது சரீனாவுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.
"காசிம் தம்பி.. இவருட பிஸ்னஸ் எல்லாம் வரவர நஷ்டமாகிக்கிட்டே போகுது. என் சம்பளம் புள்ளைகள்ட செலவுக்கே பத்தல. அவரும் இதனால மனசுடஞ்சி போயிட்டாரு. உங்களால முடிஞ்சா.. காசு கடனாகத் தந்தீங்க என்டா பெரிய உதவியாயிருக்கும்.." என்று சரீனா கூறியதற்கு,
"சரீனா தாத்தா.. உங்க கணவர்ட பிஸ்னஸுக்கு எவ்வளவு காசு தேவப்படுது..?" என காசிம் கேட்டதும் மலைத்தேவிட்டாள் சரீனா. அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. யாராவது இந்தக் காலத்தில் பண உதவி புரிவார்களா? ஆம் இதோ காசிம் தம்பி உதவுகிறானே.
"கிட்டத்தட்ட ஐந்து இலட்சங்கள் தேவப்படுது. ஆனா இந்தப் பெரிய தொகையை எங்க நானாமாரு கூட தர விரும்பல்ல.."
"சரீனா தாத்தா.. இன்னும் மூன்று நாள்ல நான் கோல் பண்றேன். நான் குறிப்பிடும் இடத்துக்கு வந்து நீங்க என்னைச் சந்திக்க வேணும்.." என்று கூறினான் காசிம்.
காசிம் தம்பி ஏன் இப்படி கூறுகிறான் என்று சரீனாவுக்குத் தெரியவில்லை. எனினும் மூன்று நாட்களின் பின்னர் சொன்னது போல சரீனாவுக்கு காசிமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் சரீனாவையும் அவரது கணவரையும் குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படியும், தான் அவ்விடத்தில் காத்திருப்பதாகவும் காசிம் சொன்னான். உடனே சரீனா என்ன ஏது என்று அறிவதற்காக தனது கணவருடன் மோட்டர் பைக்கில் விரைந்து வந்தாள்.
காசிம் நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்தவனாயிற்றே. ஆதலால் அவ்வப்போது சிலரிடம் கடனுதவி பெற அவனுக்கு முடியுமாயிருந்தது.
இப்போது கொண்டு வந்திருக்கும் பணத்தொகை ஐந்து இலட்சம் கூட அவனது நெருங்கிய நண்பனின் வாப்பாவிடமிருந்து பெற்றதுதான். இதற்காக காசிம் தனது தங்கையின் திருமணத்துக்காக கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேகரித்து வைத்திருந்த நகைகளை நம்பிக்கையின் பெயரில் தனது நண்பனின் வாப்பாவுக்குக் கொடுத்து வைத்திருந்தான்.
அந்த சூழ்நிலையில் காசிமுக்கு தனது நண்பனின் வீட்டில் நடந்த சம்பாஷனை நினைவுக்கு வந்தது.
"சொல்லுங்க மகன். ஏதோ தயக்கமா இருக்குறீங்க போலிருக்கு..?"
"இல்ல அங்கிள்.. எல்லாம் காசு விடயம்தான்.. ஆனா இது தொகை அதிகம்.."
"அவ்வளவு காசு எதுக்கு மகன்..?"
"என் அலுவலக தோழியின் கணவர் தொழிலில் கடுமையாக நஷ்டப்பட்டுள்ளார் அங்கிள்.. அதுதான் கடனாகக் காசு கொஞ்சம் கேட்டு நிற்கிறாங்க.. அதுதான் எனக்கு காசு கொஞ்சம் தேவைப்படுது.. நம்பிக்கைக்கு இந்த நகைகளை கொஞ்சம் வச்சிக்கோங்க.. காசைத் தந்தவுடன் இந்த நகைகளைத் திருப்பித் தந்தால் போதும்.."
"ஓகே மகன்.. உங்க மேல எனக்கு நம்பிக்க இருக்கு.. என் மகன்ட குளோஸ் பிரண்டு நீங்க.. கேளுங்க எவ்வளவு வேணும்..?"
அவர் அப்படிக் கேட்டதும், காசிம் தொகையைக் குறிப்பிட்டான். அவருக்கே புதினமாயிருந்தது. இந்தத் தொகைக்கு ஷதானே பொறுப்புதாரி| என்று காசிம் கூற அவர் அதைக் கையளித்தார். அந்தப் பணத்தைக் கொடுக்கத்தான் சரீனாவை வரச் சொல்லியிருந்தான் காசிம்.
"காசிம் தம்பி.. என்ன யோசின..?"
"ஆ.. ஒன்னுமில்ல.. இதப் புடிங்க. உங்க யாவாரத்த பாத்துட்டு இதை இரண்டு வருசத்தில திருப்பித் தந்தால் போதும்.."
பிரித்துப் பார்த்த சரீனாவுக்கு கைகள் நடுங்கின. குரல் தளும்பியது. கால்கள் பலவீனமடைந்தன. கட்டுக் கட்டாக பணம். ஐந்து இலட்சங்கள். சுப்ஹானல்லாஹ் காசிம் தம்பியா இப்படி உதவி செய்வது? இவன் எனக்கு யாரு? என்ற எண்ணம் சரீனாவுக்குத் தோன்றி மறைந்தது.
சரீனாவின் கணவர் ரியாஸும் ஸ்தம்பித்துவிட்டார். தொங்குவதற்கு கயிறு தேடிக்கொண்டிருக்கையில் பணவுதவி செய்வது இந்தச் சிறிய பையனா? என்று எண்ணினார்கள்.
"தம்பி அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யனும். கட்டாயமா நீங்க கேட்கும்போது நாங்க இந்தக் காச உங்களுக்கு திருப்பித் தருவோம். எனக்கும் ஒரு கொமரு இருக்கு. உங்களுக்கு அநியாயம் செஞ்சா அது என் மகளைத்தான் பாதிக்கும்.." என்று ரியாஸ் கூற, சரீனா அதனை ஆமோதித்தாள். அவர்கள் இருவரும் நன்றியுடன் விடைபெற்றனர்.
காசிமுக்கு மனதில் பெரிய நிம்மதியாக இருந்தது. ஒரு குடும்பம் தலைதூக்க தன்னால் இயன்ற உதவியை அவன் துணிந்து செய்துவிட்டான். ஒருவேளை அந்தப் பணத்தை அவர்கள் திருப்பித் தராவிட்டால்..? என்று அவன் சிந்திக்கவேயில்லை. ஷநல்ல எண்ணத்துடன் கொடுத்த காசு, தடங்கல்களின்றி வந்து சேரும்| என்ற உறுதியான நம்பிக்கை அவனுக்கு. சரீனாவினதும், ரியாஸினதும் மகிழ்ச்சி வதனம்.. அதில் கண்ட திருப்தி.. இது காசிமுக்கு பெரிய திருப்தியை அளித்தது.
சில காலங்களின் பின்னர் காசிம் வேறு கிளைக்கு மாற்றலாகிப் போனதோடு, சரீனாவும் வேறொரு வேலைக்காக அந்த நிறுவனத்திலிருந்து விலகிச் சென்றிருந்தாள்.
இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் காசிம், சரீனாவுக்கு கோல் பண்ணினான். மறுமுனையில் பதிலில்லை. கோலுக்கு மேல் கோல். ஒருவாறு ஒரு பெண் குரல் கேட்டது. கேட்டு பழக்கப்பட்ட குரல். ஆனால் தெளிவில்லை போல இருந்தது. ஏனெனில் அந்த மரியாதையும், பாசமும் ஒட்டியிருந்த சரீனாவின் குரலில் அகங்காரம் தொனித்தது.
காசிமுக்கு முதலில் அது பெரிய தாக்கத்தைத் தரவில்லை. எனினும் தொடர்ந்து பேசிக்கொண்டு சென்றபோதுதான் சுயரூபம் கக்கினாள் சரீனா. தனக்கு இப்போது பணத்தைத் தர முடியாது என்றும், இன்னும் தமக்கு கஷ்ட காலம்தான் எனவும் கூறிவிட்டு படாரென்று போனை வைத்துவிட்டாள்.
இதயம் கலங்கியது காசிமுக்கு. அதுகூட சரீனா தாத்தா இப்படிப் பேசிவிட்டாளே என்று அல்ல. இன்னும் அவள் கஷ்டப்படுகிறாளே என்றுதான். ஆதலால் தனது நண்பனின் வாப்பாவிடம் இன்னும் கொஞ்ச காலம் பொறுக்குமாறு மன்றாடிவிட்டு இன்னும் ஆறு மாதங்கள் வரை பொறுத்திருக்கலாம் என்று திடசங்கற்பம் பூண்டான் காசிம்.
என்ன ஆச்சரியம்! இந்த இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறைதானும் சரீனாவோ, அவளது கணவனோ காசிமுக்கு கோல் பண்ணவில்லை. அவர்கள் எடுத்த பணம் பற்றி எதுவும் கதைக்கவுமில்லை. குணம் மாறும்போது எடுத்த பணம் கூட யாருக்கும் நினைவில் இருப்பதில்லையே.
இல்லாதபோது மன்றாடிக் கெஞ்சுவதும், எல்லாம் சரிவந்தபின் கடன் கொடுத்தவரையே மிஞ்சுவதும் இன்றைய உலகில் சர்வ சாதாரணம்.
காசிம் பலமுறை சரீனாவுக்கும், ரியாஸுக்கும் கோல் பண்ணினான். ஆனால் அவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதிகாரத் தோரணையில் பேசுவதும், சிறிய பையன்தானே என அவனை அதட்டுவதும் வாடிக்கையாகிப் போனது.
இன்னொரு நாள் அவர்களின் வீட்டுக்கே சென்று காசிம் பணத்தைக் கேட்ட போது,
"இப்ப எங்களுக்கு காசு தர ஏலாது. உங்களுக்கு ஏலுமெண்டால் பொலிஸுக்குப் போய் எடுத்துக்கோங்க.." என்று வெடுக்கென சரீனாவும், ரியாஸும் மனசாட்சியில்லாமல் சொல்லிவிட்டார்கள்.
காசிம் சமூகத்தைப்பற்றி மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தான். இன்று காசு எடுத்தவன் பயப்படத் தேவையில்லை. காசு கொடுத்தவன்தான் பயப்பட வேண்டும். ஆம் காசிமுக்கும் பயம் பிடித்தது. நண்பனின் வாப்பாவிடம் பெற்ற பெரிய கடன் தொகையை, தான் எவ்வாறு திருப்பிக்கொடுப்பது என்ற யோசனையுடன் வீட்டில் தங்கைக்கு திருமணம் ஏற்பாடாகியிருந்த நிலையில், தனது தங்கையின் திருமணத்திற்கு முன் மீட்டெடுக்க வேண்டிய நகைகள் பற்றிய நினைவும் சேர்ந்து காசிமுக்கு தொடர்ந்து தலைவலி ஏற்படக் காரணமாயிற்று.
என்ன செய்வது என்று யோசித்த காசிம் வேறு வழியில்லாமல் சரீனா சொன்னதையே செய்ய நேர்ந்தது. அதுதான் காவல் துறைக்குச் சென்று பணத்தை மீளப்பெறுவது. கால்கள் பின்ன, இதயம் வேண்டாம் என்று அடம் பிடித்து அழ, உள்ளத்தைக் கல்லாக்கிக் கொண்டு அந்தக் காரியத்தை காசிம் செய்ய வேண்டியதாயிற்று.
சமூகம் இதைக் கண்டால் என்னவெல்லாம் சொல்லும்? ஆனால் காசிமின் பிரச்சனை சமூகத்துக்கு தெரியாததால் அவன் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. சமூகம் வந்து பணத்தைப் பெற்றுக் கொடுக்கப் போகிறதா? ஆதலால் அவன் காவல் நிலையம் போகத் துணிந்துவிட்டான்.
காசிம் கொடுத்த புகாரின்; பெயரில் சரீனாவும் ரியாஸும் காவல் நிலையத்துக்கு வந்தார்கள். ரியாஸின் தோற்றம் முற்றாக மாறியிருந்தது. அகங்காரம் அவன் நடையில் தெறித்தது. ஆனாலும் பயனென்ன? பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்காமல் என்ன ஷபந்தா| வேண்டிக்கிடக்கிறது? ரியாஸின் வாக்குமூலம் காசிமை ஒரு குற்றவாளியாகவே சித்தரித்தது.
ஒரு கட்டத்தில் ரியாஸ் பணம் பெறவே இல்லை என்று வாதிடும் அளவுக்குச் சென்றுவிட்டான். சரிக்கு சரியாக காசிமுடன் வாக்குவாதப்பட்டான். காசிமை அவமானப்படுத்தி அழ வைத்தான். 'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' என்று சும்மாவா சொன்னார்கள்? கொடுத்த காசைக் கேட்கப் போய் கெட்ட பெயரையும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமா?
காசிமுக்கு இதனைத் தாங்க முடியவில்லை. நல்ல வேளை ஐந்து இலட்சம் பணம் பெற்றுக்கொண்டதாக சரீனாவிடமிருந்து அந்நாட்களிலேயே ஒரு கடிதத்தைக் காசிம் பெற்றிருந்தான். அக்கடிதத்தில் ரியாஸும் கையெழுத்துப் போட்டிருந்தான். அந்தக் கடிதத்தை உடனே எடுத்து, காவல் துறை அதிகாரிக்குக் காட்டினான் காசிம். அதனால் காவல் துறையினருக்கு உண்மை விளங்கிவிட்டது.
தவணை முறையில் பணம் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் ஆயிற்று. உதவி செய்யப்போய் உபத்திரவம் வந்துவிட்டது. ஆனால் அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். அவன் காசிமைக் கைவிடப் போவதில்லை. அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை தங்குதடையின்றி அல்லாஹ்விடம் சென்றுவிடுகிறது.
காவல் நிலையத்தைவிட்டு வெளியேறும்போதும் காசிமின் செவிகளில், ரியாஸ் பணம் பெறும்போது சொன்ன அந்த வாசகமே திரும்பத் திரும்ப ஒலித்தது.
"தம்பி அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யனும். கட்டாயமா நீங்க கேட்கும்போது நாங்க இந்தக் காச உங்களுக்கு திருப்பித் தருவோம். எனக்கும் ஒரு கொமரு இருக்கு. உங்களுக்கு அநியாயம் செஞ்சா அது என் மகளைத்தான் பாதிக்கும்..!"
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
.jpg)
No comments:
Post a Comment