06. பலன் - (சிறுகதை)
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
காலை பதினொரு மணியாகிவிட்டது. நோயாளிகள் இன்னும் குறைந்தபாடில்லை. வீட்டிலிருந்து வரும்போது மூன்று இட்லி சாப்பிட்டதுதான். இப்போது கொஞ்சம் பசியாகவும், நிறையத் தாகமாகவும் இருந்தது சாந்திக்கு. ஆனாலும் எழுந்து செல்ல முடியாதளவுக்கு நோயாளிகள் தொகை அதிகரித்திருந்தது. பன்னிரண்டு மணிக்குள் அனைவரையும் சமாளிக்க முடியாதுதான். எனினும் தூரத்தில் இருந்து வந்தவர்கள் எப்படியாவது மருந்து எடுத்துக்கொண்டு போய்விட வேண்டும் என்ற ஆர்வத்திலும், தவிப்பிலும் வந்திருந்த நோயாளிகள் தலையை நீட்டி சாந்தியை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
மருந்து கொடுக்கும் பையன் திரும்பி சாந்தியைப் பார்த்தான். ஷமற்றவர்களை அனுப்பிடவா?| என்ற கேள்வி அவன் கண்களில் தொனித்தது. கொஞ்சம் பொறு என்று சைகையால் சொல்லிவிட்டு அவ்விடம் வந்த நோயாளியிடம் பார்வையைச் செலுத்தினாள் சாந்தி.
"சொல்லுங்க உங்களுக்கு என்ன வருத்தம்...?"
"அம்மா ரெண்டு நாளா இடுப்பு வலி.. தாங்கக் கஷ்டமாக இருக்கு.. உட்கார முடியல.. நடக்க முடியல.."
"எங்கயாலும் விழுந்தீங்களா..? பாரமா ஏதாச்சும் தூக்குனீங்களா..?"
இவ்வாறான சம்பாஷணையோடு நோயாளிகளின் வருத்தத்தை அறிந்து அதற்கான மருந்தை எழுதிக்கொடுத்து விடுவாள் சாந்தி. நோயாளிகளின் வரிசை கொஞ்சம் மூச்சுவிட முடியும்படி இருந்தது. விடுமுறை தினமென்பதால் மற்ற வைத்தியர்கள் ஊருக்குச் சென்றிருந்தனர். அதனால் சாந்தியின் டிஸ்பென்சரிக்கு இத்தனைக் கூட்டம். மற்ற நாட்களில் இந்தளவுக்கு கூட்டம் இருப்பதில்லை.
வந்த நோயாளிகள் மத்தியில் பொறாமைக்காரர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
"ஏய் சசி.. இன்னக்கி டாக்டரம்மாவுக்கு ஒரு மாச சம்பளம் ஒரு நாள்ளயே கெடச்சிருக்கும்டி.." என்றாள் நளினி.
"ஆமா ஆமா டாக்டர் படிப்பு பெரிய படிப்புனு சும்மாவா சொன்னாங்க.. அவங்க படிச்சிருக்காங்க.. அதனால் நல்லா இருக்காங்க.. உனக்கு ஏன் பொறாமை?" என்று அவளது பேச்சை இடைவெட்டினாள் சசி.
சசியுடன் பேசிப் பயனில்லை என்றறிந்த நளினி வேறொரு ஊர் வம்புக்காரியை கண்களால் தேடிக்கொண்டிருந்தாள்.
அவர்களின் பேச்சு சாந்தியின் காதிலும் விழுந்தது. மருந்து கொடுக்கும் பையனின் காதிலும் விழுந்தது. அவன் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தான். இப்படியெல்லாம் கதைப்பதற்கு எப்படித்தான் மனசு வருதோ என்று சாந்தியின் மனம் எண்ணியது. சிலபோது சிலபேரை இறைவன் பேச வைக்கிறான்.. சிலரைக் கேட்க வைக்கிறான். அதன் போக்கில் வாழப் பழகிக் கொண்டால் வாழ்க்கை நரகமாகாது.
மற்றவர்களின் சந்தோசங்களைக் கண்டு தமக்குள்ளேயே மருகிக் கொள்பவர்கள் தங்களுக்குத் தாமே நோயைத் தேடிக்கொள்கின்றனர். அவர்களது மனம் பொறாமையால் வெந்தழிகின்றது. அதனால் எதிர்வகையான சிந்தனைகளும், குரோதமும் ஏற்பட்டு அவர்களது முகம் விகாரமாகின்றது. டென்ஷன் அதிகமாகி மனநோய்களுக்கு ஆளாகின்றனர். அதேபோல மற்றவர்கள் கவலையில் இருக்கும்போது அதைப் பார்த்து சிரிப்பவர்களுக்கும் மனது கடினமாகின்றது. கேலிப் பேச்சும், ஆணவமும், திமிரும் தங்களைத் தாமே கெட்டவர்கள் என்று சாட்சி பகர்வதற்கும் ஏதுவாகின்றது. இது எதுவும் தெரியாமல் அடுத்தவர்களின் நலனின் பொறாமைப்படுபவர்கள் உடலளவில் அல்ல, மனதளவில்தான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு சாதாரண காய்ச்சல் என்றாலும்கூட 'எனக்கு வந்து வாச்சிருக்கு.. இந்த நோய்.. அவளுக்கு வந்து தொலஞ்சிருந்தால் என்ன?' என்றுதான் சிந்திக்கத் தோன்றும்.
இவ்வாறான அரக்கர்கள் நோயாளிகள் வரிசையில் மட்டுமா இருக்கின்றார்கள்? சொந்த பந்தங்களுக்குள்ளும்தானே இருக்கின்றார்கள்? சாந்தியின் மனது தனக்குத்தானே கேட்டுக் கொண்டது. அந்தப் பெண் நளினி பேசிய பேச்சு சாந்திக்கு எதிரொலி போல திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தது.
மனம் எதிலும் ஒட்டவில்லை. தலையைச் சிலுப்பி தன்னை சுதாரித்துக் கொண்டாள். நிமிர்ந்து பார்த்தபோது நளினிதான் வந்திருந்தாள். சாந்திக்கு அவளைப் பார்த்ததும் கோபம் உச்சிக்கு ஏறியது. ஆனால் தன்னை நம்பி வந்த நோயாளிகளிடம் கடுமையாக நடந்துகொள்ளாமல் நடு நிலமை பேண வேண்டும் என்று அவள் எண்ணிக்கொண்டாள்.
"என்ன செய்யுது..?"
"டாக்டரம்மா நெஞ்சுக் குத்து விட்டுவிட்டு வருது.. எந்த வேல செஞ்சாலும் அப்படியே பிடிச்சுட்டு உக்காந்துருவேன்.."
"எவ்வளவு காலமா இருக்கு..?"
அவளுக்கு நெஞ்சு வலியா..? அல்லது பொறாமைக் குணம் மனதில் சூழ்ந்து நெஞ்சு வலியா என்று அறிய சாந்தி பல கேள்விகளைக் கேட்டாள். இன்னும் இரண்டு பேர்தான். அப்பாடா வீட்டுக்கு கிளம்பிவிடலாம் என்று எண்ணிய சாந்தி அவர்களையும் பரிசோதித்துவிட்டு தன் ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.
அவளுடைய புத்தம்புதுக் காரை பாதையின் மறுபக்கம் ஒரு மரத்தின் நிழலில் நிறுத்தியிருந்தாள். அதில் அமர்ந்து செல்வதே தனி சுகம்தான். ஆனால் இதெல்லாம் அவளுக்கு சும்மா கிடைத்தவை அல்ல. அவளது திறமைக்கும், ஒழுக்கத்துக்கும் இறைவன் கொடுத்த பரிசுகளே. அடிப்படையில் அவள் பணக்காரி அல்ல.
சின்ன வயதிலேயே சாந்தி அபார திறமைகளைக் கொண்டிருந்தாள். மிகவும் நுணுக்கமானவள், புத்திசாலித்தனம் கொண்டவள். எதையும் வெகு எளிதில் மனனமிட்டுக் கொள்வாள். எல்லோரும் அவளுடன் பாசமாகவே இருந்தனர்.
வகுப்பிலும் படு சுட்டியாக இருந்தபோதும் படிப்பு விசயத்தில் அவளை அசைக்க யாராலும் முடியவில்லை. அவளது தோற்றம் ஒரு பணக்கார குழந்தை போன்ற தோற்றமாக அமைந்திருந்தபடியால் அனைவரது மனதிலும் அவள் இடம்பிடித்திருந்தமை வியப்பல்ல.
காலப்போக்கில் உயர்தரப் பரீட்சை முடித்துவிட்டு பல்கழைக்கழக அனுமதிக்காகக் காத்திருந்தாள். அந்த அவகாசத்தையும் அவள் பிரயோசனமாகக் கழிக்கவே முனைந்தாள். அதனால் அவளது சித்தப்பாவின் வீட்டிலிருந்து தங்கிப் படிக்க எண்ணினாள்.
சித்தப்பா நல்லவர் என்ற போதிலும் சித்தியின் வாய்ச் சொல்லுக்கு மிகவும் கட்டுப்பட்டவர். சித்தி மிகவும் நல்லவர் என்று சொல்ல முடியாது என்று சாந்தி உட்பட அனைவரும் அறிந்திருந்தனர். விடுதிக் கட்டணம் கட்டிப் படிக்கும் அளவுக்கு சாந்திக்கு வசதியிருக்கவில்லை. எனவே சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்து படிப்பது என்றே முடிவானது.
சாந்தியை சித்தப்பாவின் வீட்டில் விட்டுவிட்டு பெற்றோர் ஊருக்குத் திரும்பிவிட்டனர். சாந்தி, சித்தப்பாவின் வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். பணக்கார வீடு என்பது அங்கிருந்த ஆடம்பரப் பொருட்களிலும், சுவர் வேலைப்பாடுகளிலும் தெரிந்தது. பிரிட்ஜ், வொஷின் மெஷின், ஃபேன், ஸோஃபா, கண்ணாடி மேசை.. அப்பப்பா இப்படி நிறையப் பொருட்கள் அந்த வீட்டில் நிறைந்து காணப்பட்டன. சாந்தி, தனது வயதை ஒத்த சித்தப்பாவின் மகளுடன் பாசமாகக் கதைத்தாள்.
"ஏ வினிதா நீ இந்த விடுமுறைல என்ன பண்ணப்போற?"
"நா என்ன பண்ணினா உனக்கென்ன..?"
வெடுக்கென்று வந்து விழுந்த வார்த்தையால் சாந்தியின் இதயம் வெதும்பியது. என்ன இவள்.. நான் என்ன கேட்டுவிட்டேன் என்று இப்படிப் பேசுகிறாள் என்று எண்ணியபடி,
"ஏன் கோவிக்கிற.. நா தப்பா ஏதும் கேட்கல்லியே வினிதா?" என்றாள் சாந்தி.
"ஆமாமா. நீ தப்பா கேட்க மாட்ட. பெரிய படிப்புக்காரினு நெனப்பு. எங்க அண்ணனும்தான் லண்டனில் படிக்கிறாரு.."
பெரிய படிப்புக்காரின்னு நெனப்பா? வினிதா என்ன சொல்கின்றாள் என்றே சாந்திக்கு விளங்கவில்லை. ஓரிரு நாட்கள் கடந்த பின்புதான் வினிதா சாதாரண தரம் வரைதான் படித்திருக்கிறாள் என்றும், அந்த வயிற்றெரிச்சலில்தான் அவள் அப்படிக் கதைத்தாள் என்றும் சாந்தியால் அறிய முடிந்தது. சாந்திக்கு மிகவும் கவலையாக இருந்தது. இத்தனை காலம் வீட்டில் இருந்தவளைப் பார்த்து 'விடுமுறையில் என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்டால் கோபம் வராதிருக்குமா? என்று நினைத்து தன்னைத் தானே நொந்துகொண்டாள் சாந்தி.
சித்தப்பா சாந்தியுடன் சிநேகமாகப் பேசுவார். ஆனால் சித்தி இதுவரை சாந்தியுடன் பெரிதாகப் பேசவில்லை. அவள் டியூஷனுக்கு போய் வந்த பிறகுகூட படிப்பு பற்றி ஒன்றும் கேட்கவில்லை. ஆரம்பத்தில் சாந்திக்கு இது பெரிதாகத் தோன்றவில்லை. சித்தப்பா காட்டிய பாசம் அவளுக்கு பெரிதாக இருந்தது. சாந்தி சமையலில் சித்திக்கு உதவுவாள். காய்கறிகள் நறுக்;கிக் கொடுப்பாள். அப்போதும்கூட சித்தி பெரிதாக எதுவும் பேசமாட்டாள்.
ஒருநாள் பகல் சாந்தி டியூஷன் விட்டு வந்திருந்தாள். மேசையில் அவளுக்கான சாப்பாடு காத்திருந்தது. கோழிக்கறி, கத்தரிக்காய், போஞ்சி, அப்பளம் என்று விருந்துக் கறிகளைக் கண்டதும் அவளது வாயில் உமிழ்நீர் ஊறியது.
உள்ளே போய் கால் முகம் கழுவிவிட்டு, ஆடைகளை மாற்றிக்கொண்டு வந்து கதிரையில் அமர்ந்தாள். சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைத்தது. பீங்கானைத் தன் பக்கமாக இழுத்து மிகவும் ஆசையோடு சோற்றைப் பிசையும் போது சித்தி அருகில் வந்து அமர்ந்தாள். அதிசயமாக இருந்தது சாந்திக்கு.
"என்னம்மா சாந்தி படிப்பெல்லாம் எப்படிப் போகுது?" என்று சித்தி கேட்பாரென சாந்தி எதிர்பார்த்தாள். ஆனால் சித்தியோ எடுத்த எடுப்பில்,
"சாந்தி நீதான் காலையிலயே கிளம்பிட்டியே.. இன்னக்கி காலைல நியூஸ்ல சொன்னாங்க.. ஏதோ பறவைக் காய்ச்சல் பரவிக்கிட்டு வருதாம். நாம சாப்புட்ர சாப்பாட்டுல கவனமா இருக்கணுமாம்.."
வாய்க்குள் வைத்த சோறு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. பறவைக் காய்ச்சல் கோழிக்குத்தானே வரும்? கோழிக் கறி சாப்பிடும் போதா அதைச் சொல்வார்கள்? குமட்டியது சாந்திக்கு. அவள் அப்படியே எழுந்துவிட்டாள்.
"ஏன் சாப்பிடல..?" என்று சித்தி கேட்கவில்லை.
சாந்தி உடுத்திக்கொண்டிருக்கும்போது அவளது ரவிக்கைக்கொளுக்கி திறந்திருந்ததைக் கண்டு சித்தியும், வினிதாவும் அவளைக் கேலி செய்தார்கள். அப்போது சாந்தி அதை விளையாட்டாகவே எடுத்துக்கொண்டாள்.
ஒருநாள் காலையில் எழுந்து எல்லோருக்கும் தேநீர் ஊற்றி வைத்துவிட்டு தானும் தேநீர் குடித்தபின் சாந்தி டியூஷனுக்கு செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். உள் அறையில் சித்தியும், சித்தப்பாவும் வாய்த் தர்க்கம் செய்வது சாந்திக்கு துல்லியமாகக் கேட்டது.
"ஊரார்வீட்டு பொம்பிளப் புள்ளைய இங்க வச்சி பாதுகாக்க எனக்கு ஏலாது. எவன் கூடயாச்சும் ஓடிப்போயிட்டா அப்புறம் என்ன பதில் சொல்றது?" என்று சித்தி, சித்தப்பாவிடம் காரசாரமாகக் கேட்டதும்,
"அப்படி ஒன்றும் நடக்காது" என்ற சித்தப்பா, கதவை ஓங்கி அறைந்து சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
நாட்கள் வேகமாக விரைந்து சென்றன. மாதங்கள் சில கழிந்த பின்னர், சாந்திக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. அவள் அங்குள்ள விடுதியிலேயே தங்கிப் படித்தாள்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தபோது சாந்திக்கு சொல்லப்பட்ட தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
ஆமாம்!
'லண்டனில் படித்த சித்தப்பாவின் மகன் யூகே சிட்டிசன் ஆகி, ஒரு வெள்ளைக்காரியோட வாழ்கிறானாம்'!
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
.jpg)

No comments:
Post a Comment