Saturday, October 3, 2026

07. ஒற்றைக் கட்டில் - (சிறுகதை)

07. ஒற்றைக் கட்டில் - (சிறுகதை) 


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


"இந்த தறுதலையப் பெத்ததுக்கு ஓர் ஆட்டுக்குட்டியப் பெத்திருக்கலாம்.."

தாய் ராகினியின் வாயிலிருந்து வெளியாகிய சூடான அந்த வார்த்தைகள் ராஜாவை ஒன்றும் செய்துவிடவில்லை. அவன் எப்போதும் போல தனது அடாவடித் தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தான். ராஜாவின் தங்கை மேனகா அவனை எரித்து விடுவதைப் போன்று பார்த்தாள். மேனகாவின் அந்தப் பார்வைக்கெல்லாம் அவன் ஒன்றும் பயந்தவனில்லை, தான் செய்வதே சரி என்ற நிலைப்பாட்டுக் கொள்கையுடையவன்.

இன்று காலையில் தேநீருக்கு சீனி போதவில்லை. இதுதான் இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம். ராகினியின் கணவர் யுத்த இடர்களுக்கு மத்தியிலும் ஹட்டனுக்குச் சென்று தேயிலை வாங்கி வந்து, அதனை ஊரில் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலமே வாழ்க்கைச் செலவுகளைச் சமாளித்து வந்தார். இந்த வருமானமே இவர்களது வாழ்க்கை வண்டி ஓடுவதற்குக் காரணமாகியது.

வறுமை என்பது வாலிபத்தில் வந்துவிட்டால் யாரால்தான் தாங்க இயலும்? பெண் பிள்ளைகள் வீட்டுக் கஷ்டத்தை ஓரளவு உணர்ந்து பேசாமல் இருந்தாலும் ராஜாவால் அதை அனுசரித்துப் போக முடியவில்லை. அன்றாடம் அவனைச் சமாளிப்பதே பெரும்பாடுதான்.

"சீனி இல்லாத தேத்தண்ணி எனக்கு வேணாம். சீனி போட்டுத் தா.."

"ராஜா நீ இப்ப நல்லா அடி வாங்கப் போறாய்.. உனக்கு இவ்வளவு சொல்லியும் விளங்கவில்லையா?"

"சீனி இல்லாட்டி சீனி போத்தல் எதுக்கு..?" என்று கூறியபடி பாய்ந்து வந்து அந்தக் கண்ணாடிச் சீனி போத்தலைக் கீழே போட்டு உடைத்தான் ராஜா. ராகினிக்கு வந்த ஆத்திரத்துக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை. அவனோ கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான்.

இந்த அட்டகாசங்களைக் குறும்பாக எண்ணி ரசிப்பதற்கு அவனொன்றும் குழந்தை அல்ல. படிப்பேறாமல் வெட்டியாக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனுமல்ல. நன்றாகப் படித்தவன்தான். ஆனால் சுயநலக் குணமும், ஒரு வகையான முரட்டுத் தனமும் அவனை ஆட்கொண்டுள்ளன.

மாலை வேளைகளில் எங்காவது கடைகளில் ஒத்தாசைக்கு இருந்துவிட்டு வரும்போது காசு கொண்டு வருவான். அந்தக் காசு அவனுக்கு மாத்திரம்தான். அவனது படிப்புச் செலவுக்கும் அவனது தேவைகளுக்கும் அவனது பயணங்களுக்கும் மட்டுமே பயன்பட்டது. எப்போதோ மளிகைச் சாமான்கள் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தான். ஆனால் அது வெறும் வார்த்தையாகவே காற்றில் கலந்தது.

வீட்டுத் தேவைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்போம் என்று நினைக்கத் தெரியாதவன் ராஜா. வேளா வேளைக்கு வீட்டில் சமைத்து வைக்க பெண்கள் படும்பாட்டையாவது கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டாமா? வாய்க்கு ருசியாக அனைத்தும் செய்து கொடுக்க சமையல் பொருட்கள் அனைத்தும் வீட்டிலிருக்க வேண்டுமே. ராஜாவின் செயற்பாடுகளைக் காணும் போதெல்லாம் பெற்ற தாய்க்கு கடும் கோபம் வரும் என்பது உண்மைதான். ஆனால் அதனைவிட ராஜாவின் சகோதரிகள், தாய்க்கு கொடுக்கும் கஷ்டங்களைக் கண்டு ராஜாவை ஒரு துஷ்டனாகவே பார்க்கப் பழகியிருந்தனர்.

ஒருநாள் வீட்டில் மீன் கறி வைத்து, சம்பா அரிசிச் சோறாக்கியிருந்தார்கள். ஆளுக்கு ஒரு துண்டு என்ற அடிப்படையில் மீன் கறி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. வயிறு நிறைய.. மனசு நிறைய.. உண்பதற்கு காசும் நிறைய இருக்க வேண்டுமே. இப்படிச் சமாளிப்பதே அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

00000

அன்று ஞாயிறு தினம் என்பதால் நண்பர்களுடன் 'கிரிக்கட்' விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு மீன் கறிச் சட்டியைப் பார்த்ததும் கடுமையான கோபம் வந்துவிட்டது. தனி மீன் துண்டு அவனைப் பார்த்து கேலியாகச் சிரிப்பதாகப்பட்டது அவனுக்கு.

ராஜா வந்தால் ஆசையாக சாப்பிடுவான் என்று நம்பியிருந்த மேனகா அவனது முக மாற்றத்தைக் கண்டதும் அனுமானித்துவிட்டாள். அவள் எண்ணி முடிப்பதற்குள் அரங்கேறிவிட்டது அவனது சுயரூபம்.

சாப்பிட முடியாமல் வைக்கவில்லையே.. தனக்காகத் தானே மிகுதி வைத்திருக்கிறார்கள் என்பதை உணராமல் கறிச் சட்டியைத் தூக்கி நிலத்தில் ஓங்கி அடித்தான். தாய் ராகினியால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகவும் மனம் நொந்து போனாள். அவனை எண்ணி அழுவதைத் தவிர அவளுக்கு வேறு எதுவும் செய்யத் தெரியவில்லை.

"நீ என்னடா பெரிய சண்டியனா..? வீட்டுக் கஷ்டம் புரியாமல் இப்படி ஆடுகிறாய்.. உனக்கு வாய்க்கு நல்லதா எத செஞ்சாலும் திருப்திப்படுற மனசில்ல.. நீயெல்லாம் ஒரு மனிசனா..?" மேனகா இப்படிச் சீறினாள்.

அவன் திரும்பி அவளது முதுகில் பலமாகக் குத்தினான். ஷஷஅம்மா.. ஆ..|| என்று வலி தாங்க இயலாமல் மேனகா அப்படியே கீழே அமர்ந்துவிட்டாள். அப்போதுதான் வெளியே சென்றுவிட்டு வந்த தந்தை நடந்தவற்றை அறிந்தார். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் அல்லவா? கோபத்தை மறைத்தவாறு மிகவும் பக்குவமாக எடுத்துச் சொன்னார்.

"ராஜா உனக்கு என்னப்பா பிரச்சினை? ஏன் இப்படி முரட்டுத் தனமா நடந்துக்குற? கொஞ்சம் நிதானமா இருப்பா.. இந்த வீட்டில் பொறுப்பான ஒருவனாகத்தான் நான் உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறேன்.."

தந்தை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கவில்லை அவன். அவர் சொன்னதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அப்பால் நகர்ந்து வெளியே சென்றுவிட்டான். அன்றைய தினம் அவன் பசியில் இருந்திருக்க வேண்டும். அல்லது நண்பர்கள் வீட்டில் சாப்பிட்டிருக்க வேண்டும்.  

ஊரைப் பொறுத்தளவில் அவனொரு தங்கப் பிள்ளை. காரணம் ஊராரின் வேலைகளிலும், பொது வேலைகளிலும், நண்பர்களது வேலைகளிலும் கரிசனை கொண்டு மிகவும் அக்கறையோடு செயல்பட்டு செய்து கொடுப்பான். வீட்டில்தான் இப்படி முரட்டுத்தனம்.

ஒருநாள் ராகினிக்கு உடம்புக்கு முடியாமல் போனது. அவள் மேனகாவையும் அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்குச் செல்வதற்காக பாதைக்கு வந்தாள்.  அவர்களைக் கண்டுவிட்ட ராஜா, போகவிடாமல்  தடுத்து காசு கேட்டபடி சைக்கிளில் வந்து வழிமறித்தான். தாய்க்கு சுகமில்லை என்றால் சராசரியாக யாருமே இரக்கப்படுவார்கள். ஆனால் ராஜா நடந்துகொண்ட விதம் தன் வயிற்றில் வந்து ஏன் வாய்த்தான்? என்று எண்ணும்படி செய்துவிட்டது ராகினிக்கு.

சிரமப்பட்டு வாயிலிருந்து வார்த்தைகள் வராமல் பார்த்துக் கொண்டாள் ராகினி. தாய், தந்தையின் வாய்ச் சொல் பிள்ளைகளைத் தாக்கினால் அப்பிள்ளைகள் வாழ்நாள் முழுக்க அதை அனுபவிப்பார்கள் என்று சொல்வார்களல்லவா? அதனால் பெற்ற மனசு துடித்தாலும், அது ராஜாவை சாபமிடவில்லை. மேனகாவிடமே தனது மனக் கவலைகளைக் கொட்டித் தீர்த்தாள் ராகினி.

அன்று ராகினி வைத்தியசாலைக்கு மிகவும் கஷ்டப்பட்டே சென்றாள். அவளுக்கு பிடித்திருந்த நோய் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று வலி மாறாமல் தொடர்ந்துகொண்டே சென்றது.

மேனகாவும் அவளது சகோதரியும்தான் சமையல் முதலான இத்தியாதி வேலைகளை எல்லாம் பகிர்ந்து செய்தார்கள். மற்ற நாட்களில் ராகினி பிள்ளைகள் படிப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்துவிட்டு பம்பரமாகச் சுழன்று, தானே எல்லா வேலைகளையும் முடித்துவிடுவாள். இன்று இப்படி ஒடிந்து போய்ப் படுத்திருக்கிறாள்.

இந்தச் சந்தர்ப்பத்தில்கூட ராஜாவுக்கு மனசு இளகவில்லை. தாயை வந்து பார்த்து, அன்பாகக் கதைத்து ஆறுதல் சொல்லவுமில்லை. ஒரு வாலிப மகனை வைத்திருக்கும் தாய் மனதளவில் எத்தனை தெம்பாக இருப்பாள்? தைரியமாக இருப்பாள்? தனது மகன் எதிர்காலத்தில் தன்னை கண்கலங்காது பார்த்துக்கொள்வான் என்று எவ்வளவு நம்பிக்கைகளை சுமந்துகொண்டிருப்பாள்?
 
00000

யுத்த கால சூழ்நிலையிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உயர் தரம் கற்று முடித்திருந்த மேனகா, யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்துக்கு தெரிவாகியிருந்தாள். அதற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அவளுக்கு. விடுதியில் கொடுக்கப்படும் உணவுகள் பற்றி சொல்லத் தேவையில்லை. வீட்டில் கொஞ்சமாக சாப்பிட்டாலும் மனத் திருப்தியுடன் சாப்பிடலாம். அதுபோல விடுதியில் முடியாதல்லவா? எனவே ராஜா தொழில் விடயமாக எப்போதாவது யாழ் பல்கலைப் பக்கமாக வரும்போது வாய்க்கு ருசியாக ஏதாவது செய்து அனுப்பும்படி மேனகா தொலைபேசியில் அம்மாவிடம் கூறுவாள்.

ராகினி ஆசையாக செய்து கொடுக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ராஜாவின் அசிரத்தையால் அங்கேயே கிடக்கும். வேண்டுமென்றே அவன் அதை வைத்துவிட்டு வருவான். கேட்டால் அவற்றைத் தூக்கிக்கொண்டு வர முடியாது என்பான். ராஜாவின் இவ்வாறான செயற்பாடுகள் மேனகாவுக்கு அதிக கவலையைக் கொடுத்தது.  

மேனகா தங்கியிருந்த பல்கலைக்கழக விடுதியில் கட்டிட திருத்த வேலைகள் நடக்கத் தொடங்கியது. அதனால் மேனகா வேறொரு தங்குமிடம் பார்த்துக்கொண்டு வந்துவிட்டாள். பெரிய வசதிகள் இல்லாவிட்டாலும் மனதுக்கு பிடித்துப் போய்விட்டதால் அங்கேயே தங்கிவிட அவளுக்கு மிகவும் விருப்பமாக இருந்தது.

தனக்குத் தேவையான சில பொருட்களை வீட்டிலிருந்து கொண்டு வந்து வைத்துக்கொள்ள முடிவெடுத்தாள். அத்துடன் வீட்டில் இருக்கும் ஒற்றைக் கட்டிலையும் கொண்டு வந்தால் தனக்கு சவுகரியமாக இருக்கும் என்று அவள் கருதினாள். அம்மம்மா வாங்கியிருந்த அந்தக் கட்டிலை மேனகாவுக்குக் கொடுக்க அம்மம்மா சம்மதித்திருந்தார்.  

மேனகாவுக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே நல்லதொரு தங்குமிடம் கிடைத்ததையிட்டு எல்லோரும் மகிழ்ந்தார்கள். அம்மம்மாவின் பழைய ஒற்றைக் கட்டிலை, எடுத்தால் பிரச்சினை பண்ணுவேன் என்று ராஜா சண்டையிட்டான். இந்த அற்ப விடயத்துக்கு இவன் இப்படி இருக்கிறானே என்று எல்லோருக்கும் அவன் மீது கோபம் ஏற்பட்டது. ஷஒரு ஆண் பிள்ளையாக இருந்துகொண்டு ஒற்றைக் கட்டிலுக்காகச் சண்டை போடுகிறானே| என்று அவர்கள் அவனை மிகவும் கடிந்துகொண்டார்கள். கடந்த மூன்று மாதங்களாக கடுமையான முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த மேனகாவுக்கு அவன் நடந்து கொண்டவிதம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.
 
00000

யுத்தத்துக்குப் பின்னர் மக்களுக்குக் கிடைத்த வரமா அல்லது சாபமா என்று புரியவில்லை, மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழச் சென்றனர். தற்போது மேனகா கனடாவில் வசித்து வருகின்றாள். அவளது சகோதரியோ ஜேர்மனியில் வாழுகின்றாள். ராஜாவும் தற்போது அவுஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்டான்.

ஒற்றைக் கட்டில் அந்தப் பழைய வீட்டில் அநாதையாகக் கிடக்கிறது!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment