11. விதி - (சிறுகதை)
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
இரவு நெடுநேரமாகத் தூங்கவில்லை. நேரத்தைப் பார்த்தான் சலீம். அதிகாலை மூன்று முப்பது. நள்ளிரவு வரை ஆழ்ந்த சிந்தனை அவனை ஆட்கொண்டுவிட்டதால் தலை இலேசாக வலிப்பது போன்றிருந்தது. இந்த நான்கு வருடங்களில் தன் மனைவி சியாமாவைப் பிரிந்து வேலை விடயமாக வெளியூருக்கு வந்தமை இதுதான் முதல் தடவை. சலீம் அவளைப் பிரிந்திருந்ததும் இதுதான் முதல் தடவை.
00000
பள்ளிப் பருவத்திலேயே பலரது கண்களிலும் ஒரு வெள்ளைப் புறாக் குஞ்சாய்ப் படிந்திருந்த நளீமாவை பலரும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளத் துணிந்தது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஆனாலும் வீட்டாரின் வளர்ப்பும், ஒழுக்கமும் அவளை அந்த ஆடவர்களை விட்டும் தூரமாக்கியிருந்தது. நளீமா எவரையும் ஏறெடுத்துப் பார்க்காத காரணத்தாலோ என்னவோ இன்னுமின்னும் அவளை சலீமுக்கு மட்டுமல்லாமல பலருக்கும் பிடித்திருந்தது.
சலீமுக்குத் திருமணம் செய்து வைக்க அவனது பெற்றோர் தீர்மானித்த அந்தத் தருணத்தில்தான் தூரத்து உறவுக்காரியான நளீமா அவன் மனதில் வீற்றிருப்பதை அவனே உணர்ந்துகொண்டான். கள்ளமில்லாத அந்தக் காதலை அவன் இதுவரை பார்வையால்க்கூட வெளிக்காட்டியதில்லை ஆனால் அவளது பார்வைகளும், பேச்சுக்களும், நடவடிக்கைகளும் ஏதோ ஒரு வகையில் அவனுக்கு அதை உணர்த்தின. இயற்கையாக ஏற்பட்ட மனக்கிளர்ச்சிக்கு விரும்பியோ விரும்பாமலோ அவன் வலுக்கட்டாயமாக தடை விதிக்க வேண்டிய அவலம் நேர்ந்தது. வீட்டாரின் முடிவுக்குள் தன் வாழ்க்கை அடங்கியிருக்கட்டும் என்ற நிலைப்பாட்டில் சலீம் ஒதுங்கி நின்றான்.
ராத்திரி நேர நினைவுகளின் நெரிசல்கள் எல்லாம் அப்போது அவனுக்கு கண்ணீரை மட்டுமே தந்துகொண்டிருந்தன. வாலிபப் பருவத்தின் சிந்தனைக் காற்று, சுடு மூச்சாக மாறியிருந்தது. வாழ்க்கை தனக்கு தர வேண்டியதைத் தரட்டும் என்று அவன் தன் காதலுக்கு சமாதி கட்டினான். அவன் சமாதி கட்டினாலும் அவனது வீட்டார், "சலீமுக்கு நளீமா பொருத்தமானவளாக இருக்கிறாளே.. அவள் இந்தக் குடும்பத்துக்கு வந்தா எவ்வளவு நல்லம்.." என்றெல்லாம் ஆசை வார்த்தைகளின் மூலம் பூக்களைச் சொரிந்தாலும்.. சலீம் தன் மனதை யாருக்கும் காட்டிக்கொள்ளவில்லை. ஷஇறைவன் நாடினால் நடக்கும்| என்று தனது மனதைத் தேற்றிக்கொண்டாலும்.. 'இறைவன் இதனை நாட வேண்டும்' என்றே அவன் சதா மனதுக்குள் பிரார்த்தித்தான்.
தனது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகவும் தனது தங்கைகள் இருவரையும் தானே உழைத்துக் கரைசேர்க்க வேண்டும் என்ற நிலையிலும் அவன் அதைத் தன் வீட்டாரிடம் கூறாமல் இருந்துவிட்டான். தன் தந்தையின் மூத்த சகோதரரின் தலையீட்டிலேயே வீடு முழுமையாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த வீட்டைப் பொறுத்தவரை அவர்களுக்கு எல்லாமே பெரியப்பாதான். பெரியப்பா வெளிநாட்டில் இருக்கும் காலப் பகுதியில் எல்லாம் அன்பே உருவான அவர், அவருடைய தாய்க்கும், அவருடைய சகோதர, சகோதரிகளுக்கும் தன்னாலான எல்லா உதவிகளையும் செய்து குடும்பத்தைக் கரை சேர்த்துக்கொண்டிருந்தார். எனவே அவரின் முடிவின் படி சலீம் உயர் கற்கை நெறிகளை மேற்கொள்ள அயல் நகருக்குச் சென்றான்.
தன் தந்தையின் உடல் நலன் அவனுக்கு மனதில் சற்றுக் குழப்பத்தை விளைவித்தாலும், தந்தையின் கண்டிப்பான பாசத்தால் அவன் படிப்பில் கரையேறிக்கொண்டிருந்தான். அவன் தன் எதிர்காலத்துக்கான விதைகளை படிப்பின் மூலம் தூவிக்கொண்டிருந்தான்.
கிராமத்தின் கிணற்று நீரில் குளித்த சுகம் நகரத்தின் குளோரின் நீரில் கிடைக்குமா?
இரண்டு வருடங்களாக எந்தவிதமான சங்கடங்களும் இன்றி காலம் கழிந்தது என்னவோ உண்மை. அந்தக் காலத்துக்குள் சலீம் தன் முன்னேற்றத்தில் அக்கறைக்காட்டி எழுந்திருந்ததும் உண்மை. ஆனால் அவன் ஒருமுறை விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்த சமயம் எதிர்பாராத தருணமொன்றில் தன் பெரியம்மா நளீமாவின் திருமண அழைப்பு அட்டையை நீட்டி, சலீமின் முகம் பார்க்க இயலாமல் தவித்துக்கொண்டிருந்தாள். வாங்கிப் படித்த சலீமுக்கு நெஞ்சத் துடிப்பு திடீரென்று நின்றது போலவும், சில நிமிடங்களில் மிக வேகமாக அடித்துக்கொண்டது போலவும் இருந்தது.
என்னதான் விதி என்று சமாளிக்கப் பார்த்தாலும் நம்பிக்கை என்றொரு விடயம் இருக்கிறதல்லவா? அந்த நம்பிக்கை தவிடுபொடியாகிப் போனபோது சலீமின் இதயமும் சுக்குநூறாகிப் போனது.
நளீமா ஏன் என்னைப் பார்த்தாள்? அவள் ஏன் என் மனதில் குடியேறினாள்? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கான விடைகள் எதுவும் சலீமுக்குத் தெரியவில்லை. அவன் அறிந்ததெல்லாம் இனிமேல் எதற்காகவும் கவலைப்படாமல் வாழ்ந்து தன் குடும்பத்தின் சந்தோசத்தைப் பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான்.
சலீம் தனது இரண்டு தங்கைகளின்; திருமணத்தை தனது சொந்தச் செலவிலேயே செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழில் தேடிச் சென்றான். தனது எண்ணம் போலவே 08 வருடங்கள் குடும்பத்தினருக்காக கடுமையாக கஷ்டப்பட்டு உழைத்து தனது தங்கைகள் இருவரையும் ஆத்ம திருப்தியோடு கரையேற்றிவிட்டான்.
00000
நாட்கள் தன்பாட்டில் நகர்ந்துகொண்டிருந்தன. சலீமும் இப்போதுகளில் நகரத்தில் தொழில் செய்து வந்தான். இடைக்கிடையில் விடுமுறை நாட்களிலேயே ஊருக்கு வருவான். வயதான தந்தையின் உடல்நிலையும் மோசமாகிக் கொண்டிருந்தது. 'சலீம் கோல்' என்று அடுத்த வீட்டார் அழைத்துவிட்டால் போதும்.. சலீமுக்கு ஆடைகள் எல்லாம் வியர்வையால் நனைந்துவிடும்.
முன்பெல்லாம் இப்போது போல எல்லோரிடமும் கைத்தொலைபேசிகள் இருக்கவில்லை. எங்காவது ஒரு வீட்டில் ஒரு தொலைபேசி காணப்படும். அந்த ஊருக்கே அதுதான் தொலைபேசியாக இருக்கும். ஏதாவது முக்கிய விடயத்துக்காக, அவசர அழைப்புகளுக்காக மாத்திரமே தொலைபேசி உரையாடல் நடக்கும். எனவே இந்த அவஸ்தைக்கு சலீமும் ஆளாகியிருந்தான். தொலைபேசி அழைப்பு வந்தால் அவன் மிகவும் பயந்து போவான்.
இறைவனின் நாட்டப்படி எல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்த சமயத்தில்தான் சலீமை ஊருக்கு வரும்படி அவசர அழைப்பு வந்தது. எனவே அவன் உடனடியாக ஊருக்குப் புறப்பட்டான். நோயோடு போராடிக்கொண்டிருந்த தனது தந்தையின் அருகிலேயே இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டான். அவருக்குத் தேவையான சகல விடயங்களிலும் சலீமின் பங்கே அதிகமிருந்தது.
எல்லோரும் கூறிய ஆலோசனையின் காரணமாக தந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றான் சலீம். உறவினர்கள் வைத்தியசாலைக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள்.
'தாயின் காலடியின் கீழ் சுவர்க்கம் உண்டு' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அதற்கிணங்க தனது தாயின் அன்பான வேண்டுகோளின் பேரில் அவரது கல்பைக் குளிரச் செய்யும் முகமாக, சலீம் தனது தந்தையின் அருகிலேயே இருந்து அவரை நன்கு கவனித்துக்கொண்டான். மகன் சலீம் இருக்கும் தைரியத்தில் அவனது தாயும் நிம்மதியாக இருந்தார். இருந்தாலும் சலீமின் தாயின் மனதுக்குள் ஒரு கவலை இருந்தது. சலீமின் திருமண விடயம் பற்றிய கவலையே அது. எனவே அந்தத் தாய் மனம் சதாவும் சலீமின் திருமண விடயம் பற்றியே பிரார்த்தித்தது.
ஒருநாள் சலீமின் தாயாரின் தூரத்து உறவினரான நானாவும் அவரது மனைவியும் மகளும்; வைத்தியசாலைக்கு வந்து சலீமின் தந்தையின் சுக நலம் விசாரித்தார்கள்.
தன் மகன்தான் தனக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக சலீமின் தந்தையார் பெருமையோடு அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதைக் கேட்டு சலீமின் தாயாரின் தூரத்து உறவினரான நானாவின் மனைவி சலீமை அன்போடு நோக்கினார். அப்போது அவர்களது மகள் சியாமாவும் சலீமைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவனும் பதிலுக்குப் புன்னகைத்தான்.
சில நாட்களின் பின்னர் சலீமின் தந்தையாரின் உடல்நிலை தேறிய பின்னர் வைத்தியாலையிலிருந்து அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
சியாமா, சலீமைப் பார்க்கும் எண்ணத்தில்தான் அன்றைய தினம் வைத்தியசாலைக்கு வந்திருந்தாள் என்பதை சலீமோ அவனின் தந்தையாரோ அறிந்திருக்கவில்லை. ஆனால் சியாமா, சலீமை விரும்புகின்ற விடயத்தைப் பின்னர் அறிந்துகொண்ட சலீமின் பெற்றார் அவர்களது பூரண சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.
பின்னொரு தினம் சலீமின் வீட்டார் சியாமாவின் வீட்டுக்குச் சென்றார்கள். சலீமின் பெற்றார்களும் சியாமாவின் பெற்றார்களும் இன்னும் சிலரும் சந்தோசமாக ஏதேதோ கதைத்துக்கொண்டிருந்த வேளையில் சலீமை, சியாமா விரும்புகின்றாள் என்ற இனிப்பான விடயத்தையும் சியாமாவின் பெற்றோர் கூறினார்கள். திடீரென்று அவ்வாறு கூறியதும் சலீமின் விழிகள் படபடத்தன. சியாமா அவனை புன்சிரிப்புடன் நோக்கினாள்.
அவ்விடம் வந்திருந்த சலீமின் நெருங்கிய நண்பன் பாரிஸ், "ஒரு நளீமா இல்லாட்டி, ஒரு சியாமா.. இவ்வளவுதான் வாழ்க்கை மச்சான்.." என்று சலீமின் காதில் இரகசியம் சொன்னான். யதார்த்தத்தை புரிந்தவனாக சலீம் தலையாட்டினான்!
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment