Tuesday, June 24, 2014

01. பிஞ்சு மனம் - (சிறுகதை)

01. பிஞ்சு மனம் (சிறுகதை)



வெலிகம ரிம்ஸா முஹம்மத்


"அம்மா அண்ணா அடிக்கிறான்மா.." என்று அழுதபடியே சுரேன் கத்தவும் பதறியபடி முன் ஹோலுக்கு விரைந்து வந்தாள் பவித்ரா. அங்கு கவின், சுரேனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். அருகில் விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் சிதறி இருந்தன. விளையாட்டுக் காரின் சில்லுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்தன.

பவித்ராவுக்கு விளங்கிவிட்டது. அவர்கள் இருவருக்கும் இந்த விளையாட்டுக் கார்தான் பிரச்சினை. இருவர் முதுகிலும் சுள்ளென்று இரண்டு அடிகள் கொடுத்தாள். பிறகே பிள்ளைகள் சண்டையை மறந்து மூலையில் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தனர்.

வழமையாகவே மூத்தவனான கவினின் கையில் கொடுத்து எந்தப் பொருளையும் தம்பி சுரேனுக்கும் பகிர்ந்து கொடுக்குமாறு பவித்ரா கூறுவாள். கவின் பொறுப்பாக இருந்து சின்னவனையும் தன்னோடு இணைத்துக்கொண்டு இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே பவித்ரா விரும்பினாள்.

அதனாலேயே இருவரையும் அழைத்து கவினின் கையில் பிஸ்கட் பக்கற்றை நீட்டினாள். தம்பிக்கும் கொடுத்து பகிர்ந்து சாப்பிடுமாறு இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். அவர்களுக்குள் எப்போதாவது இப்படிச் சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் அது உடனே தீர்ந்துவிடும். அவள் அவர்களை அப்படித்தான் பழக்கியிருந்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் பவித்ராவின் கணவன் அந்த விளையாட்டுக் காரைக் கொண்டுவந்து பிள்ளைகளுக்குக் கொடுத்திருந்தார். அப்பொழுதே பவித்ரா சொன்னாள்.

"என்னங்க.. ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கீங்க..? இவனுகள் ரெண்டு பேர பத்தியும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்தானே.."

"ஆமா பவி. அதுக்காக எல்லாத்துலயும் ரெண்டு ரெண்டா வாங்க முடியுமா..?" என்று சிரித்தபடியே கணவன் கூறிவிட்டார்.

ஆம். அதுவும் சரிதான். இருவருக்கும் உடை, சைக்கிள்;, பேனை, புத்தகம் ஒரே வடிவில் இருவேறு நிறத்தில் பீங்கான்கள், சப்பாத்துக்கள், ஸ்கூல் பேக் என்று வாங்க வேண்டும். தற்செயலாக உண்மையில் யாராவது ஒருவனின் பென்சில் காணாமல் போனால்கூட மற்றவனுக்கும் சேர்த்தே வாங்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் பவித்ராவுக்கு நிம்மதியாக இருக்க முடியாது.

"அம்மா தம்பிக்கிட்ட மட்டும் ரெண்டு பென்சில் இருக்கு.."

"நீதான் காணாமப் போட்டுட்டியே.."

"ஆனாலும் எனக்கு வேணும்மா.." என்றெல்லாம் அழும்போது ஆரம்பத்தில் அவள் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் காலப்போக்கில் அது அவர்கள் இருவருக்கிடையிலும் 'ஈகோ' பிரச்சினையாக வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறை காட்டினாள். அதன் பலன்தான் சுரேனுக்கும், கவினுக்கும் முதுகில் கிடைத்த அடிகள்.

அடித்ததையிட்டு அவள் சற்றும் வருத்தப்படவில்லை. ஏனெனில் அடிக்காமல் குழந்தைகளை அப்படியே விட்டால்தான் இருவரும் பெரியவர்களானதும் எல்லாவற்றுக்கும் இப்படித்தான் பொறாமைப்படுவார்கள், சண்டைபோடுவார்கள், பொறுப்பே இல்லாமல் நடந்துகொள்வார்கள் என்று தெளிவாக விளங்கி வைத்திருந்தாள். பவித்ரா இவ்வாறெல்லாம் யோசிப்பதற்கும் சில காரணங்கள் இருந்தன. அவள் தனது கடந்த காலத்தை மீட்டிப் பார்த்தாள்.

00000

அப்போது பவித்ராவுக்கு ஏழு வயதிருக்கும். அவளுக்கு அடுத்ததாக இரண்டு தங்கைகள். ஒருத்தி புவனா. மற்றவள் ப்ரியா. முறையே ஆறு, நான்கு வயதைக் கொண்டவர்கள். பவித்ராவை விட அவர்கள் இருவரும் இளநிறமானவர்களும்கூட.

பவித்ரா அப்பா போல என்றும் மற்ற இருவரும் அம்மா போல என்றும் எல்லோரும் சொல்லும்போது பவித்ராவுக்கு எதுவும் புரியவில்லை. அவள் எதையும் காதில் வாங்காமல் விளையாடிக்கொண்டே இருப்பாள். பிஞ்சு மனமல்லவா? வெள்ளையாகத்தானே இருக்கும். அந்தப் பிஞ்சு மனங்களில்தானே நஞ்சையும் விதைக்கின்றார்கள் பெரியவர்கள்.

பவித்ராவின் வீட்டுக்கு அன்று மங்கலம் மாமி வந்திருந்தாள். பிள்ளைகள் மூவருக்கும் ஒரே கொண்டாட்டம். மாமி படலையைச் சாத்திவிட்டு வரும்போதே மூவரும் முற்றத்துக்கு விரைந்து ஓடிச் சென்றார்கள். அது மங்கலம் மாமிதான் என்று உறுதியாகத் தெரிந்த பின்பு மீண்டும் வீட்டுக்குள் ஓடி வந்து,

"அம்மா.. அம்மா.. மங்கலம் மாமி வந்திருக்கிறாங்க.." என்று மூத்தவள் பவித்ரா குரல் எழுப்பினாள்.

"ஓடி வாங்க அம்மா.. அம்மா எங்க போயிட்டாங்க..?" என்றபடி புவனாவும், ப்ரியாவும் துள்ளிக்குதித்தபடி வந்தார்கள்.

பிள்ளைகள் மூவரும் ஒரேயடியாக அழைத்ததால் சமையலறையிலிருந்து மிகவும் அவசரமாக வந்து பார்த்தாள் தாய் பங்கஜம்.

அம்மாவும், மங்கலம் மாமியும் பேசிக் கொண்டிருக்கும் போது மூன்று பிள்ளைகளும் விளையாடப் போய்விட்டார்கள். மங்கலம் மாமி பகல் உணவு உண்டுவிட்டு கொஞ்ச நேரம் களைப்பாறியபின் போவதற்குத் தயாராகினார்.

பங்கஜம் பிள்ளைகள் மூவரையும் அழைத்து மாமிக்கு டாட்டா சொல்லுமாறு கூறினாள். அப்போது மங்கலம் மாமி, தான் அவர்களுக்காகக் கொண்டு வந்திருந்த பொதியை புவனாவின் கையில் கொடுத்தாள். மூத்தவள் பார்த்துக்கொண்டிருக்க புவனாவிடம் மங்கலம் மாமி கொடுக்கிறாள் என்றோ, நான் இருக்கும்போது தங்கச்சிக்கு கொடுக்கிறாவே என்றோ யாருக்கும் தோன்றவில்லை. மாமி போன பிறகு பொதியைப் பிரித்துப் பார்த்தார்கள். அதில் பழங்கள், டொபிகள் காணப்பட்டன. புவனா தனக்கு நிறையவே எடுத்துக்கொண்டாள். ப்ரியா அழுததால்,

"தங்கச்சி சின்னப் பிள்ள தானே. தங்கச்சிக்கு இன்னும் ரெண்டு டொபி கொடும்மா.." என்று பங்கஜம், புவனாவிடம் சொன்னாள். பவித்ராவுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. அது என்னவென்று அவளுக்கு அப்போது புரியவில்லை.

இப்படியே கொஞ்ச நாள் கழிந்தது. பங்கஜம் ஒருநாள் டவுனிலில் உள்ள தனது கணவனின் கடைக்கு பிள்ளைகள் மூவரையும் கூட்டிகொண்டு போயிருந்தாள். அப்போது கடைக்கு வந்திருந்த சிலரும்,

"மூவரும் உங்கள் குழந்தைகளா..?" என்று கேட்டதற்கு ஆம் என்றார் பவித்ராவின் அப்பா சுந்தரம்.

"மூத்தவள் உங்கள மாதிரி இருக்கா அண்ணே. இவங்க ரெண்டுபேரும் உங்க மனைவி மாதிரி இருக்காங்க.." என்றார்கள்.

பங்கஜம் பவித்ராவைப் பார்த்தாள். பவித்ரா தந்தையைப் பார்த்தாள். பவித்ராவின் சின்ன இதயத்துக்குள் சிக்கல் தோன்றியது.

நான் தந்தை மாதிரி என்கிறார்களே.. நான் அம்மா மாதிரி இல்லையா? நான் அம்மாவின் பிள்ளை இல்லையா? அப்பாவின் பிள்ளை மட்டும்தானா? என்றுதான் அப்போது அவளுக்கு யோசிக்கத் தெரிந்தது. காலப்போக்கில்தான், தன் தந்தையின் கருமைக்கே தன்னை ஒப்பிட்டுக் கூறுகின்றார்கள் என்பதை பவித்ரா ஓரளவு ஊகித்துக்கொண்டாள். பவித்ரா சொல்லுமளவுக்கு கருப்பு நிறம் இல்லை. மாநிறத்தைவிட சற்று நிறம் குறைந்தவள். ஆனால் தங்கைகளிருவரின் கையுடன் அவளது கையை வைத்துப் பார்த்ததில் அவளைவிட தங்கைகள் இளநிறமானவர்கள் என்பது பவித்ராவுக்கும் புரிந்தது.

கொஞ்ச நாட்கள் கடந்தன. ஒருநாள் ஊரிலிருந்து வந்த சித்தி முறை கொண்ட பெண்ணொருத்தி, பங்கஜத்தின் தங்கை கொடுத்தனுப்பிய பையைப் பிரித்து அதில் காணப்பட்ட தைத்த ஆடைகளை பவித்ரா பார்த்துக்கொண்டிருக்கும்போதே இளையவர்களிருவருக்கும் கொடுத்தாள். பவித்ராவுக்கு பச்சை நிறம்தான் பிடிக்கும் என்றாலும் அவர்கள் இருவரும் எடுத்தது போக விருப்பமில்லாத சிவப்பு நிற ஆடைதான் பவித்ராவுக்கு மிஞ்சியது.

எல்லோரும் தன்னைப் புறக்கணிக்கின்றார்கள் என்று பவித்ராவுக்கு நன்றாக விளங்கிவிட்டது. தான் தங்கைகளைவிட கறுப்பாக இருக்கிறேன் என்பதால் அவர்களைத்தான் எல்லோரும் விரும்புகின்றார்கள் என்று தெளிவாகப் புரிந்துகொண்டாள். புவனாவுக்கும், ப்ரியாவுக்கும்தான் எல்லாப் பொருட்களும் கிடைக்கும். தனக்கு கொடுக்குமாறு சொல்லி அனுப்பும் பொருட்கள்கூட ஓரவஞ்சனையால் தனது தங்கைகளுக்கே கொடுக்கப்படும் என்று அவளுக்கு நன்றாக விளங்கிவிட்டது.

அப்படியென்றால் தனக்கு கிடைக்காதது அவர்களுக்கும் கிடைக்கக்கூடாது என்ற வைராக்கியம் அவளின்; சிறிய மனதுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுவிட்டது. அவள் ஈகோ பிரச்சினைகளுக்கு ஆளானாள். தான் நினைப்பது சரியா தவறா என்றுகூட தெரியாத அவளது பிஞ்சு மனசுக்குள் இத்தனைப் பூகம்பங்கள் வெடித்துக்கொண்டிருந்தன. தருணம் பார்த்துக் காத்துக் கிடந்தாள் பவித்ரா.

சொல்லி வைத்தாற்போல ஒருநாள் அவளது சித்தப்பா கொழும்பிலிருந்து வந்திருந்தார். முன்பெல்லாம் வீட்டுக்கு யாராவது வந்தால் ஓடிவந்து அம்மாவிடம் சொல்லும் மகிழ்ச்சி இப்போது பவித்ராவுக்கு முற்றிலும் இல்லாமல் போயிருந்தது. யாராவது வருகின்றார்கள் என்றாலே அவளுக்கு எரிச்சலாக இருந்தது. யார் கண்ணிலும் படாமல் எங்கேயாவது ஓடிவிடலாம் போல் தோன்றியது. சிரித்துப் பேசுவது மாறி, எப்போதும் முகத்தை உம்மென்று வைத்துக்கொள்வதே அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது.

எல்லோரும் செய்த, செய்கின்ற தவறை சித்தப்பாவும் சரியாகச் செய்தார். கொழும்பிலிருந்து கொண்டு வந்த கைக் கடிகாரத்தை புவனாவுக்குக் கொடுத்தார். அவள் அதைக் கட்டிக்கொண்டு சிட்டாக வலம் வந்தாள். நேரம் பார்க்கத் தெரிந்த பவித்ராவுக்குக் கொடுக்காமல், எதுவும் தெரியாத புவனாவுக்கு கொடுத்த அவமானம் பவித்ராவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. நெஞ்சு விம்மித் துடித்தது. மாலையில் சித்தப்பா செல்லும்போதுகூட அவருக்கு பக்கத்தில் வந்து டாட்டா காட்ட அவள் விரும்பவில்லை.

மாலை மங்கி இருள் கவ்வத் தொடங்கியது. கை கால் அலம்புவதற்காக கடிகாரத்தைக் கழற்றி வைத்தாள் புவனா. கடிகாரத்தை மறந்துவிட்டு புவனா அப்பால் சென்ற பிறகு பவித்ரா கடிகாரத்தை எடுத்துக்கொண்டு வந்து கொல்லைப் பக்கம் சென்றாள். ஒரு கல்லில் அந்தக் கடிகாரத்தை வைத்து இன்னொரு கல்லால் அடித்து உடைத்துச் சிதறடித்தாள்.

துண்டு துகள்களான அந்த நீல நிறக் கடிகாரத்தை அள்ளியெடுத்து தன் பிஞ்சுக் கரங்களால் ஒரு குழியைத் தோண்டி அதில் புதைத்துவிட்டு மண்ணைப்போட்டு மூடினாள். உதட்டோரத்தில் ஏதோ சாதித்துவிட்ட வெற்றிச் சிரிப்பு அவளுக்குள் இழையோடியது. மனசுக்குள் ஒரு குரூர திருப்தி ஏற்பட்டது. அதற்குப் பிறகும் இவ்வாறு எத்தனையோ நிகழ்வுகள் நடந்துவிட்டன.

காலங்கள் கடந்தன. பருவங்கள் மலர்ந்தன. தான் செய்வது பிழை என்றும் தான் இனிமேல் யாருக்கும் மனசளவிலும் துன்பம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணமும் பவித்ராவின் மனதில் பதிந்துவிட்டது.
 
00000

"அம்மா தம்பிக்கு பசிக்குதாம். சாப்பாடு தாங்க.." கவின் வந்து கேட்டான்.

சண்டைகளை மறந்து இப்போது தம்பிக்காக உணவு கேட்டு வந்திருக்கிறான் கவின். அப்படியே அவனை அள்ளியெடுத்து ஆரத்தழுவி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் பவித்ரா. அவன் அவளைக் கட்டிக்கொண்டு மீண்டும் சொன்னான்.

"அம்மா சீக்கரம் தாங்கம்மா. இன்னக்கி நான் தம்பிக்கு ஊட்டி விடுறன்.."!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment