Saturday, October 3, 2026

04. காத்திருந்த காதல் - (சிறுகதை)

 04. காத்திருந்த காதல் - (சிறுகதை) 


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


"சிந்து.. என்ன யோசிச்சிக்கிட்டு இருக்கே.. ரெடியாகலயா?" என்று கேட்டான் பிரவீன்.

"ம்... நீங்க போன வருஷம் கோயில்ல வச்சி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிச்ச சம்பவத்த நினைச்சிட்டு இருந்தேன்.." என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் சிந்துஜா.

"நமக்குத்தான் கல்யாணம் ஆகிருச்சே.. இன்னும் எத்தன தடவதான் அதை நெனப்பியோ..." என்று அவளைப் பிரவீன் சீண்டினான்.

"ஏன் நீங்க நெனக்க மாட்டிங்களா?" என்று பொய்யாக  கோபப்பட்டு அவன் காதைத் திருகினாள்.

"ஓகே.. ஓகே.. என் காதை விடும்மா வலிக்குது. உன்ன நெனைக்காம நா வேற யார நெனைப்பேன்.." என்றான் பிரவீன்.

சிந்துஜா அவனைப் பற்றியும் அவன் தந்த காதல் பற்றியும் எண்ணியுருகினாள்.

00000

சிந்து உயர்தர வகுப்பில் கலைப் பிரிவில் கற்றுக் கொண்டிருந்தாள். அவள் கற்கும் அந்தப் பாடசாலைக்கு புதிதாக மாற்றலாகி வந்திருந்தான் பிரவீன்.
 
மாணவத் தலைவியாக இருந்த சிந்து, அன்றைய தினம் சின்ன வகுப்பு மாணவர்களின் சுத்தம் பற்றி சோதித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் வந்துதான் உயர்தர வணிக வகுப்பு எங்கே இருக்கின்றது என்று கேட்டான் பிரவீன். அவள் வகுப்பைக் காட்டிவிட்டு தன் வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

அந்த முதல் பார்வை.. அவளது கண்கள்.. இரட்டை ஜடை.. இவை எதுவும் அன்றைய தினம் அவனை ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் மனமெனும் வானத்தில் அவள் நினைவுகள் நட்சத்திரங்களாக மின்னின.

அவன் வணிகத் துறையிலும், அவள் கலைத் துறையிலும் கற்றுக்கொண்டிருந்ததால் அவளுடன் பேசுவதற்கு எந்தச் சந்தர்ப்பமும் பிரவீனுக்கு ஏற்படவில்லை. அவன் தருணம் பார்த்துக் காத்திருந்தான்.
 
அப்போதுதான் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தனியார் மீட்டல் வகுப்புக்கள் ஆரம்பமாகின. தனியார் வகுப்பிற்குச் சென்றால் சிந்துவிடம் பேசலாம் என்று அவன் கற்பனைகளை வளர்த்தான்.

குறித்த தினம் தனியார் வகுப்புக்கு அவர்கள்; சென்றார்கள். ஒரு பிரிவில் அவளும், மறு பிரிவில் அவனும் அமர்ந்திருந்தாலும் பிரவீனின் பார்வை தன்மீது அடிக்கடி படர்வதை சிந்துஜா உணர்ந்து கொண்டாள். அவளுக்கு உடம்;புக்குள்ளும் மனசுக்குள்ளும் ஏதேதோ செய்தது. பிரவீனின் பார்வைக்குள் ஒரு சாந்தமும், வசீகரமும், கருணையும் இருந்ததை அவள் கவனிக்கத் தவறவில்லை.

எந்தவித பேச்சோ சிரிப்போ இன்றி பார்வைகளை மாத்திரம் பரிமாறிக்கொண்டு அவர்கள் மாலையில் வீடு சென்றார்கள். அன்று சிந்துவின் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. பிரவீன் முதல் நாள் பாடசாலைக்கு வந்து தன்னிடம் வணிக வகுப்பு பற்றி கேட்டமை நினைவுக்கு வந்தது. அத்தனைப் பேர் இருக்க அவளிடம் அவன் வந்து கேட்டதை இப்போது நினைக்கையில் அவள் உதட்டோரத்தில் புன்னகை தவழ்ந்தது.

ஒருநாள் பாடசாலை சிரமதானத்தின்போது அவளும் அவனும் அருகருகே இருந்து மாணவர்களை வழிகாட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருவருக்கும் ஆனந்த பரபரப்பு. மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றி இருவரும் கூறிவிட்டு தமது பங்களிப்பை செய்வதற்காக நகர்ந்து செல்ல முற்பட்டனர்.

"சிந்து.. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கள்.. ப்ளீஸ்.."

எல்லோரும் அவளை சிந்துஜா என்றுதான் அழைப்பார்கள். ஆனால் பிரவீன் அப்படி அழைத்தபோது அவளுக்கு இதமாக இருந்தது.

"ஏன்.. என்ன?" என்றாள் எதுவும் அறியாதவள் போல.

"எப்படி சொல்றதென்டு தெரியல்ல. உங்களுக்கு புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறன்.. எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு.."

அவள் ஒன்றும் சொல்லவில்லை. பேசாமல் நகர்ந்து சென்றாள்.

பிரவீன் அதற்குப் பிறகு அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவள் மனதிலும் பிரவீன் இருப்பதை அவள் கண்கள் அவனுக்குச் சொல்லிவிடுவதால் அவர்கள் இருவரும் சிறு புன்னகை மூலம் தமது மனதை வெளிப்படுத்திக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினார்கள். உயர்தரப் பரீட்சை முடிந்து பெறுபேறுகளும் வெளியாகியிருந்தன. பிரவீனும் சிந்துவும் நல்ல முறையில் சித்தி பெற்றிருந்தனர். பிரவீன் சிந்துவைத் தேடி வந்தான்.

"எனது வாழ்த்துக்கள் சிந்து.. நல்லபடியா ரிஸல்ட் வந்திருக்கு.."

"தேங்க்ஸ் பிரவீன். உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.."

"அடுத்து என்ன பிளான்..?"

"கெம்பஸ் கிடைக்கும் என்று நினைக்கிறன்.. அதைப் பாத்திட்டுத்தான்.."

"யெஸ் யெஸ் உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும். ஓகே பை.." என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான். அப்போது சிந்துவுக்குள் இனம்புரியாத வலி இதயத்தில் ஏற்பட்டது. அதற்கான காரணத்தை அவளால் உடனடியாக விளங்கிக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் அவள் அவனைத் தனதாக்க விரும்புவதை மனது அவளுக்கு எடுத்துச் சொன்ன போது அவள் ஆச்சரியமடைந்தாள்.

இதற்குப் பிறகு அவனை எங்கு காண்பது? பாடசாலையும் இல்லை.. தனியார் வகுப்பும் இல்லை.. இனி அவனைக் காண முடியுமா? என்று அவள் சிந்தித்தாள்.

மாதங்கள் சில கழிந்தன. சிந்து அன்று கோயிலுக்குச் சென்றிருந்தாள். தற்செயலாக அங்கு பிரவீனும் வந்திருந்தான். இருவரும் சந்தித்துக்கொண்ட பொழுது அவர்கள் இருவருக்குள்ளும் எழுந்த அந்த சந்தோசமான உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தார்கள். சிந்துவுக்கு கண்ணில் நீர் துளிர்த்தது. இனி கிடைக்கவே கிடைக்காது என்று எண்ணிய ஒரு பொருள் எதிர்பாராத நேரத்தில் கிடைத்தால் யாருக்குத்தான் சந்தோசமிருக்காது? அந்த மனநிலை சிந்துவுக்குள்ளும் பிரவீனுக்குள்ளும் அலையாய் அடித்துக்கொண்டிருந்தது.

"சிந்து நான் உங்கள எதிர்பார்க்கவே இல்ல.. எப்படி இருக்கிறீங்க..?"

"நீங்க இல்லாம நான் எப்படி நல்லா இருக்க முடியும் பிரவீன்?" என்று தன்னையறியாமலே சிந்து சொன்னபோது அவன் அவளை ஆச்சரியமாக நோக்கினான்.

"ஐ அம் வெரி லக்கி.."

"ம்.. இவ்வளவு நாள் எங்க போனீங்க.. என்னப் பார்க்கனும்னு தோணவே இல்லயா?"

"எப்பயும் உன்ன மட்டும் பாத்துக்கிட்டு இருக்கணும் என்று தோணும் சிந்து.. ஆனா அதுக்கு முதல்ல எனக்குனு சில கடமைகள் இருக்கு. என்ன நம்பி வாழுற என் குடும்பம்.. என் ரெண்டு அக்கா.. அம்மா.. அப்பா.. இதெல்லாம் முக்கியம். எனக்காக ஐந்து வருஷம் காத்திருப்பியா? நீ என்னை நம்பு. நான் கலியாணம் கட்டினால் உன்னத்தான் கட்டுவன் சிந்து.."

"கண்டிப்பா! உங்க குடும்பத்துல உங்களுக்கு என்று  இருக்கிற பொறுப்பயெல்லாம் நீங்கள் நிறைவேத்துங்க. நான் உங்களுக்காக காத்திருப்பேன்.."

மென்மையாக பூத்த இந்த காதல் பூவை காலம் முழுவதும் வைத்துப் பராமரிக்க இருவரும் எண்ணினார்கள். பிரவீன் திடீரென்று வெளிநாட்டுக்குப் பயணமானான். அவன் வந்து தன்னை மணந்துகொள்வான் என்ற நம்பிக்கையில் அவள் வேறு எதுவும் யோசிக்காமல் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததும் போய்விட்டாள். இதற்கிடையில் சிந்துவின் பெற்றோர் அவளுக்கு வேறு வரன் பார்க்கத் தொடங்கினர். ஆனால் அதை சிந்து தவிர்த்துக்கொண்டே வந்தாள்.

பிரவீனிடமிருந்து வரும் கடிதங்கள் மாத்திரமே அவளுக்கு நிம்மதியைத் தருவனவாய் இருந்தன. பல்கலைக்கழகப் படிப்பு முடியும் வரை பொறுத்திருப்போம் என்று எண்ணிய அவளது பெற்றோர் படிப்பு முடிந்ததும் அவளிடம் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினர். ஆனால் அவளது மனதில் பூத்த காதல் இன்றும் பசுமையாக இருப்பதால் அதை தீ கொண்டு எரித்துப்போட அவள் நினைக்கவேயில்லை.

ஒரு கட்டத்தில் பெற்றோருக்கும் அவளுக்குமிடையில் வாக்குவாதம்; நடந்தது. அவள் ஏன் திருமணம் முடிக்க விரும்புகிறாள் இல்லை என்று பெற்றோருக்கு மிகவும் கவலையாக இருந்தது. பக்குவமாக விசாரித்துப் பார்த்ததில் இறுதியில் அவள் பிரவீனைக் காதலிப்பதாக ஒப்புக்கொண்டாள். மற்ற பெற்றோர்களைப் போல திட்டித் தீர்க்காமல் "இத்தனை வருடம் கழிந்தது போதும். இனி மூன்று மாதங்களுக்குள் நல்ல முடிவை எடுத்தாகணும்" என்று அன்புக் கட்டளை பிறப்பித்தார்கள்.

அந்தளவில் சிந்து மிகவும் மகிழ்ந்து போனாள். பிரவீன் சொன்னதைப் போல ஐந்து வருடங்கள் அவனுக்காக காத்திருந்தாயிற்று. இனி அவன் வந்து தன்னை மணமுடித்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று எண்ணினாள்.

மாதங்கள் இரண்டு கழிய, அவளது பிறந்த தினம் வந்தது. அவள் காலையில் எழுந்து குளித்து கோயிலுக்குச் சென்றாள். பிரவீனை எண்ணி உருகியபடி பிரார்த்தித்துவிட்டு கண் திறக்கையில்,
 
"ஹேப்பி பேர்த்டே கண்மணி" என்றவாறு பிரவீன் அங்கே நின்றிருந்தான்!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment