Saturday, October 3, 2026

05. இறையச்சம் - (சிறுகதை)

05. இறையச்சம் - (சிறுகதை) 


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


திடுக்கிட்டு கண்விழித்த ஆயிஷாவுக்கு ஒரு நிமிடம் கலக்கமாக இருந்தது. இன்று என்னவாயிற்று அவளுக்கு? இரவில் எத்தனை மணிக்குத் தூங்கினாலும், அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அவள் விழித்துக்கொள்வாள். எழுந்து வுழுச் செய்து தஹஜ்ஜத் தொழுதுவிட்டு, குர்ஆன் ஓதுவாள். பிறகு திக்ரில் ஈடுபட்டு சுபஹூக்கு ஷபாங்கு| சொல்லும் வரை அவள் அப்படியேதான் இருப்பாள். இன்று சுபஹுக்கு 'அதான்' சொன்னது கூட கேட்காதளவுக்கு தூக்கம் அவளை ஆக்கிரமித்திருந்தது.

00000


சுபஹூக்கு 'பாங்கு' சொன்ன பின்னர் சுபஹூ தொழுது முடித்துவிட்டு குழந்தைகளைத் தொழ எழுப்புவாள். தொடர்ந்து சமையலறைக்குச் சென்று தேநீர் ஊற்றுவதற்கும், காலை உணவு தயாரிப்பதற்கும் அவளுக்கு நேரம் சரியாகிவிடும். பிள்ளைகள் தொழுதுவிட்டு குர்ஆன் ஓதிய பிறகுதான் பாடசாலைக்குச் செல்வதற்காக தயாராகி விடுவார்கள். மூத்தவன் நளீர் அருகிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதுவிட்டு வருவான். அடுத்தவன் நஸார். எழும்ப சுணங்கிவிட்டாலும்; விழித்துவிட்டான் என்றால் அறவே தூங்க மாட்டான். அவனும் நளீருடன் சேர்ந்து பள்ளிவாசலுக்குப் போய்த் தொழுவான். நசீமும், நசீமாவும் இரட்டையர்கள். அவர்களை எழுப்புவதுதான் கொஞ்சம் சிரமம். கணவன் ஹிசாம் வெளிநாட்டுக்குச் செல்லுமுன்பு இந்த வேலைகள் எல்லாம் அவனுடையது. இப்போது எல்லா வேலைகளும் ஆயிஷாவைப் பிடித்துக்கொண்டுள்ளது.

பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிய பின்பு அன்றைய பத்திரிகைகளை வாசித்துவிட்டு, உடைகள் கழுவி, வீடு பெருக்கி, பகல் சாப்பாட்டைச் சமைத்து மத்தியான நேரத்திற்கு கணவரின் தொலைபேசி அழைப்பு வருமுன்பே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அவரது அழைப்புக்காகக் காத்திருப்பாள் ஆயிஷா.

இப்படியான ஒரு வாழ்க்கை வட்டத்துக்குள்தான் சுழன்று கொண்டிருப்பாள் அவள். ஆனால் இன்று சுபஹூத் தொழுகைக்காவது எழும்ப முடியாமல் தூக்கம் போனது அவளைப் பொறுத்தவரை மிகப் பெரிய கவலையாகவே இருந்தது. அன்றைய நாளே பிரச்சினைக்குரிய நாளாக அவள் மனதுக்குள் தோன்றி அவளை மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தியது. தொழுகை விடயத்தில் அவள் மிகவும் பேணுதல் உடையவள். எந்தவொரு முக்கியமான நிகழ்வு என்றாலும் தொழுகைக்குரிய நேரம் வந்துவிட்டால் அவளை தொழும் இடத்தைத்தவிர வேறெங்கும் பார்க்க முடியாது.

அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட இத்தொழுகைதானே மற்றவர்களிலிருந்து ஒரு முஸ்லிமைத் தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டுகிறது. தொழுகை இல்லாதவன் முஸ்லிமாக இருக்க முடியாதல்லவா? தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் மற்ற எல்லா வேலைகளையும் விட்டுச் சென்றுவிட வேண்டும் என்பதுதானே இஸ்லாமிய நெறிமுறை, கட்டளை. அந்த நெறிமுறையை ஆயிஷா தன்னாலான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நிறைவேற்றியே வந்தாள்.

ஆயிஷாவின் இந்தத் தீவிர பக்தி அவளது ஆரம்ப காலம் தொட்டு வந்தது என்றில்லை. அவள் தன்னைத்தானே உணர்ந்து, இஸ்லாமிய வழிமுறையை அறிந்து, அதன் பிரகாரம் தன்னை இவ்வாறு நிலைநிறுத்திக்கொண்டாள். அவளது தந்தை வாரமொருமுறை ஜூம்ஆத் தொழுகைக்கு மாத்திரமே பள்ளிவாசலுக்குச் செல்வதுண்டு. அதனால் அவளுக்கு தொழத்தான் வேண்டும் என்ற கட்டாய உணர்வு சிறுவயதில் விதிக்கப்படவில்லை.

'ஏழு வயதில் தொழும்படி ஏவுங்கள். பத்து வயதாகியும் தொழாவிட்டால் அடித்துத் தொழ வையுங்கள்' என்பது நபிமொழி.

ஏழு வயதில் தொழும்படி பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். எட்டு வயதிலும் சொல்ல வேண்டும். ஒன்பது வயதில் கூட அறிவுரைதான் சொல்ல வேண்டும். சுமார் மூன்று ஆண்டுகள் தொழச் சொல்லிவந்து தொழுகையைப் பழக்கிவிட்டால் எந்தப் பிள்ளையும் தொழும் அல்லவா? அப்படியும் தொழாவிட்டால்தான் பத்து வயதில் தண்டித்துத் தொழ வைக்கும்படி இஸ்லாம் சொல்லியிருக்கின்றது.

ஆனால் ஏழு வயதில், எட்டு வயதில், ஒன்பது வயதில் எல்லாம் தொழச் சொல்லாமல், தொழும் ஆசையை விதைக்காமல் இருந்துவிட்டு பத்து வயதில் தொழும்படி அடித்தால் பிள்ளை தொழுவது போலப் பாசாங்கு செய்யுமே தவிர உண்மையான உள்ளச்சத்துடன் எந்தப் பிள்ளையுமே ஒழுங்காகத் தொழாது. அப்படித்தான் தொழுதாலும் உம்மாவின், வாப்பாவின் அடிக்குப் பயந்து தொழுமே தவிர அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக தொழும் எண்ணம் அந்தப் பிள்ளைக்கு வராது. பெற்றோர் பார்த்திருக்கத் தொழுவதும், பார்க்காதபோது தொழுதுவிட்டதாக பொய்யுரைப்பதும், முறையாகத் தொழுகையை நிறைவேற்றாதிருப்பதும் வாடிக்கையாகிவிடும். தொழாத பாவமும், பொய் சொன்ன பாவமும் சேர்ந்து அந்தப் பிள்ளைக்கு மாத்திரமல்லாது பெற்றோரையும் சென்றடையும்.

முதலில் இஸ்லாம் சொல்லிய பிரகாரம் பிள்ளைக்கு ஏழு வயதில் தொழப் பழக்குவதும், தொழும் விடயத்தில் தொடர்ந்தும் பேணுதலாய் இல்லாவிட்டால் பத்து வயதில் தண்டிப்பதும் ஒரு நல்ல மாற்றத்துக்கு வழிவகுக்கும். அதல்லாமல் ஏவுவதற்கான வயதுகளில் ஏவாமல் விட்டுவிட்டு பதினான்கு வயதில் தொழும்படி தண்டித்தால் என்னவாகும் என்பதற்கு ஆயிஷாவும் நல்ல உதாரணம்தான்.

அவள் தன் பெற்றோருடனும், தம்பியுடனும் வாழ்ந்து வந்தாள். அவளது தங்கை உம்மும்மாவின் வீட்டில் இருந்தாள். அவள் உம்மும்மாவின் வீட்டுக்கு பாடசாலை விடுமுறைகளில் செல்கின்றபோது ஆயிஷா அங்குள்ள தனது நண்பிகளுடன் விளையாடிவிட்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு உம்மும்மாவின் வீட்டுக்கு வருவாள். வந்ததும் வராததுமாக அவளது நண்பிகளின் முன்னிலையில் அவளது உம்மும்மா,

"புள்ள.. நீங்க எல்லாhம் தொழுகிற தானே? இவ ஆயிஷாதான் தொழுகிறல்ல. அல்லாவுக்கும் ரசூலுக்கும் பயப்புடுகிறல்ல" என்று நக்கல் செய்யும்போது ஆயிஷாவுக்கு மிகவும் வெறுப்பாக இருக்கும். தொழவே கூடாது என்ற வக்கிர எண்ணம் நெஞ்சை நிறைக்கும்.

ஆயிஷாவின் தங்கை தொழுவதினால் இன்னும் அவளது மனது வலிக்கும். காரணம் அவளைக் காட்டி எல்லோரும் ஆயிஷாவை கிண்டலடிப்பார்கள். அப்போதெல்லாம் எல்லோர் மீதும் அவளுக்கு கோபம் கோபமாக வரும். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அவளது சுய புத்தி விழித்து, தொழுவதற்காக தொழும் பாய்க்குச் சென்றால் கைகளை எவ்வாறு வைத்து, எப்படிக் குனிந்து தொழ வேண்டும் என்று சரிவர அவளுக்குத் தெரியாது.

சிறுவயதுகளில் தனது தாயார் தொழும்போது தாயாரின் பின்னால் இருந்து அவர் தொழுவதைப் போல ஆயிஷா தொழுது பார்ப்பாள். அக்காலங்களில் அதை ரசித்து அவளை உற்சாகப்படுத்த யாரும் இருக்கவில்லை.  

நியாயமாகப் பார்த்தால் தொழும் ஆசை வந்தால் மற்றவர்கள், அவளைத் தட்டிக் கொடுக்க வேண்டுமல்லவா? ஆகக் குறைந்தது சரி பிழைகளையாவது சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டுமல்லவா? ஆனால் எல்லோரும் குறைகளைத்தானே சொன்னார்கள்.

"தொழத் தெரியாம தொழுகிற.."

"ளுஹருக்கு எத்தின ரக்அத் என்டு தெரீமா..?"

"அத்தஹிய்யாத்தில கைய அப்பிடி வெக்கியல்ல. இதுகூட தெரியாவா..?"

"சுஜுதுக்கும், ரக்அத்துக்கும் வித்தியாசம் தெரியா இவக்கு.."

"மொத்தத்துல ஒழுங்காக தொழவே தெரியா.."

இப்படிப் பல குத்தல் கதைகள் அம்புகளாகி அவள் மனதைக் குத்திக் கிழித்திருக்கின்றன. இவற்றால் ஏற்பட்ட வெறுப்பு, தொழவே கூடாது என்ற எதிர்மறையான எண்ணத்தையே ஆயிஷாவின் குழந்தை மனதில் பதித்து விட்டது.

நாட்கள் தன்பாட்டில் கழிந்தன. ஆயிஷாவுக்கு ஒருநாள் கடும் சுகவீனம் ஏற்பட்டது. பல தடவைகள் மருந்து எடுத்தும் அவளுக்கு கொஞ்சமும் வேதனை குறையவில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு, தான் உயிரோடு இருக்கப் போகிறேனோ என்ற மரண பயம் ஆயிஷாவைப் பீடித்துக்கொண்டது. தொழாமல் இருந்த காலங்களை எண்ணி அவள் மிகவும் அச்சத்துடன் இருந்தாள்.

அதற்கு ஏற்றாற்போல அவளது வீட்டுக்கு எதிர்வீட்டில் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் குழாய் நீர் சத்தம் கேட்கும். அவ்வீட்டிலுள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக வுழுச் செய்துகொண்டு தொழுவதற்காகத் தயாராகுவார்கள். சல சல என்ற அந்தக் குழாய் நீர் ஓசை ஆயிஷாவின் மனதில் கவலை என்ற அலையோசையை சதாவும் எழுப்பிக் கொண்டிருந்தது.

தன்னால் மட்டும் ஏன் தொழ முடியாமல் இருக்கின்றது? தனக்கு மாத்திரம் ஏன் யாருடைய தட்டிக்கொடுத்தலும் இல்லை. ஏன் தன்னை எல்லாரும் அவமதிக்கின்றார்கள்? போன்ற பல கேள்விகள் அவளது இளகிய உள்ளத்தை குடைந்தெடுக்கும். கண்ணீர் ஆறாகப் பெருகி, அவளது தலையணையை தினமும் நனைக்கும். அந்தக் கவலையினூடே அவள் தூங்கியும் விடுவாள். காலையில் அச்சம்பவம் மீண்டும் நினைவுக்கு வந்து அவளைப் பாடாய்ப்படுத்தும்.

முகம் கழுவும்போதும், ஆடைகள் கழுவும்போதும் எதிர்வீட்டுக் குழாய் நீரோசையே அவள் காதுகளில் தொடர்ந்தும் ஒலிக்கத் தொடங்கியது. தான் தெரிந்துகொண்டே தப்பு செய்வதை அவள் மனது அவளுக்கு உணர்த்தியது.

யார் தன்னை அவமதித்தாலும் தான் இனிமேல் எப்படியாவது தொழ வேண்டும் என்ற அவளது தேவை மெதுவாக உள்ளுக்குள் உதித்தது. மற்றவர்களின் குத்தல் கதைப் பேச்சுகளுக்காக அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணிப்பதா என்ற ஆதங்கம் மனதில் தோன்றியது. இஸ்லாத்தின் வழி ஒழுக வேண்டும் என்ற சிந்தனை அவளுக்குள் உதித்தது.

அவள் தொழுகை பற்றிய பல இஸ்லாமிய நூல்களை யாருக்கும் தெரியாமல் வாசிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினாள். அந்த வாசிப்பினூடாகப் பெற்ற கல்வியினால் தொழும் முறைகளை நன்றாக விளங்கிக்கொண்டாள். அதன்பிறகு மற்றவர்களின் முன்னாலேயே சகஜமாக தொழும் அளவுக்கு அவளுக்கு பக்குவம் வந்துவிட்டது.

ஆம்! ஆயிஷா இப்போது தொழுகின்றாள். தெரியாமல், தான் இத்தனைக் காலம் தொழாமல் விட்டதற்குப் பரிகாரமாக இப்போதுகளில் அதிகமாகவே கழா, நபில் தொழுகைகளையும் தொடர்ந்தும் தொழுது வருகின்றாள்.

தொழு.. தொழு.. என்று பிள்ளைகளை அடித்தால் மட்டும் போதாது. சிறிய வயதிலேயே தொழுவதற்கான ஆசையை ஏற்படுத்தி அதன்பால் பிள்ளைகள் கவரப்படுவதற்கு வழிசெய்ய வேண்டும் என்பதே இப்போது அவள் எல்லோருக்கும் சொல்லும் அறிவுரையாகும். இப்போதுகளில் எல்லாம் ஆயிஷா தனது துஆக்களில் எல்லாம் தனது தந்தையார் ஐவேளையும் தொழ வேண்டும் என்றே அல்லாஹ்விடம் அதிகம் பிரார்த்தித்துக்கொள்வாள்.

தனக்கு ஏற்பட்ட மனக்காயம் தன் பிள்ளைகளுக்கு நேர்ந்துவிடக்கூடாது என்பதில் கடும் கரிசனை செலுத்தி வருகின்றாள் ஆயிஷா. ஆதலினால்தான் இரட்டையர்களான நசீம், நசீமாவைக்கூட தான் தொழும்போது பக்கத்திலேயே அமர்த்தி வைத்து அவர்களுக்குள்ளும் தொழும் ஆசையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றாள்.

சிந்தனை கலைந்து உடனடியாக எழுந்து சுபஹூ தொழுவதற்காக விரைகின்றாள் ஆயிஷா!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment