Saturday, October 3, 2026

10. மௌனம் - (சிறுகதை)

10. மௌனம் - (சிறுகதை) 


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

ஒரே ஊரைச் சேர்ந்த சாமிலும் சாஜித்தும் பால்யகால சினேகிதர்கள். சாதாரண தரம் வரை ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்ததால் அவர்களிடையேயான நட்பு மேலும் வலுவடைந்திருந்தது. அப்படியிருந்தும் தன்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் சாமில் செய்த விடயம் காரணமாக சாஜித்துக்கு சாமில் மேல் ஒரு வகையான எரிச்சலேற்பட்டது.

விடுமுறை தினங்களில் ஐந்து நேரத் தொழுகையின் போதும் இரண்டு நண்பர்களும் பள்ளி வாசலில் சந்தித்துக்கொள்வார்கள். மற்றைய நாட்களில் இருவரும் வெவ்வேறு இடங்களில் வேலை செய்வதால் அவர்கள் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. எங்கே இருந்தாலும், எந்த சூழ்நிலையில் என்றாலும் இவர்கள் அருகிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்று ஐந்து நேரத் தொழுகைகளையும் பேணுதலோடு தொழுதுகொள்ளும் பழக்கமுடையவர்களாகவே இருந்துவந்தார்கள்.
 
சாமில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். சாஜித் அப்படியல்ல பரம்பரைப் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவன். என்றாலும் சமூக அக்கறைகொண்டவன். மற்ற நண்பர்களிடையே சாஜித் தனது நண்பன் சாமிலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டான். இருந்தாலும் ஊரவர்கள் மூலம் தெரிந்துகொண்ட அந்த விடயத்தைப் பற்றி சாமிலிடம் நாக்கைப் பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று சாஜித் நினைத்துக்கொண்டான். அதுமட்டுமல்லாமல் சாமிலின் தாயார் தன்னிடம் மிகவும் ஆதங்கப்பட்டுச் சொன்ன விடயமும் இதே விடயமாகத்தான் இருந்தது. எனவே சாஜித் இதைப்பற்றி சாமிலிடம் கேட்டேயாக வேண்டிய கட்டாயத்திலிருந்தான்.
 
00000

அன்று விடுமுறை தினமாக இருந்தது. சுபஹு அதான் இன்னும் ஒலிக்கவில்லை. அதானுக்குரிய நேரம் கடந்து ஐந்து நிமிடங்களாகிவிட்டன.

"இந்தப் பள்ளிவாசலின் சியாம் ஹஸரத்துக்கு எனத்தியன் நடந்த..?" என்றபடி பள்ளி கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முனைந்தபோதுதான் கேட் இன்னும் திறக்கப்படவில்லை என்பதை உணர்ந்தான் சாஜித்.

அங்கு பதறிக்கொண்டு வந்த மோதின் நானா கூட்டத்தைக் கண்டதும் தடுமாறி, பின் சுதாரித்துக்கொண்டு கேட்டைத் திறந்தார்.

"மோதின் நானா.. என்ன எல்லாம் பூட்டிரிக்கி? சியாம் ஹஸரத்  நேத்து முழுக்க பள்ளிக்கு வரல்ல. அவரு எங்க பெய்த்தீக்கி..?" என்று பள்ளித் தலைவர் ஹனீப் ஹாஜியார் கேட்டார்.

"ஹஸரத்தா.. அவருக்கு சரியான காய்ச்சல். நேற்று காலையிலேயே மருந்து எடுத்துக்கொண்டு வரப்போனாரு. சரியாக சாப்பாடும் தின்டுகொள்ள முடியாமல் இருந்தாரு. தொழுகை நடத்தக் கூடிய நிலையில் அவரு இருக்கவில்லை. அதுதான்.." என்று மோதின் நானா சொல்ல, சாஜித்துக்கு வந்த கோபம் அடங்கிப் போய்விட்டது. இதற்கிடையில் தான் எதிர்பார்த்தது போலவே சாமிலும் தொழுகைக்காக வந்து சேர்ந்தான்.

"சரி சரி ஹனீப் ஹாஜி நீங்க முதல்ல தொழுகய நடத்துங்க. பொறகு பேசுவோம்.. ஆ.. தம்பி ஸஃப்புக்கு வாங்க. குதிக் கால்கள பாத்து நேரா இரிங்க.." என்றார் நஜீம் நானா.

தொழுதுவிட்டு ஒவ்வொருவராக பள்ளிக் காணியில் அமைந்திருந்த மாமரத்தடியில் கூடினார்கள். யார் முதலில் தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சாஜித் பேச்சை ஆரம்பித்தான்.

"இந்த சியாம் ஹஸரத் புள்ள குட்டிக்காரன். அவருக்கு இந்தப் பள்ளி நிர்வாகம் மூன்று மாதங்களுக்கொரு முறை கொடுக்கின்ற மூன்று நாள் லீவு போதாது தானே. நோய் நொம்பலம் என்று வரும் போது அவரும் வீட்டோட போய் இரண்டு நாட்களாவது இருந்துவிட்டு வந்தால் அவருக்கு ஆறுதலாகவும் இருக்கும். வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு கொஞ்சம் தெம்பாகவும் திரும்பி வருவாரு. என்ன சொல்றீங்க.."

அமீர் நானா மெல்ல சந்தர்ப்பம் பார்த்து வாய் திறந்தார்: "அவருட இரண்டு வருடங்களுக்கும் மேலாக கூட்டிக் கொடுக்கப்படாமலிருக்கின்ற சம்பளத்தையும் கொஞ்சம் கூட்டிக் கொடுத்தால் இன்றைய காலத்தில் உள்ள விலைவாசியைக் கொஞ்சமாவது சமாளிக்கக் கூடியதாக இருக்கும்" என்றார்.

"அது நல்ல யோசனைதான்" என்றான் சாமில்.

"ளுஹர் தொழுகைக்கு பள்ளியின் ஏனைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும் வருவார்கள். அவர்களுடனும் இது சம்பந்தமாகக் கதைத்து இந்தக் கிழமைக்குள்ளேயே இதற்கு ஒரு முடிவு காண வேண்டும். அப்போதுதான் வருகிற மாத்திலிருந்தாவது அவர்ட சம்பளத்தையும் கொஞ்சம் கூட்டிக் கொடுக்கலாம். அதோட முக்கிய தேவைகளுக்கு லீவையும் கொடுத்து, அந்தக் காலத்துக்கான மாற்றுவழி ஒன்றையும் செய்துகொள்ள வேண்டும்" என்று ஹனீப் ஹாஜியார் சொன்னார்.

கூட்டம் கலைந்தது. சாமிலும் சாஜித்தோடு சிரித்துக் கொண்டு அவசர அலுவல் ஒன்று இருப்பதாகக் கூறி விடைபெற முயற்சித்தான். அவனைப் போகவிடாமல் மிகவும் லாவகமாக மடக்கிப் பிடித்தான் சாஜித்.

"மச்சான் கொஞ்சம் நில்லு.. உன்னுடன் ஒரு முக்கியமான விசயம் பேச வேண்டும்" என்று கூறித் தனியாக அழைத்துச் சென்றான்.

"சொல்லு சாஜித்.. என்ன விசயம் பேச வேண்டும்?" எதுவும் தெரியாத அப்பாவியாய்க் கேட்டான் சாமில்.

"நீ போன ஞாயிற்றுக் கிழமை உன்ட வீட்டுக்குத் தெரியாமல் எங்க போனாய்?" என்று சாஜித் கடுமையான தொனியில் கேட்டான்.

"அதீக் நானாவ சந்திக்கோணும் என்று ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே கண்டிக்குப் போனேன்.."

"அதுதான் கேக்கிறன்.. என்னத்தக்கி போனாய்..? யாரு அந்த அதீக் நானா..?"

"அது வந்து.."

"நீ இழுக்குறத்தப் பார்த்தா ஏதோ ஜில்மால் வேலயொன்டுக்குத்தான் பெய்தீக்கி போல.." நண்பனை அதட்டிக் கேட்டான் சாஜித்.

"அதீக் நானா ஒரு கலியாண புரோக்கர். எனக்கு பொண் பாத்துக்கொண்டு வந்தாரு. அதுதான் அதீக் நானாவயும் பாத்திட்டு, பொண் பாக்கவும் அவரோட கண்டிக்குப் போன.." என்றான்.

சாமிலின் இந்தக் கதையைக் கேட்ட சாஜித் அதிர்ச்சியடைந்தான்.

"உனக்கு திருமணம் முடிக்காத இரண்டு தாத்தாவும், ஒரு தங்கச்சியும் இரிக்கெனா. இந்த நிலைமையில நீ எப்படி இப்பவே கலியாணம் முடிக்கிற யோசனய எடுக்கலாமா சாமில்..? உன்னோடு கூடப் பிறந்த சகோதரிகள கரயேத்தாம, உன்ட வீட்டுக்கும் தெரியாமல் நீ இப்படி நடந்துகொள்றது நல்லாவேயில்ல.."
 
சாமிலின் குடும்பம் வறுமைக் கோட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது தாய் சுகயீனமுற்றவர். தந்தையார் முச்சக்கர வண்டி செலுத்தி குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவர். விபத்தொன்றின்போது ஒரு காலை இழந்து இன்று வீட்டோடு இருக்கின்றார். சாமிலின்; இரண்டு மூத்த சகோதரிகளும்;, ஒரு இளைய சகோதரியும் வீட்டோடு இருக்கின்றார்கள்.
 
சாமிலின் தாய் சுகயீனமாக இருந்த போதும் அதிகாலையிலேயே எழும்பி இடியப்பம் அவித்துக் கடைகளுக்குக் கொடுப்பார். சாமிலின் சகோதரிகள் வீட்டிலேயே சிறிய சிறிய கைத்தொழில்களைச் செய்து வருமானம் ஈட்டி வந்தனர். இந்த வருமானங்களின் மூலமே அவர்களது வாழ்க்கை வண்டி பல சிரமங்களோடு நகர்ந்தது.
 
அக்காலத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனரான தந்தையின் வருமானத்தின் மூலமே சாமில் இரண்டு வருட காலமாக பக்கத்து ஊரிலுள்ள பாடசாலையின் விடுதியில் தங்கி உயர் தரக் கல்வியைக் கற்றுக்கொண்டான். பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியிலும் சாமிலின் தந்தையார், சாமிலின் விடுதிக் கட்டணத்தை தவறாமல் அனுப்பி வைப்பார். ஒவ்வொரு மாதமும் சாமிலைப் போய்ப் பார்த்துவிட்டு, அவனது கைச் செலவுக்கும் பணங்கொடுத்துவிட்டு வருவார். வீட்டில் பல கஷ்டங்கள் இருந்தாலும் சாமில் அங்கு படிக்கும் காலங்களில், சாமிலுக்கு எந்தக் குறையையும் அவர் வைக்கவில்லை.

சாமில் உயர் தரம் கற்ற பின்னர் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொண்டால், தமது பொருளாதாரப் பிரச்சினைகள் சற்று குறையும் என்று சாமிலின் வீட்டார்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள்.

சாமிலும் அவர்கள் எதிர்பார்த்தது போலவே விரைவாக தனியார் நிறுவனத்தில் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொண்டான். வருடங்கள் சிலவற்றைக் கடந்த நிலையிலும் சாமிலுக்;கு எப்போது சம்பளம் கிடைக்கின்றது? எவ்வளவு கிடைக்கின்றது? போன்ற கேள்விகளுக்கான விடைகள் வீட்டாருக்குத் தெரியாமலே இருந்தது. வீட்டுக்கென்று அவன் பெரிதாக எதையும் வாங்கிக் கொடுப்பதில்லை. ஆக மொத்தத்தில் சாமில் ஒரு சுயநலவாதியாகவே நடந்துகொண்டான். காலப்போக்கில் அவனது அன்றாடச் செயற்பாட்டிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படலாயின. நகர்ப்புற வேலைத்தளத்தில் ஏற்பட்ட சில நண்பர்களுடனான சகவாசத்தால் வந்த மாற்றமோ என்னவோ தெரியவில்லை, சாமில் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருந்தான். விடுமுறை நாட்களில் தொலைபேசிக்கு ரீலோட் செய்துவிட்டு பேஸ்புக் பார்ப்பதிலும், அலுவலக நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை அடிப்பதுமாக இருப்பான். அண்மைக் காலங்களில் சாஜித்தோடும் அவ்வளவாகப் பேசுவதில்லை.
 
00000

நாட்கள் சில கழிந்த நிலையில் சாமில் இன்றும் வசமாக சாஜித்திடம் மாட்டிக்கொண்டான்.

"என்ன சாமில் திடீரெண்டு நீ செஞ்ச வேல. வீட்டுச் செலவுகளுக்கு காசு கொடுக்காத நிலையில் திருமணம் முடிக்காத மூன்று சகோதரிகளும் இரிக்கும்போது, உனது வீட்டுக்கும் தெரியாமல் நீ அவசரப்பட்டு கலியாணத்த முடிச்சது சரியா? உனக்கே இது நியாயமாகப்படுகிறதா?" என்று கேள்விக்கணையால் துளைத்தான்  சாஜித்.

"ரஸூலுல்லாஹ் 25 வயசில தானே கலியாணம் முடிச்சாங்க.."

"அது மெய்தான். அவங்களுக்கு பெற்றோர், சகோதரிகள் என்று யாரும் இரிக்கல்ல. அதுவுமில்லாம அவங்க நாப்பது வயசு விதவைக்கித்தான் வாழ்க்க குடுத்தாங்க. நீ அதையா செஞ்ச? அரிசி, சீனி, பருப்பு, கிழங்கு என்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை நீ எப்பயாவது உனது வீட்டாருக்கு வாங்கிக் கொடுத்து இருக்கியா? ஒன்ட உம்மாவுடன் கதைத்தபோது ஒன்ட உம்மா மிகவும் கவலப்பட்டுச் சொன்ன விடயம்.. வீட்டுச் செலவுகளுக்கு என்று நீ ஒரு சதமும் காசு கொடுக்கிறதில்லயாம். படிச்ச ஒத்தனா இருந்துகொண்டு இப்படி நியாயமில்லாமப் பேச வாணாம். உனக்கும் இப்ப 26 வயதுதானே ஆகிறது.."

"ஊட்டுல ஏன்ட கலியாணத்துக்கு விருப்பமில்ல. அதுதான் நான் திடீரென்டு இந்த முடிவ எடுத்த.."

"எந்த ஊட்டுலதான் இந்தமாதிரி ஒரு விசயத்த  விரும்புவாங்க? நீ செஞ்ச தவறுகள மறைக்க சாட்டு சொல்ல வாணாம். கொமருப் புள்ளகள்ள ஒருத்தரயாவது கரயேத்தாம நீ கலியாணம் முடிச்சதே ஒரு வகையான சுயநல மனோபாவம். அதையும் தாண்டி வீட்டுக்கு எந்த உதவியும் இல்லாம, சல்லிக் காசு குடுக்காம இருந்துகொண்டு, இப்படி ஒரு வேலயயும் செஞ்சிட்டாய்.."

"என்ட சகோதரிகளுக்கு நான் சில விஷயங்களப் பேசின. அது சரிவரல்ல.."

"அப்போ சரிவரல்ல என்டு சொல்லிக்கொண்டு நீ சும்மா இருந்திட்டியா? பொருத்தமான வேற விஷயங்கள தேடிப் பாத்து இருக்கணுமே. நாளை மறுமையில அல்லாஹ்ட சந்நிதானத்தில இப்படி பொறுப்பில்லாம பதில் செல்ல ஏலாமப் போகும். நீ ஐந்து நேரம் தொழுதா மட்டும் ஒன்ட கடம முடீதல்ல. அல்லாஹ் சில கேள்விகள கேக்கச்செல்ல அதுக்குப் பதில் செல்லாம உன்ட கால ஓர் அடிகூட நகர்த்த ஏலாமப் போகும்.."

"எனக்கு வயசு போகுதென்டு எங்கட ஆபிதா மாமியும் ஒரே கவலப்பட்ட. அவங்கட மகனும் 25 வயசிலதான் கலியாணம் முடிச்சன்டு சொல்லி அவங்கட ஊட்டுலதான் எனக்கும் கடைசியா பொண்ணு பாக்க ஏற்பாடு செஞ்சிருந்த.. அப்படியே திடீரென்று ஆபிதா மாமியின் வீட்டிலேயே சிறிதாக கலியாண ஏற்பாட்டையும் செய்து முடித்துக்கொண்டேன்.."

"ஒன்ட சகோதரிகளுக்கும் வயசு போகுதென்டு ஒனக்கு ஆபிதா மாமி சொல்லித் தரல்லயா? அல்லது ஒனக்காவது வெளங்கல்லயா? ஆபிதா மாமிக்கு கலியாண வயசில ஒரு கொமருப்புள்ள இல்லாதனால அவங்கட மகன 25 வயசுல கலியாணம் முடிக்க சம்மதிச்சிருப்பாங்க. அப்படி இல்லாம கலியாண வயசில ஒரு கொமருப்புள்ள இருந்திருந்தா அவங்கட மகன கலியாணம் முடிக்க விட்டிருக்கவே மாட்டாங்க. தன்ட மகளை முடிச்சிக்கொடுத்துட்டுத்தான் மகனுக்கு கலியாணம் முடிக்க விட்டிருப்பாங்க. உங்க ஆபிதா மாமி யாரெண்டு ஊருக்கே நல்லாத் தெரியும். அப்படியான ஒருவரது பேச்சையா கொஞ்சம் கூட நியாயமில்லாம நீ சாட்டுச் சொல்ல வச்சிருக்கிய..?"
 
"..................." பேச்சு வராமல் மௌனமானான் சாமில்.

"மத்தவங்கட சந்தோசத்த இல்லாமாக்கிட்டு, குடும்பத்துல ஒற்றுமைய சீர்குலச்சிட்டு, அவங்கட துன்பத்த பார்த்து ஒன்றும் தெரியாத மாதிரி இரிக்கிற ஒருத்தர்தான் அவங்க. ஓன்ட வசதிக்காக நீ ஆபிதா மாமிய இப்ப சாட்டாச் சொல்லிய. அவங்க உனக்கு தூரத்துச் சொந்தம். அவங்கட பேச்ச உன்ட வாசிக்கு கேட்ட நீ, உன்ட குடும்ப நெலமய கொஞ்சமாவது யோசிச்சிப் பாத்தியா? நல்ல பசுந்துடா ஒன்ட கத.."

"..................." சாமில் ஒன்றுமே பேசவில்லை.

"ஒருநாள் நான் ஒன்ட வாப்பாவப் பாக்க ஒன்ட ஊட்டுக்கு பெய்த்திருந்த. ஒன்ட உம்மா எவ்வளவு கவலப்பட்டாங்க தெரியுமா? மூணு கொமர கரசேர்க்க நான் படுற பாடு சாமிலுக்கு ஏன் விளங்குதில்ல என்டு செல்லி அழுதாங்க. குடும்பப் பொறுப்பு கொஞ்சமும் இல்லாம நீ இப்படி சுயநலவாதியா இரிக்கிறது ஓன்ட சகோதரிகளுக்கும் சரியான மனவருத்தம் என்டாங்க. ஒனக்கேன் இதொண்டும் வெளங்கியல்ல..?"

"..................." அமைதியாக இருந்தான் சாமில்.

"தனது குடும்பத்துக்காக ஓடாத்தேஞ்சி ஒழச்சி, சகோதரிகளுக்கு நல்ல வாழ்க்கய அமைச்சிக் கொடுத்த எத்தனயோ இளைஞர்கள் நம்ம சமூகத்தில இருக்கிறாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒருவர் தனது தங்கச்சிய முடிச்சிக் கொடுத்திட்டுத்தான் முப்பத்தாறு வயசில கலியாணம் முடிச்ச. வீட்டில எல்லாருட துஆவும் அவருக்கு கடைசி வரைக்கும் இருக்கும். ஆனா நீ செஞ்ச வேல அந்த கொமருகள்ட மனசில நெருப்பத்தான் எரிய வச்சிருக்கும்.." என்று சாஜித் சமூக அக்கறையுடன் பேசிக்கொண்டிருந்தான்.

சாஜித் சொன்ன விடயங்களை மறுத்துப் பேச முடியாதவனாக சாமில் ஊமையாக அங்கே நின்று கொண்டிருந்தான்!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment