Saturday, October 3, 2026

18. வீடு - (சிறுகதை)

18. வீடு - (சிறுகதை) 


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


பள்ளியில் அமர்ந்து நீண்ட நேரம் துஆக் கேட்டுக் கொண்டிருந்தார் நிஸாம் நானா. அவரது உள்ளத்தில் உருவாகியிருந்த துன்பச் சூறாவளியால் அவர் நிலைகுலைந்து போயிருந்தார். இறைவனிடம் தவிர வேறு யாரிடமும் உதவியை எதிர்பார்க்கக் கூடாது. படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் இருந்தால் அவரது மனக் கவலை பெரும்பாலும் குறைந்து போவதாய் உணர்ந்தார். ஆனால் அவரது மனைவியும் பிள்ளைகளும் இந்நேரம் தாங்க முடியாத சுமைகளை இதயத்தில் சுமந்துகொண்டு செய்வதறியாமல் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

நிஸாம் நானா கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து வயதை அண்மித்தவர். ஒரு சில்லறைக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். கிடைக்கும் வருமானத்தில் அவரது குடும்ப வண்டி தட்டுத் தடங்கலுடன் என்றாலும், சந்தோசமாக நகர்ந்துகொண்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அவரது நிம்மதிக்கு உலை வைத்து விட்டாற் போன்று அந்தச் சம்பவம் இடம்பெற்றது.

"நிஸாம் நானா வாற மாசம் மகன்ட கலியாணம் வெச்சீக்கி. அதனால ஊடு தேவப்படுது. எப்படி செல்லுறன்டு எனக்கு வெளங்குதும் இல்ல. நீங்க வேற ஒரு ஊட்ட பாத்துக் கொள்ளுறது நல்லமெனா.." என்றார் வீட்டு உரிமையாளர் பரீத்.
 
பரீத் இவ்வளவு காலம் நிஸாம் நானாவின் நிலைமை அறிந்திருந்த படியால் குறைந்த வாடகைக்கு அவர்களை அனுமதித்திருந்தார்.
 
திடீரென்று வீடு மாறுவதென்றால் இந்தக் காலத்தில் எப்படிச் சாத்தியமாகும்? முற்பணம் கட்டுவதற்கே இலட்சக் கணக்கில் காசு கொடுக்க வேண்டுமல்லவா? பரீத் முற்பணம் எதையும் பெற்றுக்கொள்ளாமல் மாத வாடகைக்கு மாத்திரம் நிஸாம் நானாவை குடும்பத்துடன் தங்க அனுமதித்ததே பெரிய விடயம். அவரது வீட்டுக்கு குடிவந்தும் இருபது வருடங்கள் கடந்துவிட்டதை எண்ணிப் பார்த்தபோது நிஸாமுக்கு ஆச்சரியமாக இருந்தது.

முதன் முதலாக நிஸாம் வரும்போது, பரீதின் மகன் ஐந்து வயதுப் பாலகனாக இருந்தான். இன்று அவனுக்குத் திருமணம் ஏற்பாடாகிவிட்டது. நிஸாமுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. இந்த இருபது வருட காலத்தில் தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்வதற்கு பொருளாதாரம் அவருக்கு இடம்கொடுக்கவில்லை.
 
முப்பது வருடங்களுக்கு முதல் நிஸாம் நானா திருமணமுடித்து நான்கு வருடங்களில் அவரது மனைவி இறந்துவிட்டார். ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகளுடன் அல்லாடிக் கொண்டிருந்தவருக்கு மறுமணப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனால் அவரோ தன்னைப் போல வாழ்விழந்த ஒரு விதவையை மணமுடிக்கவே எண்ணினார். எனவே இரண்டு பெண் பிள்ளைகளுடன் விதவையாகி இருந்த சரீபாவை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
 
நிஸாமும் புதிய மனைவியும் நான்கு பிள்ளைகளையும் சரிசமமாகவே நடத்தினார்கள். இதெல்லாம் பழைய கதை. இன்று பிள்ளைகள் நால்வரும் வளர்ந்து ஆளாகிவிட்டார்கள். வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இப்போதைய சூல்நிலையில் வேறு வீடு தேடுவது பெரிய கஷ்டம்தான். ஆனாலும் பரீத்திடம் பொறுத்துக்கொள்ளும்படி கேட்பதற்கு நிஸாமால் முடியவில்லை. ஏனெனில் நிஸாமின் எல்லா விடயங்களுக்கும் முதலில் உதவி ஒத்துழைப்பது பரீத்தான்.
 
வேறு வீடு பார்த்துக் கொண்டால் நல்லது என பரீத் பணிவாகக் கூறும்போதுகூட பரீதின் கண்கள்தான் கலங்கியிருந்தன. நிஸாமை அனுப்ப அவருக்கும் விருப்பமில்லை. அப்படிப்பட்ட ஒருவரிடம் இன்னும் காலக்கெடு தாருங்கள் என்று கேட்டு அவரைச் சங்கடப்படுத்தக் கூடாது என்று சிந்தித்தார் நிஸாம்.

00000

நீண்ட நேரம் நிஸாமை பள்ளியில் அவதானித்துக் கொண்டிருந்தார் நவ்பர் ஹாஜி. நிஸாம் ஒவ்வொரு நாளும் இப்படி உருகி உருகி துஆக் கேட்பதைப் பார்த்த நவ்பர் ஹாஜிக்கு ஒரு எண்ணம் உதித்தது. அந்த எண்ணத்தை வல்ல இறைவன் அவரது உள்ளத்தில் உதிக்கச் செய்ததை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
 
"நிஸாமுக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும்"

தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயல் வடிவில் காட்டுவதற்குத் துணிந்தார் நவ்பர் ஹாஜி. அவர் இதுபற்றி தன் மனைவியிடம் கலந்தாலோசித்தார். நவ்பர் ஹாஜியின் மனைவிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இத்தகையதொரு மனிதப் புனிதரை, தான் கணவனாகப் பெற்றதை எண்ணி அகமகிழ்ந்தார்.
 
நவ்பர் ஹாஜி இளகிய மனம் படைத்தவர். மற்றவர்களின் துன்பங்களைத் தனதாகக் கருதிக் கொண்டு அவற்றை சுகப்படுத்தத் துடிப்பவர். அல்லாஹ்வின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் அவரைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு பக்தியும் கண்ணியமும் தோன்றும்.
 
நிஸாம் தன் கவலைகளை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. மற்றவர்களின் முகபாவனையைக் கவனித்து அவர்களது மன உணர்வுகளைத் துல்லியமாக அறிந்துகொள்ளும் வலிமை நவ்பர் ஹாஜிக்கு இயற்கையாகவே இருந்தபடியால், அவர் நிஸாமின் மனதைப் படித்து அவரது தேவையைப் பூர்த்தி செய்ய முன்வந்தார். நவ்பர் ஹாஜி ஒரு உளவியலாளரும் கூட.

தனக்குத் தெரிந்த சில நண்பர்களிடம் நிஸாமின் நிலைமையை எடுத்துக் கூறினார். நவ்பர் ஹாஜி மீது மிகுந்த அபிமானமும் அன்பும் வைத்திருக்கும் நண்பர்கள் தலா ஐந்து இலட்சங்கள், மூன்று இலட்சங்கள், இரண்டு இலட்சங்கள் என்று ஒவ்வொருவரும் தன்னால் இயலுமான தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டார்கள். பரீதும் தானே முந்திக்கொண்டு இரண்டு இலட்சங்களைக் கொடுத்து உதவினார். வீடு வாங்குவதற்கான பணத்தைத் திரட்டிய நிலையில் நவ்பர் ஹாஜி தானும் ஒரு சிறிய தொகைப் பணத்தைப் போட்டு நிஸாமை அழைத்தார். இந்த வீட்டு விடயத்துக்காக தான் முயற்சி செய்ததில் அறுபது இலட்சங்கள் சேர்ந்துள்ளது என்ற முழு விபரங்களையும் கூறினார்.

நிஸாமுக்கு உள்ளம் உருகி ஆறாய் ஓடுவது போலிருந்தது. அவரது கவலைகளை எல்லாம் நவ்பர் ஹாஜி சுத்தமாகத் துடைத்து விட்டாற் போன்ற உணர்வு ஏற்பட்டது. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவராக அகமகிழ்ந்தார். நவ்பர் ஹாஜிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காசு தந்து உதவியோருக்கும் நிஸாமின் குடும்பத்தினர் மனமுவந்து துஆக் கேட்டனர்.  

நவ்பர் ஹாஜி வீடு பார்ப்பதற்காக நிஸாமை அழைத்துச் சென்றார். எந்த வீட்டைக் காட்டிய போதும் நிஸாம் அவ்வீட்டிலுள்ள நிறைகளை மட்டுமே பார்த்தார். அங்கே கண்முன் தெரிந்த ஒருசில குறைகள்கூட நிஸாமைப் பொறுத்தளவில் பிரச்சினையாக இருக்கவில்லை. அவர் இவ்வாறு நடந்துகொள்ளும் பாங்கு நவ்பர் ஹாஜிக்கு மேலும் பாசத்தை வரவழைத்தது. பார்க்கும் வீட்டை நல்லதாகவே பார்ப்போம் என்றெண்ணி, ஒரு குடும்பம் தன்னிறைவாக வாழக்கூடியதொரு வீட்டையே தேர்ந்தெடுத்தார்கள்.

இன்னும் நான்கு இலட்சங்கள் தேவைப்பட்ட நிலையில் வீடு வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்குரிய தினம் நெருங்கிக் கொண்டிருந்தது. எப்படி மிகுதிப் பணத்தைத் திரட்டுவது என்று தடுமாறி நின்ற வேளையில் நவ்பர் ஹாஜிக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

"வீடு வாங்கும் விடயம் முடிவடைந்துவிட்டதா?" என்று மறுமுனையில் இருப்பவர் கேட்டபோது, இன்னும் நான்கு இலட்சங்கள் போதாமல் இருக்கும் நிலமையைக் கூறினார் நவ்பர் ஹாஜி. தொலைபேசியில் கதைத்தவர் அந்தத் தொகையைத் தானே தருவதாக ஒப்புக்கொண்டார். சொன்ன மாதிரியே அதை வங்கியில் உடனடியாக வைப்புச் செய்தார்.

அல்லாஹ்வின் பேருதவியாலும் நவ்பர் ஹாஜியாரின் தலையீட்டாலும் சிறந்த மாடி வீடு ஒன்றை நிஸாம் பெற்றுக்கொண்டார். அவரது மனதில் உறுத்திக் கொண்டிருந்த பெரியதொரு பிரச்சினைக்கு அல்லாஹ் சரியான தீர்வைக் கொடுத்திருந்தான்.

ஒரு விதவைக்கு வாழ்வளித்து, அவளது பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் கவனித்து, தன்னால் முடிந்தளவு அவர்கள் எல்லோரையும் நன்றாகப் பராமரித்து, அல்லாஹ்வின் கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடந்த நிஸாம் இன்று தன் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக தனது சொந்த வீட்டில் இருக்கின்றார். நிஸாமின் அந்த மகிழ்ச்சியில் நவ்பர் ஹாஜியும் அக மகிழ்ந்தார்!

வெலிகம ரிம்ஸா முஹம்மத்



17. நன்றிக்கடன் - (சிறுகதை)

17. நன்றிக்கடன் - (சிறுகதை) 


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


அன்றைய பத்திரிகையிலும் சுனிலின் கவிதையைக் கண்டு பிரமித்துப் போனான் கார்த்தி;. சுனிலின் கவிதைகள் அடிக்கடி பத்திரிகையில் வெளிவந்துகொண்டிருப்பதை கார்த்தி அவதானித்திருக்கிறான். அவனுடன் எப்படியாவது கதைத்து தனது பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணினான் அவன்.

கார்த்தியும் அவ்வப்போது தான் எழுதிய கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்புவது வழக்கம். அந்தக் கவிதைகள் பிரசுரமாவதைக் காணும் போது அவனுக்கு இனம் புரியாத ஒரு மகிழ்வு ஏற்படும். அத்துடன் அவன் பல மூத்த இலக்கியவாதிகளையும் அறிந்து வைத்திருந்தான். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் கார்த்தி, வானொலி நிகழ்ச்சியிலும் தனது பகுதிநேர பங்களிப்புக்களைச் செய்து வருகிறான்.
 
00000

பிறிதொருநாள் பத்திரிகை நிறுவனம் ஒன்றில் சுனில் தொழில் புரிவதாக அறியக் கிடைத்தது. அந்தப் பத்திரிகையில் கூட கார்த்தி ஏற்கனவே கவிதைகள் எழுதியிருக்கின்றான். எனவே அந்தப் பத்திரிகை நிறுவனத்தின் தொலைபேசி இலக்கத்தை தெரிந்து வைத்திருந்தான். அதனால் சுனிலுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தான்.

அதிலிருந்து கார்த்தியினதும் சுனிலினதும் இலக்கிய உறவு தொடர்ந்து சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. அவ்வப்போது கார்த்தியின் கவிதைகளை, சுனில் தனது பத்திரிகையில் தான் தயாரிக்கும் பக்கத்தில் பிரசுரித்தான். சுனில் பொறுப்பேற்றிருக்கும் பத்திரிகைப் பக்கத்தில் அவன் வாரா வாரம் எழுதும் பத்தி எழுத்துக்களுக்கான புத்தகங்கள், தகவல்களை கார்த்தி பெற்றுக்கொடுப்பான். அதனால் இருவருக்கிடையில் நட்பு ஏற்பட்டது.
 
சுனிலிடம் நிறைய எழுத்துத் திறமை இருந்தது. அவன் எழுதும் கவிதைகள் கார்த்தியைக் கவர்ந்தன. சுனில் பத்திரிகை நிறுவனத்தில் தொழில் செய்தபோதும் அவனுக்கு நிறைய இலக்கியவாதிகளுடன் தொடர்பிருக்கவில்லை. கார்த்தி ஏற்கனவே அவர்களுடன் தொடர்பாக இருந்ததால் சுனிலுக்கும் இலகுவாக அவர்களுடன் பழகி உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது.

தலைநகரிலிருந்து வெளிவரும் பிரபலமான 'வானம்பாடி' சஞ்சிகையில் சுனிலைப் பற்றிய அறிமுகம் வெளிவருவதற்கு கார்த்தியே முழுக் காரணமாக இருந்தான். சுனிலின் தகவல்களை எடுத்துச் சென்று ஷவானம்பாடி| சஞ்சிகை ஆசிரியரிடம் நேரடியாகக் கையளித்து, அடுத்து வெளிவரும் சஞ்சிகையிலேயே அதனைப் பிரசுரித்து உதவுமாறு கார்த்தி கேட்டிருந்தான். அதுபோலவே சுனில் பற்றிய அறிமுகமும் அடுத்த மாதமே வெளிவந்திருந்தது.
 
சுனிலின் அறிமுகம் வெளிவந்த சஞ்சிகையின் சில பிரதிகளைக் குறிப்பிட்ட சில இடங்களுக்கு தபாலிடும்படி சுனில் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சுனிலுக்கு உதவும் முகமாக அந்த சஞ்சிகையின் பிரதிகள் சிலவற்றை தனது செலவிலேயே வாங்கிய கார்த்தி அவற்றை சுனில் கூறிய இடங்களுக்குத் தபாலில் அனுப்பி வைத்தான்.
 
அப்போது பத்திரிகைத் துறையை அறிந்து வைத்திருந்த சுனில், வானொலியிலோ தொலைக்காட்சியிலோ தான் பங்களிப்புக்களைச் செய்ய வேண்டும் என்ற தனது நீண்டகால ஆசையை கார்த்தியிடம் கூறினான். கார்த்திக்கு ஏற்கனவே வானொலியில் பரிச்சயம் இருந்ததால் ஷகவிதைவெளி| நிகழ்ச்சியின் தயாரிப்பாளரிடம், சுனிலின் திறமை பற்றி எடுத்துக்கூறி சுனிலுக்கு குரல் கொடுக்கும் சந்தர்ப்பங்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டான். அதேநேரம் அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளரிடமும் சுனிலின் திறமை பற்றிக் கூறி உடனடியாகவே சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தான். அதனால் சுனிலின் நீண்டநாள் ஆசை நிறைவேறியது. சுனிலின் வானொலிக் கனவு தன்னால் நிறைவேற்றப்பட்டதால் கார்த்தி அகம் மகிழ்ந்து போனான்.

"முதன்முதலா என்ன வானொலிக்கு அனுப்பினது நீங்கதான் கார்த்தி. நான் இதை என் வாழ்நாளில்; மறக்கவே மாட்டன். நான் கண்டிக்கு வந்த நாள்ள இருந்து பலரிடமும் கதைச்சிருக்கிறன். ஆனால் எனக்கு ஒருவரும் உதவி செய்ய இல்ல கார்த்தி. உங்களுடன் பழகிய கொஞ்ச காலத்திலயே வானொலிக்கு செல்லணும் என்ற எனது ஆசையை நிறைவேத்தித் தந்துட்டீங்க.." என்று சுனில் கூறினான்.

"அதுக்கென்ன சுனில்.. என்னால முடிஞ்ச ஒரு உதவிய நான் செஞ்சன். அவ்வளவுதான்.."

அத்துடன் சுனிலுக்குத் தேவையான புத்தகங்கள் சிலவற்றையும் கார்த்தி வாங்கிக்கொடுத்தான். மற்றும் இலக்கியக் கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்றான். மட்டுமல்லாமல் சில இலக்கிய நிறுவனங்களில் அங்கத்துவத்தையும் பெற்றுக் கொடுத்தான்.

வேறொரு நாளில் தனியார் வானொலி அலைவரிசையொன்றில் கவிதைப் போட்டிக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. சுனிலும் அதில் கலந்துகொண்டு முதல் சுற்றில் தெரிவானான். அவ்வாறு தெரிவானவர்களை இந்தியாவுக்கு அழைத்துச்சென்று, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னிலையில் கவிதை எழுத வைக்கும் போட்டி ஒன்று நடைபெற ஏற்பாடாகி இருந்தது. சுனிலும் அதற்குத் தகுதி பெற்றிருந்தான். ஆனால் இந்தியாவுக்கு செல்வதற்கான பொருளாதார வசதிகள் அவனிடம் அப்போது இருக்கவில்லை. எனவே அவன் கார்த்தியிடம் ஒரு தொகைக் காசைக் கடனாகக் கேட்டான்.

"கார்த்தி இந்தியாவுல கவிதை எழுதுற போட்டிக்கு நானும் தெரிவாகி இருக்கிறன்.."

"அப்படியா.. என் வாழ்த்துக்கள் சுனில்! எனக்கு மிகவும் சந்தோசமா இருக்குது.."

"ஆனா.. அதில் ஒரு சின்ன சிக்கல்.. எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா..?"

"சொல்லுங்க சுனில் என்னால முடிஞ்சா கட்டாயம் நான் செய்வன்.."

"இதற்காகத் தேவைப்படும் காச கடனாகத் தந்தீங்க என்றால் பெரிய உதவியாயிருக்கும். மூன்று மாதங்களுக்குள் திருப்பித் தந்திடுவன்.."

"எப்படியாவது நான் ஏற்பாடு செய்றன். ஆனா முன்று மாசத்தில கட்டாயம் திருப்பித் தந்திடுங்க. ஆல் த பெஸ்ட்.."

சொன்னதுபோல கார்த்தி இரண்டு நாட்களுக்குள் சுனிலின் வங்கிக் கணக்கிலக்கத்துக்கு சுனில் கேட்ட தொகையை வைப்பு செய்துவிட்டு தொலைபேசியில் அறிவித்தான்.

00000

சுனில் இந்தியாவுக்குச் சென்று வந்துவிட்டான். அங்கே அவன் எடுத்திருந்த புகைப்படங்களை கார்த்திக்;கு பெருமையாகக் காட்டினான்.

சில நாட்களில் சுனில் பத்திரிகை நிறுவனத்திலிருந்து விலகி, தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இடம் மாறினான். கார்த்தியின் தங்குமிடத்துக்கு அருகாமையில்தான் சுனில் தொழில் புரியும் இடம் அமைந்திருந்தது. எனவே விடுமுறை தினங்களில் கார்த்தி தனது அலுவலக நண்பர்கள் இருவருடன் சென்று சுனிலுடன் பேசிவிட்டு வருவான்.

சுனில் காசைத் திருப்பித் தருவதாகச் சொன்ன மூன்று மாதங்களும் கடந்துவிட்டன. ஆனாலும் கார்த்தியிடம் எடுத்த காசை சுனில் திருப்பிக் கொடுக்கவில்லை. தாமதத்துக்கான காரணத்தைச் சொல்லவுமில்லை. அதைப்பற்றி கார்த்தியும் அப்போது ஒன்றும் கேட்கவில்லை.

இப்படியே மூன்று வருடங்களும் கழிந்தன. அப்போதும் சுனிலுக்கு எடுத்த காசைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

ஒருநாள் கார்த்திக்கு திடீரென்று சுகயீனம் ஏற்பட்டதால் இரண்டு கிழமையாக தொழிலுக்குச் செல்லவில்லை. அதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே சுனிலுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, தான் ஏற்கனவே கொடுத்திருந்த காசை திருப்பிக் கேட்டான். ஆனால் அதுவரை தொலைபேசியிலும் நேரிலும் நன்றாகக் கதைத்துக்கொண்டிருந்த சுனில், கார்த்தி காசைத் திருப்பிக் கேட்டதும் தனது அலட்சியத்தை வெளிப்படுத்தினான். கார்த்தி தனது நிலைமையை எடுத்துக் கூறியும் சுனிலின் மனம் இளகவில்லை. தான் எடுத்த கடனைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணவுமில்லை.

"இப்ப என்னிடம் காசு இல்ல.."

"ஏன்ட நெலமயும் கஷ்டமா இரிக்கி. கொஞ்சம் கொஞ்சம் என்டாலும் தரப் பாருங்க..|| என்று சொல்வதற்குள் போனை வைத்துவிட்டான் சுனில்;. கார்த்திக்கு என்னவோ போலாகிவிட்டது. கொஞ்ச காலம் பொறுத்துக் கேட்கலாம் என்று பேசாமல் இருந்துவிட்டான். இன்னொரு இக்கட்டில் சுனிலுக்கு தொலைபேசினான்.
ஷஷஹலோ சுனில், நான் கார்த்தி பேசுறேன்.."

"என்ன?"

"அந்தக் காசு வேணும்.."

"இப்ப தர ஏலா.."

"என்ன சுனில் இப்படிச் சொல்றீங்க..?"

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இப்போது கார்த்திக்கு கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டது. காசைக் கேட்;கும் போது கெஞ்சுவான்கள். இப்ப மிஞ்சுரான்கள், நன்றி கெட்டவன்கள் என்று அவனது உள்ளம் பொருமியது. சுனில் பணிவாக சொல்லாமல் அலட்சியப்படுத்தி பேசிய விதம் நீறுபூத்த நெருப்பு போல கார்த்தியின் மனதில் கனன்று கொண்டேயிருந்தது.

நான்கு மாதங்களாக கார்த்தி எதுவும் பேசவில்லை. அதன் பிறகு மீண்டும் ஒருநாள் மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்ட சந்தர்ப்பமொன்றில் பலமுறை தொலைபேசியில் சுனிலை அழைத்தும் அந்த அழைப்புகளை அவன் எடுக்கவேயில்லை. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருந்தான்.

ஏதோ நினைத்தவனாக கடைசியாக தனது அலுவலக நண்பர் ஒருவரின் தொலைபேசி இலக்கத்திலிருந்து சுனிலுக்கு கோல் பண்ணினான் கார்த்தி.
 
"ஹலோ சுனில். எனக்கு இன்னும் ஒரு கிழமைக்குள் காசு வேணும். எப்படிச்சரி தரப்பாருங்க.." என்று தனது கோபத்தை காட்டிக்கொள்ளாமல் கேட்டான் கார்த்தி.

"என்னால முடியாது. ஏலும்டா நீங்க எடுத்துக் காட்டுங்க.." என்று சவாலாகச் சொன்னான் சுனில்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை கார்த்தி அப்போதுதான் புரிந்துகொண்டான். சுனில் அவ்வாறு பேசியமை மனதில் வலியேற்படுத்தியதோடு எப்படியேனும் காசை எடுத்துக் காட்டுவேன் என்ற வைராக்கியத்தையும் ஏற்படுத்தியது.

நல்ல நட்பு என்பது வெறும் பணத்தால் வருவதல்ல. நல்ல குணத்தால் வர வேண்டியது. பரஸ்பர பண உதவியால் வலுப் பெறும் நல்ல நட்புக்கள் இருக்கின்றன. அதேபோல பணத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றும் தீய நட்புக்களும் இருக்கின்றன என்பதை கார்த்தி நன்கு உணர்ந்துகொண்டான்.

கடனைப் பெற்றுக்கொண்டால் குறித்த தினத்தில் அதைத் திருப்பிக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதைவிடுத்து கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால், கடன் கொடுத்தவரை அதட்டுவது நியாயமில்லை. கடனைச் செலுத்த கால அவகாசம் தேவை என்றால் அதைப் பணிவாகக் கேட்டிருக்க வேண்டும். மாறாக ஷமுடிந்தால் எடுத்துக் காட்டு| என்று சவாலாகச் சொல்வது நல்ல மனிதனுக்குரிய அடையாளமல்ல.

இதுவரை பழகிய நட்புக்கே களங்கம் ஏற்படுத்திவிட்ட சுனிலைத் தனது முன்னைய நண்பன் என்று சொல்வதற்கே அருகதை இல்லாமல் போய்விட்டதை எண்ணி கார்த்தி மிகவும் வெட்கப்பட்டான். அத்துடன் சுனில்; அலட்சியமாகச் சொன்னதற்கிணங்க அதற்குரிய இடத்துக்குச் சென்று முறையிட்டுத்தான் கார்த்தி கொடுத்த கடனைப் பெற்றுக் கொண்டான்.

இந்த சம்பவத்துக்குப் பின்னர் கார்த்திக்கும் சுனிலுக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் இருக்கவில்லை.

அதன் பின்னரான காலங்களில் கார்த்தி இலக்கியத் துறையில் ஈடுபட்டு பல புத்தகங்களையும் வெளியிட்டான். பலரது பாராட்டுக்களும் அவனை வந்தடைந்தன.
 
பல பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் கார்த்தியை நேர்காணல் செய்தன. கார்த்தியோடு இதுவரை நல்ல நட்பைப் பேணி வருபவர்கள் அவனது முயற்சிகள் மற்றும் முன்னேற்றம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

சுனில் தொழில்புரியும் 'சரிகமப' தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்தும் நேர்காணல் நிகழ்ச்சிக்காக கார்த்தியை அழைத்திருந்தார்கள். ஆனால் நேர்காணல் நிகழ்ச்சிக்கு கார்த்தி வரப்போகும் தகவலை அறிந்த சுனில்,  அந்தச் சந்தர்ப்பத்தை தனது தலையீட்டினால் தட்டிவிட்டான்.

கடன் கொடுத்து உதவினால் அதற்குக் கிடைக்கும் நன்றிக்கடன் இதுதான் என்பதை காலம் நன்றாக உணர்த்தியது!


வெலிகம ரிம்ஸா முஹம்மத் 


16. வியூகம் - (சிறுகதை)

16. வியூகம் - (சிறுகதை) 


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


நடேசன் - லீலா தம்பதியினருக்கு குமார், அருந்ததி என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். செல்வந்தப் பெற்றார்களான இவர்கள், இந்த  பிள்ளைகளை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர். மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்தக் குடும்பத்தில் ஊரவர்களின் கண் பட்டது போல நடேசன் தனது நாற்பதாவது வயதிலேயே அகால மரணமடைந்தார். செல்வச் செழிப்பில் வாழ்ந்து வந்த லீலா பத்து வயதுக்கும் குறைந்த இரண்டு பிள்ளைகளோடு தனித்துப் போனாள்.
 
நாட்களின் நகர்வில் நடேசன் சம்பாதித்து வைத்த சொத்துக்கள் கரையத் தொடங்கின. குழந்தைகள் இருவரையும் வளர்த்தெடுப்பதில் அவள் பெரும் போராட்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள். பிள்ளைகளின் படிப்புச் செலவு, வாழ்க்கைச் செலவு போன்றவற்றை சமாளிக்க லீலா மிகவும் போராடிக்கொண்டிருந்தாள். தனது பொழுதுபோக்கிற்காக, கற்று வைத்திருந்த தையல் கலையே லீலாவுக்கு, வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்ய ஓரளவுக்குக் கைகொடுத்தது. குழந்தைகள் இருவரையும் ஒற்றுமையாக வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தாள் லீலா. குமாரும் தாயாரோடும் தங்கை அருந்ததியோடும் மிகவும் அன்பு வைத்திருந்தான்.
 
காலச்சுழற்சியில் வாழ்க்கைச் செலவுகள் கூடிக் கொண்டே சென்றன. வறுமைப்புயல் இவர்களையும் பந்தாடியது. இருந்தாலும் தாயாரின் அன்பான வளர்ப்பில் அவர்கள் மூவரும் மிகவும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தார்கள். பாடசாலைக்குச் சென்றுவிட்டு வந்த பிள்ளைகள் இருவரும் மாலையில் வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். லீலா தனது ஒரே மகன் குமாரை விளையாடுவதற்குக்கூட வெளியே அனுப்பமாட்டாள். தனது கண்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வாள்.
 
மாலை மங்கி இருள் சூழும் வேளைகளில் வீட்டு முற்ற வெளியில் குழந்தைகள் விளையாடியதை நிறுத்திவிட்டு, கை கால் முகம் கழுவ வைத்து தினமும் படிக்க வைப்பாள். காலப்போக்கில் தந்தை இல்லாத குறையையும் மறந்து பிள்ளைகள் தாயின் பாசத்தில் திளைத்திருந்தார்கள். இரவு வேளைகளில் தூங்கும் போது தாயாரின் இரு பக்கங்களிலும் இரண்டு பிள்ளைகளும் சாய்ந்துகொண்டு லீலாவிடம் கதை கேட்பார்கள். லீலாவும் ஒவ்வொரு இரவு வேளைகளிலும் தெனாலிராமன் கதை, பாட்டி வடை சுட்ட கதை, பாரி - தேர் கதை, ஒளவை - நெல்லிக்கனி கதை, குசேலர் கதை, முல்லா நசுருதீன் கதை என்று தினமும் ஒவ்வொரு கதையைக் கூறிக்கொண்டு வருவார். பிள்ளைகளுக்கும் கதைகளைக் கேட்டுக்கொண்டே தூங்குவது பிடித்திருந்தது.
 
அப்படித்தான் ஒருநாள் லீலா, நல்லதங்காளின் கதையைக் கூறினார். இந்தக் கதையைப் பிள்ளைகள் இருவரும் மிகவும் கவலையோடு கேட்டுக்கொண்டிருந்தனர். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகள் இருவரும் வளர்ந்து பெரியவர்களானாலும்கூட ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்துகொள்ள வேண்டும் என்றும் எந்த நிலை வந்தாலும், ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் லீலா பிள்ளைகள் இருவரிடமும் சத்தியத்தை வாங்கிக்கொண்டாள். குமாரும் அருந்ததியும் அவ்வாறே இருப்பதாக தாய்க்கு உறுதியளித்தனர்.

00000

அருந்ததியும் இப்போது இருபது வயதுகளைக் கடந்துகொண்டிருக்கிறாள். குமாருக்குப் பதின்மூன்று வயதுதான் ஆகிவிட்டிருந்தது. அவன் இன்னும் கட்டைக் காற்சட்டையோடுதான் சுற்றிக்கொண்டிருந்தான். தந்தையில்லாத நிலையில் தாய் லீலாவே, அருந்ததிக்கு நல்ல வரன்களைத் தேட வேண்டிய சூழ்நிலையில் இருந்தாள். லீலா தேடிய பல வரன்களில் அருந்ததியின் தலையெழுத்து ரகுவோடுதான் அமைந்திருந்தது. ரகு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். இருந்தாலும் அருந்ததியோடும் அவளது குடும்பத்தோடும் ஐக்கியமாகிவிட்டான். குமாரையும் தனது செலவில் நன்றாகப் படிக்க வைத்தான். பல்வேறு கவலைகளுடன் மன அழுத்தத்திலிருந்த லீலா கடவுளின் கிருபையால் இக்காலங்களில் சற்று நிம்மதியாக இருந்தாள்.  

குமாரும் இப்போது வளர்ந்துவிட்டான். அயல் நகரங்களுக்குச் சென்று படித்து வந்ததால் அவனுக்கு ஊரில் மட்டுமல்லாமல் வெளியிலும் அதிகமான நண்பர்கள் இருந்தனர்.

ரகு - அருந்ததி தம்பதியினருக்கும் ஆஷா, நிர்மலா, அருண் என்று மூன்று பிள்ளைகள். மூவரும் நன்றாகப் படித்து வந்தார்கள். ரகுவும் அருந்ததியின் குடும்பத்தினர் எல்லோரையும் தன் குடும்பத்தினர் போல கவனித்து வந்தார். குமாரும் தனது மருமக்களோடு பாசமாகவே நடந்து வந்தார்.

ரகுவுக்கு, ராம் என்ற ஒரு தம்பி இருந்தார். அவர் வெளிநாட்டில் இருப்பதால் ரகுவின் பிள்ளைகளுக்கு அங்கிருந்து நண்பர்கள் யாராவது நாட்டுக்கு வரும் போது பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகளுக்குத் தேவையான சகல பொருட்களையும் ஆடைகளையும் இடைக்கிடையே அனுப்பி வைப்பார். வெளிநாட்டுப் பொருட்களையும் ஆடைகளையும் பெற்றுக்கொண்ட பிள்ளைகள் மூவரும் மகிழ்ச்சியடைவார்கள்.

00000

கடும் முயற்சிகளுக்குப் பின்னர் குமாருக்கும் தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைத்துவிட்டதில் லீலாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். குமாரும், தனக்குக் கிடைக்கும் சம்பளத்தில் ஒருபகுதியை வீட்டுச் செலவுகளுக்காக லீலாவின் கையில் கொடுத்துவிடுவான்.
 
இப்படி மிகவும் ஒற்றுமையாக இருந்த கூட்டுக் குடும்பத்துக்குள் குமாரின் நண்பன் சடாட்சரனின் தலையீட்டினால் குழப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. அவன் தீட்டிய சதித்திட்டங்களில்; முதன்மையானது குமாரை எப்படியாவது தனது தங்கை விஜிதாவுக்கு கட்டி வைக்க வேண்டும் என்பதாக இருந்தது. சடாட்சரன் கட்டம் போட்டு திட்டம் தீட்டினான்.
 
விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் குமாரை அடிக்கடி அழைத்து, தனது வீட்டுக்குக் கூட்டிச் செல்வான். சடாவின் சதி வலை தெரியாத குமாரும், கூப்பிடும் போதெல்லாம் அவனின் வீட்டுக்குச் செல்வான். எப்படியோ சடாவின் திட்டங்களைத் தெரிந்துகொண்ட லீலாவுக்கு இது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. குமார், தாயார் சொல்வதைக் கேட்டால் தானே. அவனுக்கும் விஜிதாவோடு காதல்! நண்பன் சடாவின் பெரு முயற்சியில் கலியாண ஏற்பாடுகள் தடல் புடலாக நடைபெற்றன. தாயாரின் விருப்பத்துக்கு மாறாகவே குமார், விஜிதாவின் கரம் பற்றினான். பின்னர் இந்தத் தம்பதியினருக்கு கமல் என்ற மகன் பிறந்தான். இக்காலங்களில் சடாவும் விஜிதாவும் சொல்வதையே குமார் வேத வாக்காகக் கேட்டு வந்தான். தாயார் லீலாவின் கண்களுக்குள் பொத்தி வளர்த்த குமாரை இப்போது காண முடியவில்லை. லீலாவுக்கும் அதுபெருங் கவலையாகவே மாறியிருந்தது.
 
விஜிதாவுக்கு தனது கணவனின் குடும்பம் என்றால் ஒரு வகையான ஒவ்வாமை. கொரோனாவைவிடக் கொடூரமான விசக் கிருமிகளாகவே அவர்களைப் பார்ப்பாள். தாயைப் போன்ற பிள்ளை, சிறுவன் கமலும் தனது அப்பம்மா, அத்தை வீட்டார்களை ஒரு தீண்டத்தகாத குடும்பமாகவே பார்த்து வந்தான். சடாவுக்கும் விஜிதாவுக்கும் குமார் அவனது தாய் வழிக் குடும்பத்தார்களுக்கு செலவழிப்பது பிடிப்பதில்லை. அந்தக் குடும்பத்துக்காக தனது வீட்டிலிருந்து ஒரு சதமும் போய்விடக் கூடாது என்பதில் சடாவும் விஜிதாவும் கவனமாக இருந்தார்கள்.
 
00000

குமார் மாமா தனது வீட்டுக்கு வருவதில்லை என்று அருந்ததியின் பிள்ளைகள் மிகவும் கவலைப்பட்டனர். அவர்களால் குமார் மாமாவின் மாற்றத்தைத் தாங்க முடியவில்லை. பிஞ்சு மனங்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் குமார் மாமாவிடமிருந்து பொருட்களைவிட அதிகமான அன்பையே எதிர்பார்த்தார்கள். விஜிதா மாமியின் வருகைக்காகவும் அவர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். குமாரின் மாற்றங்களினால் லீலாவும் அருந்ததியும் மிகுந்த கவலையுடனேயே இருந்தார்கள். இருந்தாலும் ரகுவிடம் இதைப்பற்றி அவர்கள் வாய் திறக்கவில்லை.
 
காலம் தன்பாட்டில் பறந்துகொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் ரகு மாரடைப்பால் இறந்துவிட்டார். அந்தக் கூட்டுக் குருவிக் குடும்பத்தில் கல்லெறிபட்டது போல எல்லோரும் மனம் சிதைந்து வாடினார்கள். மிகுந்த மனத்துயரோடிருந்த அருந்ததியும் ரகு இறந்து, இரண்டு மாதங்களிலேயே சுகவீனமடைந்து இறந்துவிட்டாள். பிள்ளைகள் மூவரும் அநாதையாகிய நிலையில் அவர்களை ஆச்சி லீலாவே ஆறுதல்படுத்தினாள். குமார் ஓரிரு தடவைகள் வந்து எல்லோரையும் பார்த்துவிட்டு லீலாவின் கையில் சிறிய தொகைப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

அருந்ததியின் பிள்ளைகள் அநாதையாக நிற்பதைக் கண்ட சடா, குமாரின் மனதை மீண்டும் கிளறிவிட்டான். லீலாவுக்கு குமார் கொடுக்கும் காசில் அருந்ததியின் பிள்ளைகள் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதை சடா விரும்பவில்லை. விஜிதாவுக்கும் இது ஒரு பெரிய சுமையாகவே தென்பட்டது. காரணமேயில்லாமல் ஏற்கனவே வெறுத்துக்கொண்டிருந்த அவர்களுக்கு அருந்ததியின் பிள்ளைகளின் இந்த நிர்க்கதி நிலை மேலும் எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இந்த இக்கட்டான நிலையில் கூட விஜிதா அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று மனம் இளகவில்லை. அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைக்கவுமில்லை.

யார் செய்த செய்வினையோ லீலாவும் ஒருநாள் அறுபத்தாறு வயதைக் கடந்த நிலையில் மயக்கமடைந்து கீழே விழுந்து, அவசரமாகவே இறந்து போனாள். இருபது வயதுகளைக் கடந்திருந்த நிலையிலும் அருந்ததியின் பெண் பிள்ளைகள் இருவரும் குழந்தைகளைப் போல அழுது புலம்பினார்கள். அருணுக்கும் துக்கம் தாங்க முடியவில்லை. நாட்களின் நகர்வில் மூன்று பிள்ளைகளும் கவலைகளைத் தாங்கிக்கொள்ளப் பழகிக்கொண்டனர்.

இப்போது இந்தப் பிள்ளைகள் மூவரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க பெறும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் சிலபொழுதுகளில் பசியோடும் பட்டினியோடும் வாடினார்கள். தனது தங்கையின் பிள்ளைகள் என்ற ஒரே காரணத்திற்காக குமார் மாமா அவ்வப்போது கொஞ்சம் பண உதவிகளைச் செய்தார். ஆனால் அது சடாவுக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே அவன் வழமை போன்று குமாருக்கு ஒரு ஆலோசனையை முன் வைத்தான்.
 
"மச்சான் பேசாமல் அந்தப் பிள்ளைகள் மூவரில் ஒருவரை ரகுவின் தம்பியின் வீட்டுக்கு அனுப்பி வை.." என்று சொல்லிக் கொடுத்தான்.
 
அதைச் சரியாக கேட்டுக்கொண்ட குமார், அருந்ததியின் இரண்டாவது பிள்ளையான நிர்மலாவை நீர்கொழும்பிலுள்ள ரகுவின் தம்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ஆஷாவுக்கு வீட்டுக் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு வெளிநாட்டுக்குப் போகும்படி குமார் மாமா கூறினார். ஆஷாவோ தன்னால் அது முடியாது என்றும், தனது தாயார் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெண்கள் வெளிநாட்டுக்குப் போகக் கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் கூறி மறுத்துவிட்டாள்.
 
அக்காலத்தில் அருண் சாதாரண தரம் எழுதிவிட்டு வீட்டிலிருந்தான். அவனையும் குமார் மாமா உயர்தரம் கற்க விடாமல் தொழினுட்பக் கல்லூரியில் சேர்ந்துகொள்ளும்படி சொன்னார். குமார் மாமாவின் திட்டத்தை விளங்கிக்கொண்ட ஆஷா, தம்பி அருணுக்கு தொழினுட்பக் கல்லூரிக்கு போகாமல், உயர்தரம் கற்கும்படி இரகசியமாக சொல்லிக் கொடுத்தாள். இதற்கிடையில் ஆஷாவின் தங்கை நிர்மலாவும் ரகுவின் தம்பி ராம் சித்தப்பா வீட்டில் சித்தியுடனும் அவர்களது பிள்ளைகளோடும் இருந்தது போதும் என்று, வீட்டு நினைவுகளில் மனம் கலங்கி வீட்டுக்கே வந்துவிட்டாள்.

இதனைக் கேள்விப்பட்ட சடாவுக்கு மிகவும் கோபமாக இருந்தது. குமாரை அழைத்து இன்னும் ஒரு தந்திரத்தை முன்வைத்தான். சடாவின் ஆலோசனையின் பேரில், குமார் தனது ஒரே தங்கை அருந்ததியின் குடும்பத்தை அயலூரில் குடியமர்த்திவிட்டான்.
 
"பிள்ளைகளே நீங்கள் எந்த ஒரு விசயத்துக்கும் பயப்படாதீங்க.. உங்களுக்கு எது வேண்டுமானாலும் இந்த மாமா இருக்கிறேன். நான் அடிக்கடி வந்து உங்களைக் பார்த்துக்கொள்வேன். ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் இனி எனக்கு கோல் மட்டும் எடுத்துறாதீங்க.. ஏனென்றால் விஜிதா மாமிக்கு உங்கட கோலக் கண்டாலே தலைவலி வருமாம். பிள்ளைகள் கவனமாக இருங்கள். அப்போ நான் வாரேன்.." என்று அன்பொழுகுவது போல பேசிவிட்டு அவர்களை அங்கேயே விட்டுவிட்டு குமார் வந்துவிட்டான். மாமாவின் வார்த்தைகளை நம்பிய அவர்களும் பேசாமல் அயலூரில் இருந்துவிட்டார்கள்.

குமார் என்னதான் செய்தாலும் சொன்னாலும் உறவுகளைத் துண்டிக்கத்தான் முடியுமேயொழிய வேரோடு பிடுங்கி  எறிந்துவிட முடியாது என்பது அவனது மனதை உறுத்திக்கொண்டிருந்தது!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


15. பொறாமை - (சிறுகதை)

15. பொறாமை - (சிறுகதை) 


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


எண்ணியும் பார்க்காத சில விடயங்கள் நிகழ்ந்துவிடும்போது மனிதன் தளர்ந்து போகின்றான். மனசும் தளர்ந்து போகின்றது. எழுத்தாளர்கள் என்றால் சமூகத்தின் வழிகாட்டிகள், உத்தம புருஷர்கள் என்று எண்ணிய எண்ணங்களெல்லாம் தவிடுபொடியாகிவிட்டதும் அவனது மனம் மிகவும் துணுக்குற்றது. வேதனையடைந்தது என்பதை விட்டுவிட்டு துணுக்குற்றது என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலும் யாருடன் பழகினாலும் உண்மையில்லை. பெரும்பாலான மனிதர்கள் சுயநலவாதிகளாக இருக்கின்றார்கள் என்பதால் இந்த உலகத்தில் வாழ்வதற்கு பயம் ஏற்படுவது சகஜம்தானே?

விமல் இப்படி நினைப்பதற்குக் காரணமாக அமைந்தது அவனுக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களே. அவன் தன் தொழில் நிமித்தம் உறவுக்காரர் வீட்டில் தங்கியிருந்தாள். அந்த வீட்டின் சொந்தக்காரரான மூர்த்தி, தனது தூரத்து உறவினரான பெரியப்பா ஒருவரின் மகன்தான். தனக்கு அண்ணன் முறையான மூர்த்தி வாசிப்பிலும் சமூக சேவையிலும் மிகுந்த அக்கறை உள்ளவர். அவருக்கு இலக்கியத் துறையில் பெரிதாக ஈடுபாடு இல்லாவிட்டாலும் ஒருசில கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதியிருக்கின்றார். பணம் படைத்தவர் என்பதால் அவர் சொல்லும் கூற்றை ஏற்றுக்கொள்ளும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

விமல் அங்குபோன புதிதில் அவனுக்கு அங்கே பெரிதாக பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. விமலும் ஒரு இலக்கியவாதி என்பதை அப்போது மூர்த்தி பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஷஏதோ கொஞ்சம் கவிதைகளை எழுதிக்கொண்டு இருக்கிறான்| என்பதே அவரது கணிப்பாக இருந்தது. எனவே அவரும் தனது புகைப்படங்கள் வந்த பத்திரிகைகள், கட்டுரைப் பக்கங்கள் என்பவற்றை பெருமையுடன் விமலுக்குக் காட்டுவார்.

விமல் அவரை தனது சொந்த அண்ணனாகவே நினைத்தான். அவரது எழுத்துப் பணிகளிலும் அவருக்கு அவ்வப்போது உதவுவான். விமலின் புத்தக வெளியீடு ஒன்றில் கலந்துகொண்டு பிரதியைப் பெற்றுக்கொண்ட மூர்த்தி, விமலின் இன்னொரு தொகுதியைத் தனது பதிப்பகத்தின் மூலம் தான் வெளியிட்டுக் கொடுப்பதாகக் கூறினார். அந்த விழாவின்போது மேடையில் வைத்தே பல பேர் முன்னிலையில் மூர்த்தி இதனைச் சொல்லியிருந்தார். மூர்த்தியின் நண்பரது வேண்டுகோளுக்கிணங்க விமலின் நூலுக்கான அணிந்துரையை தானே எழுதித் தருவதாகவும் ஒப்புக்கொண்டார்.
 
காலப்போக்கில் விமலின் திறமையும், வளர்ச்சியும் மூர்த்திக்குத் தெரிந்தபோது அவர் பொறாமையுடன் செயற்பட ஆரம்பித்தார். தனது பொது வேலைகள் பலவற்றையும் விமலிடம் ஒப்படைத்துவிடுவார். ஒருசில தகவல்களை மாத்திரம் சொல்லிவிட்டு, முழுக்கட்டுரையையும் எழுதும்படி உத்தரவிட்டுச் செல்வார். வேறு சில எழுத்துப் பணிகளையும் கொடுத்து குறுகிய நேரத்தில் செய்து தரும்படி கட்டளையிடுவார்.

மூர்த்தியின் பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. தனது சொந்தத் தம்பி போல் எண்ண வேண்டிய விமலை எதிரி போல எண்ணத் தொடங்கினார். விமல் தனது புத்தகத்தை தயார்படுத்தி அணிந்துரைக்காக அவரிடம் கொடுத்தபோது அதை அவர் தூக்கியெறிந்தார். அந்தப் புத்தகத்தை அவர் பலர் முன்னிலையில் சொன்னதுபோல் கடைசிவரை வெளியிட்டுக் கொடுக்கவே இல்லை.

ஒரு வீட்டில் இரு துருவங்களாக இரு எழுத்தாளர்கள். வெளியில் யாரும் அறிந்தால் எத்தனை அவமானம் என்று விமல் தனக்குள்ளே எண்ணிக்கொள்வான். ஏனெனில் எவரேனுமொருவரின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றால் விமலுக்கும் மூர்த்திக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்படும். அவ்வாறு அழைப்பவர்கள்,

"விமல் நீங்கள் மூர்த்தி அண்ணன்ட வாகனத்திலயே வந்திடலாம்தானே. அப்புறம் லேட் ஆகும் என்ற காரணம் எல்லாம் சொல்ல வேண்டாம்" என்று சொல்லுகையில் விமலுக்கு என்னவோ போலிருக்கும்.
 
ஆனால் மூர்த்தியோ, "ஆமா.. அதுக்கென்ன. என் வாகனத்தில வந்தா லேட் ஆனாலும் பிரச்சினல்லதானே. வீட்டுக்கே வந்திரலாமே.." என்று அவர்களது முன்னால் சொல்லுவார்.

அந்த விழாவுக்கு போகாமல் இருக்கலாம் என்று விமல் ஏற்கனவே எண்ணியிருந்தாலும் மூர்த்தியின் பதிலால் கட்டாயம் போக வேண்டியிருக்கும். சிலவேளைகளில் மூர்த்தி சொன்னதுபோல அந்த விழாவுக்குப் போவாரா அல்லது போகமாட்டாரா என்று தெரியாமல் திண்டாட வேண்டியிருக்கும். மூர்த்தியின் மகனிடம் தூதுவிட்டு ஷஅண்ணன் வருவாரா அல்லது பஸ்ல போகவா?| என்று கேட்கும் சந்தர்ப்பங்களும் பல தடவை ஏற்பட்டதுண்டு. ஏனெனில் போகாவிட்டாலும் குறித்த எழுத்தாளரை அகௌரவப்படுத்துவது போலாகிவிடும். பஸ்ஸில் சென்ற பின் மூர்த்தி அண்ணன் வந்தாலோ அவரை அவமானப்படுத்திவிட்டதாக ஆகிவிடும். இப்படி இருதலைக்கொள்ளி எறும்பாக அவன் படும்பாடு மனதுக்கு சித்திரவதையாக இருக்கும்.

ஒருநாள் விமல் வேலைவிட்டு வரும்போது அவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவனது உடைகள் தாறுமாறாக அங்குமிங்கும் பரவிக் கிடந்தன. அது பரவாயில்லை. தான் நேசிக்கின்ற புத்தகங்களும் வீசப்பட்டுச் சிதறிக் கிடந்தன. அதைப் பார்த்தவனுக்கு அழுகை முட்டியது. தொண்டை அடைத்தது. ஓடிச் சென்று அவற்றை எடுத்து அடுக்கத் தொடங்கினான்.

அவன் பின்னால் யாரோ வந்து நிற்கும் அறிகுறி தெரிந்தது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான் விமல். மூர்த்தியின் மனைவி அனுதாபமாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு விமலுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. எனவே ஒரு வாரத்துக்குள் விமல் வேறு ஓர் இடம் பார்த்துக்கொண்டு அவர்களிடமிருந்து விடைபெற்றான்.

அதன் பிறகு பயணங்கள் செல்லும் போது எதேச்சையாக மூர்த்தி, விமலைப் பார்த்துவிட்டால் விமலுடன் எதுவுமே கதைக்காமல்; பாதையால் மறுபக்கம் மாறிச் சென்றுவிடுவார்.
 
சில நேரங்களில் விமல் அவனது நண்பர்களுடன் செல்லுகையில் மூர்த்தியைக் கண்டால் 'அவர் கதைக்கமாட்டார்' என்றெண்ணி பராமுகமாக கடந்து செல்ல நேரிட்டால் அவரே பாதையைக் கடந்து வந்து, "தம்பி எப்படி நலமா?" என்று பேசிவிட்டுச் செல்வார். அப்படி அவர் இரண்டு முகம்கொண்டு நடிக்கும்போது அனலிடை அகப்பட்ட புழு போல விமலின் மனது துடிக்கும்.

தனது நண்பர்களின் முன்னால் இவர் இரட்டை வேடமிட்டால் விமல் சொல்பவைகள்தான் பொய் என அவனது நண்பர்கள் நினைக்க மாட்டார்களா? அவர்கள் அப்படி எண்ணிவிட்டால் அதைவிட வேறென்ன அவமானம் வேண்டியிருக்கின்றது. கோபம், பொறாமை ஆழ்மனசில் பதிந்து போயிருக்கிறது என்றால் அதை அப்படியே வெளிக்காட்ட வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு இப்படி நடிப்பதில் என்ன தேவை இருக்கிறது மூர்த்தி அண்ணனுக்கு?

00000
 
ஒரு பிரபலமான பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் சண்முகம் என்பவர் ஆரம்ப காலத்தில் விமலின் படைப்புகளைத் தொடர்ந்து பிரசுரித்தார். நாட்கள் நகர்ந்து வருடங்கள் கழிந்தன. இதற்குள் விமலின் எழுத்து முயற்சிகள் வெற்றிகரமாக நிகழ்ந்து கொண்டிருந்தன. புத்தக வெளியீடுகள், நேர்காணல்கள், சஞ்சிகை வெளியீடுகள் என அவனால் ஆனவற்றை அவன் மிகவும் ஆர்வமாக செய்துகொண்டிருந்தான்.

புதிதாக அவன் சிறுகதை எழுத ஆரம்பித்திருந்தான். அதை வாசித்தவர்கள் அவனைப் பாராட்டினர். சிலர் அதில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தனர். இன்னும் சிலர் அவை தரமாக இருப்பதாகச் சொன்னார்கள். அவனது வளர்ச்சியை இனங்கண்ட சண்முகத்துக்கும் பொறாமை தொற்றிக்கொண்டது.
 
அவனது பல ஆக்கங்கள் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. இதற்கு பல பத்திரிகை ஆசிரியர்கள் களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றார்கள். சில சிறுகதைகளுக்கு தேசிய மட்டத்திலும் ஒருசிலவற்றுக்கு சர்வதேச மட்டத்திலும் பரிசுகள், விருதுகள் கிடைத்திருக்கின்றன. காலப்போக்கில் சண்முகம் பணிபுரியும் பத்திரிகைக்கு விமல் அனுப்பிய ஒரு சில கவிதைகளையும் சிறுகதைகளில் ஒன்றையும் தவிர வேறு எதனையும் சண்முகம் பிரசுரிக்கவில்லை. அதைப் பற்றிக் கேட்டால்,
 
"அனுப்பினீர்களா? இன்னும் கிடைக்கவில்லை. நான் பார்க்கவில்லை.."

"இன்னொரு முறை அனுப்புங்கள்.." என்று சொல்லிக் கொண்டிருந்தார். விமலும் எதையும் பொருட்படுத்தவில்லை. மீண்டும் மீண்டும் ஆக்கங்களை அனுப்பிக் கொண்டிருந்தான். முன்னர் அனுப்பிய சிறுகதையை வேறு பத்திரிகைக்கு அனுப்பி அப்பத்திரிகையில் அக்கதை பிரசுரமாகியும்விட்டது. ஆனால் சண்முகத்துக்கு அனுப்பும் ஆக்கங்கள் எதுவும் பிரசுரமாகவேயில்லை. பொறுமை இழந்த விமல் இது குறித்து மீண்டும் தொலைபேசியில் விசாரித்தபோது,

"தபாலிலா அனுப்பினீர்கள். இதுவரை எனக்குக் கிடைக்கவில்லையே"

"இல்லை ஈமெயிலில்தான் அனுப்பினேன்."

"ஈமெயிலா அனுப்பினீர்களா? நான் இதுவரை அதனைக் காணவில்லையே. அப்போ சிலநேரம் தவறுதலாக அழிந்திருக்கும்.."

இப்படி பொடுபோக்கான பதில்களையே சொன்னார் சண்முகம்.

'அழிந்திருக்கும்' என்ற சொல் எத்தனை அலட்சியமாகச் சொல்லப்பட்ட சொல்? ஈமெயிலில் அனுப்பியவை நாமாக அழிக்காமல் தானாக அழியுமா? சண்முகத்தின் உள்ளத்தில் பொறாமைத்தீ எரிந்து கொண்டிருந்ததைத் தெரியாமல் அப்பாவியாகச் சிந்தித்தான் விமல்.

"அப்போ மீண்டும் தபாலில் அனுப்பவா?"  என்று விமல் கேட்கும் முன்பே தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
 
சிறுகதையில் வல்லவர்களாக கருதப்படும் மூத்த எழுத்தாளர்கள் கூறிய திருத்தங்களையும் உள்ளடக்கியே விமல் அந்தச் சிறுகதைகளை பத்திரிகைக்கு அனுப்பியிருந்தான். அப்போ விமலின் சிறுகதையை வாசித்துத் திருத்தியவர்கள் எல்லாம் எழுத்தாளர்களே இல்லையா? எப்படி இந்தக் கதைகளுக்குப் பல பரிசுகள் கிடைத்தன? பொறாமையின் நிமித்தம் எழுத்தாளர்களை மதிக்காத சண்முகம் போன்ற சிலர் இலக்கிய உலகத்துக்குள் இருக்கிறார்கள் என்ற பேருண்மை விமலுக்கு விளங்கியது அன்றுதான்.
 
மற்றவர்களுடன் பொறாமைக் குணம் கொண்டு வாழ்பவர்கள் எழுத்தாளர்களாக இலக்கியவாதிகளாக இருப்பதற்கு தகுதி உடையவர்கள்தானா? இது போன்றவர்களை இலக்கிய உலகம் இன்னும் தனக்குள் வாரியணைத்துக் கொண்டிருப்பது அதிசயம்தான்.
 
00000

ஒரு தடவை பத்திரிகையொன்றில் ஆய்வு  நூல்களுக்கும் மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் விருது வழங்குவதாகச் சொல்லி நூல்களைப் பகிரங்கமாகக் கோரியிருக்கிறார்கள். விமலும் பத்திரிகையில் இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து மேலதிக விபரங்களை தொடர்பாளருடன் கதைத்துத் தெரிந்து கொண்ட பின்னர் தனது ஆய்வு நூலையும் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தான்.

அந்தப் புத்தகம் தொடர்பாளரின் கையில் கிடைத்த பின்னர், அவர் விமலை வேறொருவருக்கான பாராட்டு விழாவில் சந்தித்து தனிப்பட்ட முறையில் ஷஒரு நேரடி நேர்காணல்| செய்திருந்தார். இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலானவை விமலின் பொருளாதாரம், தொழில் சம்பந்தப்பட்டவையாகவே இருந்தன. விமலின் குடும்பத்தாரது நிதி நிலவரங்கள் எல்லாம் அலசி ஆராயப்பட்டன. பாவம் அவன் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன், உண்மைகளையே சொல்லிவிட்டதால் குறிப்பிட்ட நூல் தேர்வுக் குழுவுக்கே போகவில்லை.

இவ்வாறான நபர்களிடையே புத்தகம் போடுபவர்கள் பணக்காரர்களாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. அப்படியானால் மட்டுமே தேர்வுக் குழுவினரின் கைகளுக்குக்கூட நூல்கள் போகும். இது என்ன நியாயமோ? அப்படியே அந்த தொடர்பாளர் எதிர்பார்ப்பது போல அவருக்கு 'கையூட்டு' கொடுத்து விருது பெற விமல் தயாராகவும் இல்லை.

இதனைவிட குறிப்பிட்ட நிறுவனத்துக்கு விமல் தொலைபேசி அழைப்பை எடுத்து தனக்கு நிகழ்ந்த அநீதியை தெளிவுபடுத்தியபோது அந்த நிறுவனர், ஷமை கார்.. மை பெற்றோல்.. மை இஷ்டம்..| என்ற தோரணையில் தாங்கள் நினைத்தவர்களுக்குத்தான் விருது வழங்குவதாகவும், தாங்கள் நினைத்ததைத்தான் இதற்குப் பிறகு செய்வதாகவும் உறுதியாகக் குறிப்பிட்டார். இதனை ஒரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டு வருவதுதான் சரியில்லை என்றும் சொன்னார்.

அப்படியாயின் ஏன் இவர்கள் பத்திரிகை வாயிலாக விருதுக்கு விண்ணப்பம் கோருகிறார்களோ தெரியாது. விருது வழங்கும் விடயத்தை பொதுமைப்படுத்திக் காட்டி, ஏன் இப்படி ஊரை ஏமாற்ற வேண்டும்? பேசாமல் தனக்குப் பிடித்தமானவரை அழைத்து நேரடியாகவே விருதைக் கொடுக்கலாம்தானே.

விமலுக்கு இவ்வாறான இலக்கிய பூதங்களை நினைத்து மிகவும் வியப்பாக இருந்தது. ஆனாலும் இவர்களுக்கிடையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது.
 
ஒருவன் எழுத்தாளனாக இருப்பதைவிட முதலாவது மனித நேயம்மிக்க மனிதனாகத்தானே இருக்க வேண்டும்? நல்ல மனங்கொண்டு மற்றவர்களின் முன்னேற்றத்துக்கு ஏணி வைப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. அவர்களுக்காக தனது மனதால் பிரார்த்தித்துக் கொண்டான் விமல்.

இலக்கிய உலகத்தில் மாத்திரமின்றி பொதுவாகவே இவ்வாறான பலர் நம் மத்தியில் உலாவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் யார் தூயவர்? யார் தீயவர்? என்று அறிந்துகொள்வதற்கு விமலுக்கு தனது அனுபவங்களே துணை நிற்கின்றன.
 
விமலுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் அவரவர் அனுபவங்களே நல்ல ஆசான்களாக அமைந்துவிடுகின்றன!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்





14. கர்மா - (சிறுகதை)

14. கர்மா  - (சிறுகதை) 


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


மாலாவின் நினைவுத் திரையில் பழங்கால நினைவுகள் தோன்றிக்கொண்டிருந்தன. அன்று நடந்த விடயங்களை அவளால் அப்படி இலேசாக மறந்துவிட முடியாது. திருக்குறள் ஸ்டைலில் பிளேஷ்பேக்கை இரண்டு வரிகளில் நினைக்க முடியுமா என்ன? மாலா அந்த நாள் நினைவுகளில் மூழ்கிப் போனாள்.


00000

பத்மசீலன் - சங்கீதா தம்பதியினருக்கு சீலா, மாலா என்று இரண்டு பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்தார்கள். பத்மசீலன் மொத்த வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு ஆண் பிள்ளைகள் இல்லை என்பது ஒரு மனக் குறையாகவே இருந்தது. இருந்தாலும் சங்கீதா தனது கவலையைக் காட்டிக்கொள்ளாமல், "என்னங்க நீங்க.. இந்த வயசிலயும் ஆண் பிள்ளைகள் இல்லை என்று தேவவையில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீங்க. மகள்கள் இரண்டு பேரையும் கலியாணம் கட்டிக்கொடுத்தால் எங்கள் வீட்டுக்கு வருகின்ற மருமகன்களை நீங்கள் மகன்களாகப் பார்த்துக்கொண்டால் உங்கள் பிரச்சினை முடிந்துவிடும்.." என்று அவரைச் சமாதானப்படுத்துவாள்.

பத்மசீலன் இரண்டு மகள்களுக்கும் நல்ல வரன்களைத் தேடிக்கொண்டிருந்தார். அதில் மருமகனாக வர நினைப்பவர்கள் எல்லோருக்கும் பத்மசீலன் வசித்து வந்த இரண்டு தட்டு மாடி வீடே கண்களில் மின்னிக்கொண்டிருந்தது. அந்த அழகான வீட்டை முழுமையாக சீதனமாகப் பெற்றுக் கொள்வதே பல மாப்பிள்ளைமாரின் குறிக்கோளாக இருந்தது.

கடைசியாக மாலாவின் அக்கா, சீலாவுக்கு நரேன் மாப்பிள்ளையாக வந்து சேர்ந்தார். நரேன் உண்மையில் ஒரு அப்பாவி. அவன் சில பல வியாபாரங்களைச் செய்து வந்தான். நரேன் சீதனம் பெற வேண்டும் என்ற நோக்கில் சீலாவைத் திருமணம் முடிக்கவில்லை. ஆனாலும் மாமனார் வீட்டில் அரைவாசியை சீலாவின் பெயருக்கு சீதனமாக எழுதிக்கொடுத்தார். காலம் தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தது. சீலாவுக்கும் இப்போது ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். நரேன் - சீலா தம்பதிகள் யாருக்கும் எந்தத் தொல்லையுமில்லாமல் அந்த மாடி வீட்டில் வசித்து வந்தார்கள். மாமனாரின் எதிர்பார்ப்புப் போல, மருமகனாக அல்லாமல் மாமனாரின் மகனாகவே நரேன் நடந்துகொண்டார்.
 
இதற்கிடையில் மாலாவுக்கும் பல வரன்கள் பார்த்தாயிற்று. அதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று, அரச அலுவலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராகப் பணிபுரியும் ரவியை மிகவும் கஷ்டப்பட்டுப் பேசி முடித்தாயிற்று. ரவியின் குடும்பத்தினர் நல்லவர்கள். கலியாணப் பேச்சுவார்த்தையின் போது சீதனம் ஆதனம் என்று ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அதனால் மாலாவின் பெற்றார், ரவியும் அப்படித்தான் நல்லவனாக இருப்பான் என்றே நம்பினர்.
 
ரவி படித்த மாப்பிள்ளை என்பதால் தனது கடைசி மகள் மாலாவின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று பெரிதாகச் செய்தார்கள். ஊரார், உறவினர்கள் என்று யாரையும் விடாமல் திருமணத்துக்கு எல்லோரையும் அழைத்திருந்தார்கள். திருமண விருந்தும் உயர் ரகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான அன்பளிப்புப் பொதியொன்றையும் வழங்கி வைத்தார்கள் மாலாவின் பெற்றார். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோருக்கும் அவர்களைப் புகழ்ந்து தள்ளினார்கள்.

முதல் நாளே மாலாவுக்கு, ரவி கொஞ்சம் கடுமையான பேர்வழி என்ற விடயம் விளங்கியது. இருந்தாலும் அவள் தனது பெற்றாரிடம் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. கௌதம் மேனன், மணிரத்தினம் படங்களில் வரும் ஸ்டைலில் 'பிக்கப் லைன்' எல்லாம் பேசி ரவியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தெரியாமல் விழித்தாள் மாலா.
 
ஒரு வருடம் கடந்து சென்ற நிலையில் ரவி - மாலா வாழ்ந்ததற்கான அடையாளமாக அழகான பெண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்தாள். ஆஸ்பத்திரிக்கு வந்து தனக்கு பெண் குழந்தைதான் கிடைத்தது என்பதைத் தெரிந்து கொண்ட ரவியின் முகம் கடுப்பாக மாறியது. தனக்கு எந்த சம்பந்தமுமில்லாமல் மனைவி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது போல அவன் தனது கோபத்தை மனைவிக்கு வெளிக்காட்டினான்.
 
"ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ இறைவன் தந்துள்ள அன்பளிப்பை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே.." என்று மாலா தயங்கியபடியே ரவியிடம் கூறினாள்.

ரவியோ முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டு ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டான். காலம் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. மாலா இரண்டாவது குழந்தையாகவும் பெண் குழந்தையையே பெற்றெடுத்தாள். ரவிக்கு கடுமையான கோபம். இம்முறையும் தோற்றுப் போன ஒரு உணர்வில் அவன் இருந்தான். இப்போது தனது கோபத்தை மாமனார் மாமியாருக்கும் கொஞ்சம் விளங்கும்படி காட்டிவிட்டான். சம்பளத்தில் மனைவிக்கு கொடுக்கும் காசை ஒழுங்காகக் கொடுக்காமல் குறைத்துக்கொண்டான். இரண்டு பிள்ளைகளுக்கும் பால்மாப் பெட்டிகளை வாங்குவதற்கு தனது தந்தையாரிடம் காசு கேட்க வெட்கப்பட்டாள் மாலா. வேறுவழியில்லாமல் தனதும் பிள்ளைகளதும் அத்தியாவசியத்  தேவைகளுக்கு காசு இல்லாமல் தந்தையின் தயவையே நாடி நின்றாள் அவள். பத்மசீலனும் தனது பாசத்துக்குரிய செல்ல மகள் மாலாவின் வாழ்க்கையை நினைத்து எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார். மாலாவின் தாய் மிகுந்த கவலையோடு கண்கள் கலங்கிப் போனார்.

இறைவனின் சோதனை யாரைத்தான் விட்டது. மூன்றாவதாகவும் மாலா அழகானதொரு பெண் குழந்தையையே பெற்றெடுத்தாள். இதனைக் கேள்விப்பட்ட ரவி இந்த முறை ஆஸ்பத்திரிக்குச் சென்று மாலாவையும் குழந்தையையும் பார்க்கவில்லை. பெண் குழந்தைகளை ஒரு அபசகுனமாகவே பார்த்தான் அவன். தனது செல்வம் முழுவதையும் ஏப்பமிட இந்தப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளார்கள் என்றே ரவி நினைத்தான் போலும். மனைவிக்கு நேரடியாகக் காட்டி வந்த கோபத்தை இப்போது மாமனாருக்கும் முழுமையாகக் காட்டி நின்றான் அவன். தனக்கு சீதனமாகத் தந்தது போதாது என்று கூறி இன்னும் ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்கித் தரும்படி இம்முறை மாமனாரை எச்சரித்தான். மாலாவின் முழுக் குடும்பத்தவர்களும் மிகவும் கவலையோடு இருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ரவியைச் சமாளிப்பது ஒரு பெரிய சவாலாகவே இருந்தது.
 
நான்காவது தடவையாகவும் மாலா கர்ப்பமானாள். இந்த முறை ரவி, மாலாவின் கர்ப்பத்தைக் கலைக்கும்படி வற்புறுத்தி நின்றான். செய்வதறியாமல் மாலா தடுமாறினாள். தனது தாயிடம் விபரத்தைக் கூற, தாயார் இரகசியமாக மாலாவுக்கு ஒரு விடயத்தைச் சொன்னார். தாயார் சொல்லித் தந்த விடயத்துக்கு ஒப்ப கொஞ்ச நாளைக்காவது ரவியுடன் சண்டையில்லாமல் வாழலாம் என்று அமைதியாக இருந்தாள் மாலா. நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இந்த விடயத்தை ரவியிடம் மறைக்க முடியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று அவள் மௌனமாக இருந்தாள். இதற்கிடையில் மூடிமறைத்த பரம இரகசியத்தைக் கண்டுபிடித்த ரவி, தனக்குத் தெரிந்த ஒளடதங்களையெல்லாம் மாலாவுக்கு வாங்கிக் கொடுத்தான். மாலா குடிப்பது போல பாசாங்கு செய்தாள்.
 
ரவியோடு வாழ்ந்த இந்த நாட்களில் தினந்தோறும் ஒரு பூகம்பமே வெடிக்கும். இந்த நாட்களை அவ்வளவு இலேசாக மாலா மறந்திருக்கமாட்டாள். இது அவளுக்கு ஒரு நரக வாழ்க்கையாகவே அமைந்தது. வயிற்றிலிருக்கும் குழந்தையோடு எஞ்சிய ஆறு மாதங்களையும் அடிதடியோடு கடந்துவிட்டாள் மாலா. அவளின் கண்ணீருக்குக் கிடைத்த பரிசாக இந்த முறை ஒரு அழகான ஆண் வாரிசு கிடைத்திருந்தது. தகவலறிந்த ரவி ஆஸ்பத்திரிக்கு துள்ளிக்குதித்து ஓடோடி வந்தான். குழந்தைக்குத் தேவையான சகல பொருட்களையும் வாங்கிக் கொடுத்தான்.

00000

மாலாவின் பெண் குழந்தைகளான சுமதி, சுபா, மித்ரா ஆகிய மூவரும், ஆண் குழந்தை ஆனந்தனும் இப்போது வளர்ந்துவிட்டார்கள். தனது பெற்றோர்கள் இருவரையும் திடீர் விபத்தொன்றில் இழந்துவிட்ட மாலா மிகவும் மனமுடைந்து போனாள். ரவிக்கும் அது கொஞ்சம் மனக் கவலையாகவே இருந்தது. ஏனென்றால் ரவியின் சம்பாத்தியத்தை எதிர்பார்க்காமல் தமது பேரப் பிள்ளைகளுக்காக பாட்டன், பாட்டி இருவரும் கணக்குப் பார்க்காமல் செலவழித்துள்ளார்கள். தேவைப்படுகின்ற எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அவர்களும் தனது அப்பாவிடம் கேட்காமல் பாட்டனிடமே எதையும் கேட்டு வாங்கியிருந்தார்கள். திடீர் விபத்தில் இறந்துவிட்ட பாட்டன், பாட்டிக்காக எல்லாரும் மனம் உருகி நின்றார்கள்.
இப்போது சுமதியும் இருபத்திரண்டு வயதைக் கடந்து கொண்டிருந்த நிலையில் அவளுக்கு வரன் பார்க்க வேண்டிய தேவை ரவிக்கு ஏற்பட்டது. இக்காலங்களில்தான் தனக்கு யாருமே உதவிக்கு இல்லாத நிலையை ரவி முதன் முதலாக உணர்ந்தான். காலம் உருண்டோடியது. "கர்மா" யாரைத்தான் விட்டது.

மூத்த மகள் சுமதிக்கு பேசிவரும் மாப்பிள்ளைகள் சீதனமாக முழு வீடு வேண்டும் என்றும், இருபத்தைந்து பவுண் நகைகள் வேண்டும் என்றும் ஒவ்வொன்றாகக் கேட்டு நின்றார்கள். ரவிக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. ஆனால் அது என்னவென்று இனம்புரியவில்லை. மிகவும் கவலையோடு இருந்தான். அலுவலகத்தில் ஐந்து வருட காலங்களுக்கு ஷலோன்| போட்டு தனது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் (மாமனாரோடு ஒரு காலத்தில் சண்டையிட்டு வாங்கியெடுத்த) காணியில் ஒரு வீட்டைக் கட்டினான். வீட்டைக் கட்டி முடிப்பதற்கு முன்பே எடுத்திருந்த ஷலோன்| முடிவடைந்துவிட்டது. வாழ்க்கைச் செலவுகள் கூடியிருந்த இந்தக் கால சூழ்நிலையில் ஐந்து பவுண் நகைகளைச் செய்துகொள்வதே பெரும் திண்டாட்டமாக இருந்தது. இதில் மாப்பிள்ளைமார் கேட்பது போல இருபத்தைந்து பவுண் நகைகளைச் செய்வதற்கு காசுக்கு எங்கே போவேன் என்று ரவி தனக்குள் ஆதங்கப்பட்டுக்கொண்டான்.
 
தனது எல்லா நண்பர்களிடமும் சிறு சிறு உதவிகளைக் கேட்டு ஒருமாதிரி ஐந்து பவுண் தங்க நகைகளையும் செய்து வைத்தான். இப்போதுகளில் ரவி, மாலாவோடு சண்டை பிடிப்பதில்லை. தனது மனக்கவலைகளை அவளிடமே கொட்டித் தீர்ப்பான். அவளும் ஆயிரம் இருந்தாலும் தனது கணவன் தானே என்று ரவிக்கு மிகவும் ஆறுதலாக இருப்பாள். ரவியை மிகவும் அன்போடு கவனித்துக்கொள்வாள்.

ரவி தனது குடும்பத்தவர்களிடம் கேட்டுப் பார்த்ததில் அவனுக்கு மூன்று இலட்சங்கள் காசு கிடைத்தது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுமதிக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்தார். கலியாணத்தையும் சிறிதாகவே செய்து முடித்து ரவி நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.

இனி அடுத்த மகள் சுபாவுக்கும், கடைசி மகள் மித்ராவுக்கும் வரன்கள் பார்க்க வேண்டும். பொறுப்பான ஒரு தந்தையாக ரவி யோசித்துக்கொண்டிருந்தார். தனது பழைய கால நினைவுகள் தனக்குள் ஞாபகம் வரும் போது ரவியின் மனம் கூனிக்குறுகும். முன்னைய காலங்களில் தான் மாமனாரோடும் மனைவியோடும் நடந்துகொண்ட விதத்தை நினைத்து இப்போதுகளிலெல்லாம் ரவி மிகவும் கவலைப்படுவார். விடுமுறை நாட்களில் அதிகமான நேரத்தை கோவிலிலேயே கழிப்பார். காலச்சுழற்சியில் "கர்மா" தன்னையும் சுற்றிவருகிறது என்பதை அவர் இப்போது நன்றாகவே உணர்ந்துகொண்டார்!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


13. தெளிவு - (சிறுகதை)

13. தெளிவு - (சிறுகதை) 



வெலிகம ரிம்ஸா முஹம்மத்


ஆமினாவின் சின்ன மனதில் குடிகொண்டிருந்த ஏக்கம் இப்போதுதான் கொஞ்சங்கொஞ்சமாகத் தீர்ந்திருந்தது. அதற்காக அவளது தாய் கரீமா மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆமினாவின் ஏக்கத்துக்குக் காரணம், பக்கத்து வீட்டில் குடியிருந்த கரீமாவின் தோழியான ஆத்திகா தன் குடும்பம் சகிதம் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்து சென்றமைதான்.
 
00000

ஆத்திகா, கரீமாவின் மிக நெருங்கிய தோழி. இருவரும் அருகருகே வீடு வாங்கி தமது நட்பை விரிவுபடுத்திக்கொண்டார்கள். ஆத்திகா புதிதாக மணமானவள். அவளுக்கு குழந்தைகள் என்றால் உயிர். எனவே தனது நண்பியின் மூன்றே வயதுக் குழந்தை ஆமினாவைக் குளிப்பாட்டுவது, தலை சீவி விடுவது, கடைகளுக்கு அழைத்துச் செல்வது எல்லாம் ஆத்திகாதான். யாராவது பார்த்தால் ஆமினா, கரீமாவின் குழந்தையா? அல்லது ஆத்திகாவின் குழந்தையா? என்று சந்தேகப்படுவார்கள்.

கரீமாவுக்கும் இது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் தோழி ஆத்திகா, தனது குழந்தையுடன் இவ்வளவு பாசம் வைத்துப் பழகுறாளே என்று மனம் பூரித்துப் போவாள். ஒருநாள் ஆமினாவை சாப்பிட அழைத்தாள் கரீமா. ஆனால் தனக்கு பசியில்லை என்று கூறிவிட்டு ஆத்திகாவின் வீட்டுக்கு போய்விட்டாள் ஆமினா.

சிறிது நேரம் கழித்து கரீமா, ஆத்திகாவின் வீட்டுக்குப் போனாள். அங்கே ஆமினாவிடம் ஆத்திகாவும் மழலை போல பேசிக்கொண்டிருந்தாள்.

"ஆமினா குட்டி ஓடி வாங்க. ஆண்ட்டி மம்மா தீத்துறேன்.."

"வாணாம் ஆத்திகா ஆண்ட்டி.."

"என்ட செல்லம் தானே நீங்க.. நான் சொன்னா கேப்பீங்க தானே.."

"வாணாம்.."

"ஐ லவ் யூ டா செல்லம்.. ஓடி வாங்க.. ஆ காட்டுங்க.."

"ஐ லவ் யூ டூ ஆண்ட்டி.."

எந்தவித மறுப்பும் இன்றி ஆமினா ஆத்திகாவின் அருகே சாப்பிடச் சென்றாள். ஆமினாவின் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டபடி ஆத்திகா ஊட்டிவிட்டாள்.
 
ஆத்திகா ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றவள். ஆனால் எந்தவித பந்தாவோ, பெருமையோ இல்லாமல் வெகு சாதாரணமாக இருப்பாள். அவளுடன் ஆமினா மழலை ஆங்கிலத்தில் பேசுவாள். ஐ லவ் யூ என்ற சொல் ஆத்திகாவைப் பொறுத்தளவில் அதி உன்னதமான பாசத்தின் வெளிப்பாடு. நமது சமூகத்தில் அது வித்தியாசமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் மேலைத்தேய நாடுகளில் தாய் மீது பாசத்தை வெளிப்படுத்தவும், தந்தை மீது பாசத்தை வெளிப்படுத்தவும், உறவினர்கள் மீதான பாசத்தை வெளிப்படுத்தவும் இந்த ஒரே வசனத்தைத்தான் பயன்படுத்துகின்றனர்.
 
ஆத்திகா எவ்வளவு அன்பாக நடந்துகொள்கின்றாள்? அவளது அன்பான அணுகுமுறையால் ஆமினாவின் செயற்பாடுகளிலும் மாற்றம் தெரிந்தது. கரீமா தன் மகள் ஆமினா மீது உயிரையே வைத்திருந்தாள். ஆத்திகாவும் அதே பாசத்தை காட்டியபடியால் ஆமினா ஆத்திகாவிடமும் மிகவும் அன்பாகப் பழகி வந்தாள். ஆத்திகா தன் மகளை எவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொள்கின்றாள் என்று சிந்தித்த கரீமாவின் கண்கள் கசிந்தன.

ஆமினா முன்பள்ளிவிட்டு வந்தவுடன் ஆத்திகாவின் வீட்டுக்கு ஓடிவிடுவாள். ஆத்திகாவும் ஆமினாவுக்கென்றே அப்பிள், ஐஸ்கிறீம், யோகட், பிஸ்கட் என்று வகை வகையாக வாங்கி வைத்திருப்பாள். ஆமினாவின் ஓய்வுப் பொழுதெல்லாம் ஆத்திகாவின் வீட்டில் கழியலாயின.

ஆத்திகா தன் வீட்டுக்கு பழங்கள், பிஸ்கட்டுகள் போன்றவற்றை வாங்கும்போது கரீமாவுக்கும் சேர்த்தே வாங்குவாள். கரீமாவும் ஆத்திகாவுக்காக பொருட்களை வாங்குவாள். அவர்களது பாசத்தின் பரிமாற்றம் அது. கரீமாவுக்கு சகோதரிகள் இல்லை. ஆனால் ஆத்திகாவின் அன்பில் கரீமா அந்தக் குறையை உணரவேயில்லை. ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரிகளைவிட கரீமாவும் ஆத்திகாவும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

ஆத்திகா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளின் உடல் இருக்கும் நிலையில் ஆமினாவைத் தூக்குவது, ஆமினாவுடன் விளையாடுவது எல்லாம் மிகவும் கஷ்டமாக இருந்தது அவளுக்கு. எனவே ஆத்திகாவுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று கரீமா, ஆமினாவிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். அதனால் ஆமினா தாயாருக்குப் பயந்து ஆத்திகா ஆண்ட்டியின் வீட்டுக்குச் செல்லவில்லை. ஆனபோதும் ஆத்திகாவுக்கு ஆமினாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஆமினாவின் மழலைப் பேச்சு, குறும்பு இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. குழந்தை கிடைக்கவிருந்த அவளுக்கு ஆமினா போன்றதொரு குழந்தைதான் வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
 
கர்ப்பவதியான தன் தோழி ஆத்திகாவுக்கு விதவிதமாக சமைத்துக்கொண்டிருந்தாள் கரீமா. அவளருகே வந்த ஆமினா,

"உம்மா ஆண்ட்டிய பாத்திட்டு வருவமா..?"

"மகள் ஆத்திகா ஆண்ட்டிக்கு சுகமில்லதானே? நீங்க அவக்கு கரச்சல் கொடுக்க வாணாம்.."

"................"

"ஏன்ட செல்லக் குட்டிய இன்னொரு நாளக்கி நான் கூட்டிகிட்டுப் போறன். நீங்க அந்திக்கி வாப்பாவோட பீச்சுக்கு போயிட்டு வாங்க.." என்று சமாதானப்படுத்தினாள்.
 
தன் கணவனிடம் ஆமினாவை ஒப்படைத்துவிட்டு ஆத்திகாவுக்கு சமைத்ததை எடுத்துக்கொண்டு சென்றாள் கரீமா.

கரீமாவைக் கண்டதும் கட்டிலில் இருந்து எழ எத்தனித்த ஆத்திகா முடியாமல் மீண்டும் படுத்துக்கொண்டாள்.

"கரீமா! நான் இருக்குற கண்டிஷன்ல என்னால என் வேலயே செஞ்சிக்க முடியல்லடீ. எங்கட உம்மாவும் நீயும்தான் எல்லாம் செய்றீங்க. ஆமினா எங்க? இந்தப் பக்கத்துக்கே காணோம். அவவ பாக்காம இருக்குறது இதவிட கஷ்டம். அவவ அழைச்சிக்கிட்டு வாரியா..?" என்று கேட்டாள்.

"உனக்கு தொல்ல கொடுக்க வாணம் எண்டு நான்தான் வர விடல்ல. சரிடீ. அந்திக்கு கூட்டிக்கிட்டு வாறன். அவவும் உன்ன பாக்கனும்னுதான் அடம்புடிச்சிக்கிட்டு இருக்கிறா.."

கரீமாவுக்கு தன் தோழி பேச்சை மீற முடியவில்லை. ஆமினா அங்கு சென்றால் ஏதாவது இழுத்துப் போட்டுக்கொண்டே இருப்பாள். சத்தமாக பேசுவாள். பாட்டு பாடிக் காட்டுவாள். அது ஆத்திகாவுக்கு தொல்லை தருமோ என்ற அச்சத்தில்தான் ஆமினாவை இப்போது கூட்டிவரவில்லை. ஆனால் ஆத்திகாவே கூட்டிக்கொண்டு வா என்று சொல்லும்போது மறுக்க முடியுமா?

'ஆமினா மேல் இவவுக்கு சரியான பிரியம். அதேபோல ஆமினாவுக்கும் ஆத்திகா ஆண்ட்டி என்டால் உயிர்தான்' என்றெண்ணியவள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு ஆற அமர மாலையில் ஆமினாவை அழைத்துக்கொண்டு மீண்டும் ஆத்திகாவின் வீட்டுக்குச் சென்றாள்.

ஆத்திகாவைக் கண்டதும் ஆமினாவின் கண்கள் சந்தோசத்தில் அகல விரிந்தன. ஆத்திகாவும் ஆமினாவை இறுக அணைத்து முத்தமிட்டாள்.
 
இந்த அன்பு மாறாமல் நான்கு வருடங்கள் வேகமாக கடந்துவிட்டன. ஆத்திகாவுக்கு அஸ்மா, அரூஸ் என்று இரண்டு குழந்தைகள். அவர்களை வளர்ப்பதில் கரீமாவும் அதிக பங்கெடுத்துக்கொண்டாள். யாருடைய பிள்ளை என்ற பேதமின்றி குழந்தைகள் இரு தாயாராலும் அன்பாக வளர்க்கப்பட்டார்கள்.
 
ஆத்திகாவுக்கு மட்டுமல்லாமல் ஆத்திகாவின் தாயாருக்கும் ஆமினாவை மிகவும் பிடித்துப் போனது. ஆமினா அவரை உம்மும்மா உம்மும்மா என்று பாசத்தோடு அழைக்கும்போது உம்மும்மாவுக்கும் ஆமினா மீது தனிப் பிரியம் ஏற்பட்டது. அதற்கு இன்னொரு காரணம் ஆமினா படிப்பில் கெட்டிக்காரி. அதுமட்டுமல்லாமல் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி போன்றவற்றிலும் பங்குபற்றி பெரும்பாலும் முதலாமிடத்தை பெற்றுவிடுவாள். ஆமினாவால் அல் குர்ஆனையும் சரளமாக ஓதுவாள். இதற்கெல்லாம் காரணம் கரீமாவினதும், ஆத்திகாவினதும் அயராத உழைப்புதான்.

காலம் தன்பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தது. ஆத்திகாவின் கணவர் தொழில் செய்யும் கம்பனியால் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. திடீரென அவர்கள் குடும்பமாக மத்திய கிழக்கு நாட்டுக்குச் செல்ல நேரிட்டது. பாசத்தின் முன் பணமெல்லாம் தூசு. ஆனாலும் வாழ்க்கை அதன் போக்குக்கு மக்களை இழுத்துச் செல்வதை யாராலும் மறுக்க முடியாதல்லவா? ஆத்திகா, கரீமாவுக்கு புதிய ரக தொலைபேசி ஒன்றை அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்தாள். அதில் ஸ்கைப், வைபர், ஐஎம்ஓ போன்ற சொப்ட்வெயர் எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்திருந்தாள். வெளிநாடு சென்றதும் தனது நம்பரை அறியத் தருவதாகக் கூறினாள்.

"கரீமா! ஆமினாவப் பிரிஞ்சு என்னால இருக்க முடியுமான்னு தெரியலடீ. அவதான் எனக்கு எப்பவுமே முதல் குழந்த. உங்களயெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேண்டி.." என்றவள் கரீமாவைக் கட்டியணைத்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
 
ஆத்திகா தேக்கி வைத்த கண்ணீரெல்லாம் கரீமாவின் முதுகில் வழிந்தோடியது. அந்தக் கண்ணீர் ஆத்திகாவின் அன்பைப் பறைசாற்றியது. கரீமாவுக்கும் அழுகை தாங்க இயலவில்லை. பாசமெனும் வேரை இதயத்தை விட்டு யாரோ பலவந்தமாக பிரித்தெடுப்பதான உணர்வு அவளுக்குள். அவர்கள் அழுவதைப் பார்த்த ஆமினாவின் நெஞ்சு விம்மியது. அழுகை வெடித்துக் கிளம்பியது. ஆத்திகா ஆண்ட்டி அவளருகில் இல்லாததை அவளால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
 
00000

ஆத்திகா சென்று இடைக்கிடை ஸ்கைப் கோல் மூலம் பேசினாள். ஆமினாவும் அவளது பாடசாலைக் கதைகள் எல்லாவற்றையும் ஆத்திகா ஆண்ட்டியிடம் ஒப்புவிப்பாள். உதவிகளுக்கு யாருமற்ற நிலையில் ஆத்திகா வெளிநாட்டில் பிள்ளைகளோடு, வீட்டு வேலைகளையும் கவனிப்பதால் அவளுக்கு நேரமின்மைச் சிக்கல் ஏற்பட்டது. எனவே கோல் பண்ணுவதும் சற்றுக்குறைந்துவிட்டது. எப்போதாவது பேசுவாள். பேசும்போது ஆமினாவை அருகிலிருந்து பார்க்க முடியாததை நினைத்து மனவருத்தப்படுவாள். ஆமினாவுக்கு சொக்லட், பிஸ்கட், டொபி போன்றவற்றை வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைப்பாள். பாசத்தின் தடயங்கள் பாதை மாறாதிருந்தபோதும் நேரமின்மை அவர்களின் உறவுக்குத் தடையாக இருந்தது.
 
அப்போதுதான் ஆத்திகா குடியிருந்த அதே வீட்டுக்கு ருமைஸா புதிதாக வாடகைக்கு வந்தாள். ஆத்திகா போன்றே சற்று உயரமானவள், அழகானவள். அவளுக்கு ஸாரா, மர்யம் என்று இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் ஆமினாவைவிட சிறியவர்கள். ருமைஸாவைப் பார்த்த ஆமினா, தன் ஆத்திகா ஆண்ட்டி மீண்டும் கிடைத்துவிட்டதைப் போன்று உணர்ந்தாள். ஆத்திகா ஆண்ட்டி எவ்வாறு தன்னுடன் பாசமாக நடந்து கொண்டாளோ அதைப்போல ருமைஸா ஆண்ட்டியும் இருப்பாள் என்று ஆமினாவின் சின்ன இதயம் எதிர்பார்த்தது. எனவே பழக்கதோசத்தால் பாடசாலைவிட்டு வந்தால் ருமைஸா ஆண்ட்டியின் வீட்டுக்கு ஓடிவிடுவாள்.
 
"ஆமினா சோறு திண்டீங்களா..||
 
"ஓ ஆண்ட்டி.. ஸாராவும் மர்யமும் எங்க..?"

"அவங்க தூங்குறாங்க. நீங்க போயிட்டு அந்திக்கு வந்து விளையாடுங்க.." என்பாள் ருமைஸா.  

ஆத்திகா ஒருநாளும் ஷஉங்கள் வீட்டுக்கு போங்க..| என்று ஆமினாவுக்குச் சொன்னதில்லை. ஆத்திகாவின் வீட்டுக்கு ஆமினாவும் போவாள். ஆமினா வர வேண்டுமென ஆத்திகாவும் எதிர்பார்ப்பாள். நினைத்த நேரத்தில் உரிமையாகப் போகலாம். வீடு போல உலாவலாம். விளையாட்டுச் சாமான்களை எடுத்து விளையாடலாம். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஐஸ்கிறீம் எடுத்துச் சாப்பிடலாம். ஆனால் அந்த உரிமையை எல்லோரிடமும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை கரீமா ஆமினாவுக்குக் கூறினாள்.

ஆமினா தேடும் அன்பு ருமைஸாவுக்குப் புரியவில்லை. சின்ன மனதின் ஏக்கங்கள் அவளுக்கு விளங்கவில்லை.
இதையெல்லாம் வந்து ஆமினா அழுதவாறே கரீமாவிடம் கூறுவாள்.

"உம்மா ருமைஸா ஆண்ட்டி என்னுடன் இரக்கமேயில்ல.."

"அப்பிடி சொல்லாதீங்க தங்கம்.. ருமைஸா ஆண்ட்டிக்கு வேலதானே.."

"ஆத்திகா ஆண்டிக்கும் வேல தானே? அவ என்னுடன் எவ்வளவு இரக்கம்.."

"ஆத்திகா ஆண்ட்டிக்கு உம்மும்மா உதவி செய்வாங்க. ருமைஸா ஆண்ட்டி தனியத்தானே அவட எல்லா வேலகளயும் செஞ்சிக்கொள்ள வேணும். நீங்க அவங்களுக்கு கரச்சல் கொடுக்க வாணம்.."
 
"..................."

"நல்ல புள்ளதானே. நீங்க உங்கட ஸ்கூல் ஹோம்வேர்க் எல்லாம் நல்லா செய்ங்க.. போங்க தங்கம்.."

கரீமாவுக்குள்ளும் ஆத்திகாவின் பிரிவுத் துயர் படர்ந்திருந்தது. ஆனால் அவள் யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்டாள். குழந்தை மனதுக்கு அது புரியாதல்லவா? எனவே கரீமா ஆமினாவுக்கு மிக நீண்ட நேரமாக புரிய வைத்தாள்.

ஆத்திகாவின் பிரிவுத் துயரால்தான் ஆமினா இப்படி நடந்துகொள்கின்றாள் என்று ருமைஸாவிடம் போய் விளக்கம் கொடுக்க முடியுமா? இதெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் விடயங்களல்லவே. அதனால் ருமைஸாவிடம்,

"நீங்க ஒன்டும் நினைக்காதீங்க தங்கச்சி. என் நண்பி ஆத்திகாவப் போல உங்கள நினைச்சித்தான் இங்க வந்து ஆமினா உங்கள தொல்ல படுத்துறா. நா அவக்கு விளங்கும்படியா சொல்றேன். நீங்க அத தவறா எடுத்துக்காதீங்க.." என்று கரீமா கூறினாள்.

ஆமினாவுக்கு தான் இழந்த அன்பின் வலி இன்னும் மனதில் இருக்கின்றது. ஆனால் அதையும் தாங்கித்தானே ஆக வேண்டும். உறவுகளால் வரும் பாசத்தைப் போலவே, பாசத்தால் வரும் உறவும் ஆழமானது. தற்காலிகமான இழப்பாக இருந்தாலும் சரி, நிரந்தரமான இழப்பாக இருந்தாலும் சரி யாருடைய இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது. உலகத்தில் யாரும் யாருக்கும் நிகரில்லை என்று ஆமினாவுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது.
 
இப்போதெல்லாம் ஆமினா வானத்தின் இருளைக் கண்டுகொள்வதில்லை. நட்சத்திரங்களையே ரசிக்கிறாள்!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

12. வாழ்க்கை வளைவு - (சிறுகதை)

12. வாழ்க்கை வளைவு - (சிறுகதை) 


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


காதர் நானா தான் செய்த பெரிய தவறை நினைத்து மனதில் புழுங்கிக்கொண்டிருந்தார். தனது மனதில் நீங்காத இடம்பிடித்துக் குடிகொண்டிருந்த அருமை மனைவி ஃபழீலா தற்போது உயிரோடு இருந்திருந்தால் தனக்கு இப்படியொரு நிலை நேர்ந்திருக்காது என்பதை நினைக்க நினைக்க காதர் நானாவுக்கு கவலை மிகுதியால் உள்ளம் கலங்கிப் போனது.
 
00000

அன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் தனது நெருங்கிய நண்பன் மக்கீன் ஹாஜியாரைப் பார்த்துவிட்டு வந்தால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தவராக தனது கடைசி மகள் அகீலாவிடம் சொல்லிவிட்டு மெதுவாக வீட்டிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். பாதையில் தெரிந்த முகங்கள், அக்கம் பக்கத்தவர்கள், நண்பர்களைக் காணும் போது அவர்களுடன் கொஞ்சமாகக் கதைத்துக்கொண்டே வருவது காதர் நானாவின் மனதுக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஒருவாறு மக்கீன் ஹாஜியாரின் வீட்டை அடைந்த காதர் நானா,

"அஸ்ஸலாமு அலைக்கும் மக்கீன்.." என்று அழைத்தவாறே கதவைத் தட்டினார். தன் நண்பனின் குரலை எதிர்பாராத தருணத்தில் கேட்ட மக்கீன் ஹாஜியார்,
 
"மச்சான் காதர் நீயா..?" என்று கேட்டபடி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.
 
தனது நெருங்கிய நண்பன் காதர் நீண்ட நாட்களுக்குப் பிறகு வீடு வந்திருக்கிறான். ஏதோ முக்கியமான விடயமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டவராக காதரைக் கட்டித் தழுவி அன்போடு குசலம் விசாரித்தார். தனது நண்பனின் மனநிலையை ஊகித்துக்கொண்ட மக்கீன், பழைய கால மற்றும் பாடசாலைக் கால சுவாரஷ்யமான கதைகள் சிலவற்றைக் கூறி காதரின் மனநிலையை மாற்ற முயன்றார்.
 
இதற்கிடையில் மக்கீன் ஹாஜியாரின் மனைவி சிற்றுண்டி வகைகளோடும் தேநீரோடும் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டு,

"இந்தாங்கோ.. இதக்கொஞ்சம் எடுங்கோ.." என்று கையிலிருந்த தட்டை நீட்டினாள்.

நண்பர்கள் இருவரும் கதைகள் பேசிக்கொண்டே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டுக்கொண்டு தேநீரையும் அருந்தினர்.
 
"மச்சான் இன்றைக்கு இரவைக்கும் நீ எங்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும்" என்று காதரை அன்பாகக் கேட்டுக்கொண்டார்.

"நான் உன்னோட முக்கியமாக ஒரு விசயம் பேசத்தான் இப்போது வந்திருக்கிறேன் மச்சான். இங்கே கதைக்க முடியாது. பக்கத்திலுள்ள சிறுவர் பூங்காவரை கொஞ்சம் போய் வருவமா?" என்று மக்கீனின் காதுகளில் கேட்குமளவு மெதுவாகச் சொன்னார் காதர்.

"சரி மச்சான் கொஞ்சம் நில்லு. மனைவியிடம் சொல்லிவிட்டு வருகின்றேன்.."

00000

ஞாயிற்றுக் கிழமை மாலை என்பதால் சிறுவர் பூங்கா சிறுவர்களாலும் பெற்றார்களாலும் நிரம்பி வழிந்தது. சனம் குறைந்த ஓரிடத்தைத் தேடிப் பிடித்து நண்பர்கள் இருவரும் ஒரு 'பென்ச்சில்' அமர்ந்துகொண்டனர்.
 
கலங்கிய கண்களோடு இருந்த காதரைக் கண்டுவிட்ட மக்கீன் ஹாஜியாரே முதலில் பேசத் தொடங்கினார்.

"என்ன மச்சான் நீ முன்பு போலயே இல்லை. மிகுந்த கவலையோடு இருக்கிறாய். ஹயாத்து மௌத்து எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்கும். அதற்காக நாம் உடைந்து போய்விடக் கூடாது தானே. நாங்களும் ஒரு நாள் மௌத்தாகுவோம் என்பதை நினைத்துக்கொண்டால் தெளிவு கிடைக்கும். நான் சொல்வது எல்லாம் உனக்கு நன்றாக விளங்குகிறதுதானே மச்சான்.." என்றார் மக்கீன்.

"அதுசரி மச்சான்.. நீ என்ட இடத்தில் இருந்து பார்த்தால் தான் உனக்கு என்ட பிரச்சினை இன்னும் தெளிவாக விளங்கும். போன மாதமும் நான் உன்னிடம் வந்து எனது பிரச்சினைகள் பற்றிச் சொன்னேன் தானே.."

"எனக்கு உனது பிரச்சினைகள் எல்லாம் நன்றாகத் தெரியும். இப்போ என்ன பிரச்சினை புதிதாக வந்திருக்கு? நான் எப்படி உனக்கு உதவி செய்ய வேண்டும்? சொல்லு மச்சான்.."

"எனக்கு சொல்வதற்கே வெட்கமாகத்தான் இருக்கு. இப்போ எனது மகள் அகீலா எனக்கு ஒழுங்காக சாப்பாடுகூட தாரதில்லை. சில நாட்களில் பகல் வேளைகளில் அதிகமான பசியோடு நான் இருப்பேன். அவள் உரிய நேரத்துக்கு சாப்பாடு சமைப்பதில்லை. பேரப் பிள்ளைகளும் அவ்வப்போது கடையில ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுக்கொள்வதால் அகீலாவுக்கு உரிய நேரத்துக்கு சமைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவள் இல்லை. மருமகனும் வேலை முடிந்து இரவு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார். அவருக்கு இரவு ஒன்பது மணிக்கெல்லாம் சுவையான வீட்டுச் சாப்பாடு இருக்க வேண்டும். அதனால் இரவுச் சாப்பாட்டை உரிய நேரத்துக்கே மகள் சமைத்து முடிப்பாள். பகல் சாப்பாட்டை மட்டும் உரிய நேரத்துக்குத் தயாரிக்க வேண்டும் என்று அவள் அக்கறை காட்டுவதில்லை. அவள் சமைத்து முடிக்கும்வரை நான் பசியோடு காத்திருக்க வேண்டும். பசி தாங்க முடியாத சில நாட்களில் பகல் சாப்பாட்டை நான் கடையிலும் வாங்கிச் சாப்பிட்டுக்கொள்வேன். எனது சீதேவி ஃபழீலா இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? எனக்கும் இப்போ சுகர், பிரசர், கொலஸ்ட்ரோல் என்று எல்லாம் வந்துவிட்டது. கண்ட கண்டதெல்லாம் கடையில சாப்பிட முடியாது. ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் சொல்லியுள்ளார்.."

"கோவிச்சுக்கொள்ளாதே மச்சான்.. நான் ஒரு உண்மையைச் சொல்லுகின்றேன். தப்பு உன்னுடையதுதான். அவர்களை இப்போது குறை சொல்லிப் பயனில்லை.."

"என்னடா நீ இப்படிச் சொல்கின்றாய்? நான் உன்னை நம்பித்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். உன்னிடமிருந்து ஆறுதல் வார்த்தையைத்தானே நான் எதிர்பார்க்கிறேன். உனக்கும் என்ட பிரச்சினைகள் சரியாக விளங்குதில்ல போல.." என்று மிகவும் கலங்கியபடி கூறினார் காதர் நானா.

"இல்லடா மச்சான் நான் உன்ன நல்லா விளங்கி வெச்சிருக்கிறபடியாலத்தான் அப்படிச் சொன்னேன். நீயே கொஞ்சம் நினைச்சிப் பாரு உன்ட மனைவி ஃபழீலா மௌத்தானவுடன் உன்ட பிள்ளைகள் உனக்கு இப்படி அசௌகரியங்களை ஏற்படுத்தவில்லைதானே..? நீ எப்போ உன்ட வீடு, காணி, ஏனைய சொத்துக்கள் எல்லாவற்றையும் உனது நான்கு பிள்ளைகளுக்கும் பகிர்ந்து எழுதிக் கொடுத்தாயோ அதற்குப் பின்னர்தான் உனக்கு ஒவ்வொரு பிரச்சினையாக வரத்தொடங்கியிருக்கு மச்சான். தவறை நீதான் செய்தாய் என்று, அதைத்தான் நான் சென்னேன். உனக்கு இப்போது விளங்குகிறதா..?"

"எனக்குப் பிறகுள்ள காலத்தில் எனது பிள்ளைகள் நால்வரும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதானே நான் நினைத்தேன். மட்டுல்லாமல் எனது கடைசிக் காலத்துக்கு எனது நான்கு பிள்ளைகளுமே என்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பித்தானே நான் அவர்களுக்கு நியாயமான முறையில் எனது சொத்துக்களைப் பங்கிட்டு எழுதிக்கொடுத்தேன். இதில் என் தவறு என்ன இருக்கிறது நீயே சொல்லு..?"

"உனது நோக்கம் சரிதான். ஆனால் அவர்களில் ஒருவரும் அதனை அப்படி நினைக்கவில்லையே. வயோதிபத் தாய் தந்தையரை முறையாகக் கவனித்துப் பார்ப்பது அதிகமான நன்மைகளை ஈட்டித்தருகின்ற விசயம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்களிடையே இஸ்லாமிய அறிவு போதாதென்று நினைக்கிறேன். 'என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!' (அல்குர்ஆன்) என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அதுபோல அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு நபிவர்கள், உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார். பிறகு எது? என்று அவர்களிடம் கேட்டதற்கு தாய் தந்தையருக்கு நன்மை புரிவது என்றே பதில் சொல்லியுள்ளார்கள். இப்போதுள்ள சில பிள்ளைகளுக்கு மார்க்க அறிவு குறைவு என்றே நினைக்கத் தோன்றுகின்றது மச்சான். உனது பிள்ளைகளும் அப்படியானவர்கள்தான்.."

"நான் எவ்வளவு கஷ்டப்பட்டு சொந்தமாகக் காணி வாங்கி, வீடு கட்டிக் கலியாணம் முடிச்சேன். ஃபழீலாவிடம் ஒரு சதமும் காசோ சொத்தோ சீதனம் எடுக்கவில்லை. அந்தக் காலத்தில எனக்கு பொண் தாரதுக்கு நிறைய ஆக்கள் ரெடியாக இருந்தாங்க. வசதி குறைஞ்சவங்களாக இருந்தாலும் ஃபழீலாவின் நற்குணத்துக்காகத்தான் நான் அவவக் கலியாணம் முடிச்சு நான்கு பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்தேன். ஃபழீலா இருக்கும் போது வீட்டில் நான் ராஜா மாதிரித்தான் இருந்தேன். எனக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. பிள்ளைகள் நால்வரையும் படிக்க வைத்து உரிய காலத்தில் நல்ல முறையில் கலியாணம் முடித்துக்கொடுத்து ஃபழீலாவும் நானும் பேரப் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு மிகவும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும்தான் வாழ்ந்து வந்தோம். ஃபழீலா போய்ச் சேர்ந்தபின் இப்போது எல்லாம் தலைகீழாகப் போச்சு. பிள்ளைகளால இப்படி ஒரு சோதனை வருமென்று நான் கனவிலும் நினைக்கல்ல மச்சான்.." பூகம்பமாய் மனம் வெடித்தார் காதர் நானா.

காதர் மிகுந்த மனக் கவலையோடு சொல்வதை மக்கீன் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். காதரே மீண்டும் தொடர்ந்தார்.

"நானும் மாதம் மூன்று நாட்கள் என்று ஒவ்வொரு மாதமும் ஜமாத்தில போகின்றேன். அந்த நாட்களில் தான் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. மற்ற நாட்களில் வீட்டில பேரப் பிள்ளைகளுடனேயே நேரம் போய்விடும். ஆறுதலாக இருந்து ஒரு பத்திரிகை வாசிக்கக்கூட நேரம் இருக்காது. ஒரு மாற்றத்துக்காக மற்ற மூன்று பிள்ளைகளிடமும் போய் எப்போதாவது தங்கிவிட்டு வந்தாலும் கடைசி மகள் அகீலாவுக்கு நான் கட்டிய முழு வீட்டையும் கொடுத்துவிட்ட கோபத்தை அவர்கள் எனக்கு வெளிக்காட்டிக்கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நியாயமாகத்தான் நான் அவர்களுக்கு எனது சொத்துக்களைப் பங்கிட்டுக்கொடுத்துள்ளேன்.."

"நீயும் உனது 60 வயது வரை அரச துறையில் தொழில் செய்து 'பென்சன்' பெற்றுக்கொண்ட ஒருவன். அல்லாஹ்வின் கிருபையால் உனக்கு மாதா மாதம் ஒரு தொகை 'பென்சன்' காசு கிடைக்கிறது. ஃபழீலா மௌத்தான ஆறு மாத காலங்களிலேயே இன்னுமொரு திருமணம் முடித்து விதவைப் பெண் ஒருத்திக்கு வாழ்வு கொடுக்க முயற்சி எடுக்கும்படி நான் உனக்குக் கூறினேன். நீதான் உன் பிள்ளைகளுக்கு விருப்பமில்லை என்று அந்த ஆலோசனையைக் கேட்கவில்லை. இப்போ நாங்கள் இரண்டு பேரும் எழுபதுகளைக் கடந்துகொண்டிருக்கிறோம். எப்போதும் போல இந்தக் கடைசி காலத்திலயும் எம்மைப் படைத்த நாயனுக்காக வேண்டி சோதனைகளைப் பொறுத்துக்கொண்டு கப்ர் வாழ்க்கைக்காக நன்மைகளைத் தேடிக்கொள்ள வேண்டும். உன்ட பிள்ளைகளோட நான் பேசலாம்தான். ஆனால் அவர்கள் அதனை விரும்பமாட்டார்கள். அப்படிப் பேசினாலும் அது உனக்கு மேலும் ஒரு பிரச்சினையாகக் கூடாதென்றே நினைக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இருந்துகொள்ளு மச்சான். எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.." என்றார் மக்கீன்.

"ஆமாம். பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்? எனது மௌத்துக்குப் பிறகு சொத்துக்கள் பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என ஏற்பாடு செய்திருந்திருக்கலாம். ஃபழீலா இருக்கும் போதே இந்த ஏற்பாடுகளை நான் செய்திருக்க வேண்டும். எனது பிள்ளைகளாவது தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை உணர்ந்து செய்யுமாறு ஆரம்பத்திலேயே மார்க்க அறிவையூட்டி வளர்த்திருக்க வேண்டும். தலைக்கு மேல் வெள்ளம் வந்த பிறகு நான் இவ்வாறு யோசித்து என்னதான் நடந்துவிடப் போகிறது என்று எண்ணிய காதர் நானா, 'எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்' என்ற மக்கீனின் வார்த்தையில் ஆறுதலடைந்து, நீண்டதொரு பெருமூச்சோடு அமைதியாக விடைபெற்றுச் சென்றார்!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்