ரயில் சினேகம் (சிறுகதை)
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்டுக்கொண்டிருந்த ருகுணுகுமாரி புகையிரதம் மெதுவாகத் தண்டவாளங்களைத் தழுவிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ரீனாவின் விழிகள் மட்டும் வெளியே ஓடிக்கொண்டிருந்த காட்சிகளில் லயிக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போயிருந்த ஒரு காலத்துக்குள் அவை மீண்டும் மீண்டும் பயணம் செய்துகொண்டிருந்தன.
காலி ரயில் நிலையத்தை வந்தடைந்த புகையிரதம், அதன் எஞ்சினைத் திருப்புவதற்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ரீனா ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். அந்தத் தண்டவாளங்கள்... அந்த ரயில்... அந்தப் பயணம்... எல்லாமே அவளுக்குள் மறைந்திருந்த ஒரு நினைவுகளின் கதவை அப்படியே திறந்துவிட்டது.
இருபது வருடங்களுக்கு முன்பு, இதே போன்ற ஒவ்வொரு சனிக்கிழமையும், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி ருகுணுகுமாரி புகையிரதத்தில் பயணம் செய்வது ரீனாவுக்கு வழக்கமான ஒன்றாக இருந்தது. உயர் கல்விக்காக ஒவ்வொரு வாரமும் அவள் அந்த ரயிலில் ஏறுவாள். அந்தப் பயணங்களில்தான் அவளுக்கு நயனா அறிமுகமானாள். களுத்துறையைச் சேர்ந்த நயனா அப்போது சட்டம் படித்துக்கொண்டிருந்தாள். சனிக்கிழமைகளில் காலையிலேயே கொழும்புக்குச் சென்று வகுப்புகளை முடித்துவிட்டு மாலைக்குள் அவள் வீட்டுக்குத் திரும்பிவிடுவாள்.
வழக்கமாக புகையிரதத்தின் முன்பக்கம் இருந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியிலேறி ரீனா அமர்ந்திருப்பாள். மாத்தறையிலிருந்து ரீனா ஏறுவதால் அவளுக்கு எப்போதும் இருக்கை கிடைக்கும். வழக்கமாக ரீனா அமர்ந்து வருகின்ற அதே பெட்டியில் நயனாவும் ஏறுவதால் ரீனாவும் நயனாவும் சில மாதங்களிலேயே நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.
ரீனா சனிக்கிழமை கொழும்புக்குச் சென்றால் தெஹிவலையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி ஞாயிற்றுக்கிழமை வகுப்பையும் நிறைவு செய்துவிட்டே ஊருக்குத் திரும்புவாள். நயனாவோ இந்த இரண்டு நாட்களிலும் புகையிரதத்திலேயே வகுப்புக்கு வந்து செல்வாள்.
நயனா கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது வீட்டில் அவள் ஒரே பெண் பிள்ளை. அவளிடம் அப்போதே கைத்தொலைபேசி இருந்தது. அவளது கைத்தொலைபேசி இலக்கத்தை ரீனாவுக்குக் கொடுத்திருந்தாள்.
ஒருநாள் ரீனா, நயனாவிடம் சொன்னாள்: 'எப்போதாவது அவசரமான சந்தர்ப்பத்தில் என்னைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தால் நான் தங்கியிருக்கும் உறவினர் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைத் தருகிறேன், அந்த இலக்கத்துக்கு அழைப்பு எடு. நான் உன்னோடு கதைக்கலாம்' என்று கூறி தெஹிவலையில் உள்ள உறவினர் வீட்டின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தாள்.
அக்காலத்தில் எல்லோருடைய கைகளிலும் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அந்தத் தொலைபேசி இலக்கம் ஒருநாள் ஓர் உயிரைக் காப்பாற்றும் மருந்தாக மாறும் என்று ரீனாவுக்கு அப்போது தெரியாதிருந்தது.
0000000000
ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலை பத்து மணி இருக்கும். ரீனாவின் உறவினர் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. அவர்கள் ரீனாவை அழைத்து, 'ரீனா உங்களுக்குக் கோல் வந்திருக்கிறது' என்று கூறி ரிஸீவரைக் கொடுத்தார்கள். ரீனா தொலைபேசியை கையில் எடுத்தாள்.
'ஹலோ...' அழைப்பின் மறுபுறத்தில் நயனாவின் குரல். ஆனால் அது வழக்கமான நயனாவின் குரலாக இருக்கவில்லை.
'ரீனா... நான் மருதானை ஸ்டேஷனில் இருக்கிறேன். நீ உடனே வர முடியுமா?'
வகுப்புக்குப் போகத் தயாரான நிலையில் இருந்த ரீனா பதற்றத்தோடு, 'என்னாச்சு நயனா? ஏன் திடீரென்று என்னைக் கூப்பிடுகிறாய்?' என்று கேட்டாள்.
சில நொடிகள் அமைதியாக இருந்த நயனா: 'சட்டப் பரீட்சையில் சித்தியடைய மூன்று மார்க்ஸ் குறைஞ்சிடுச்சு. வீட்டில எல்லாரும் என்னைத் திட்டுவாங்க... அதனால்...' என்று ஏதோ சொல்ல நினைத்தவள், ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
ரீனாவின் இதயம் திடீரென்று துடித்தது. ஏற்கனவே பதற்றத்தில் இருந்த ரீனா, 'என்ன நயனா? என்ன நடந்த? என்னிடம் உண்மையைச் சொல்லு...' என்றாள்.
'இனிமேல் என்னால உயிர் வாழ முடியாது. அதனால நான் நஞ்சு குடிச்சுட்டேன். எனக்கு இப்போ தலை சுற்றுகிறது. கொஞ்சம் மயக்கமாகவும் இருக்கிறது ரீனா...'
அந்த ஒரு வார்த்தை ரீனாவின் காதுகளில் இடியென விழுந்தது. 'நயனா, நீ மருதானை... ரயில் நிலையத்தில தானே இருக்கிறாய்? அப்படி அங்கேயே இரு. நான் உடனே ஆட்டோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு அவசரமாக வருகிறேன்' என்று கூறித் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தாள்.
ரீனாவுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஆனாலும் அடுத்த நொடியே அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவளது மூளை மட்டும் விரைவாகச் செயற்பட்டது.
உறவினர்களிடம், 'வகுப்புக்குப் போகிறேன்' என்று சொல்லிவிட்டு ரீனா அவசரமாக வெளியேறினாள். அவள் விரைந்து செயற்பட்டாள், அது அவளுக்கு ஓர் உயிரைக் காப்பாற்றும் ஓட்டமாக இருந்தது. பாதைக்கு வந்தவள் ஆட்டோ ஒன்றைப் பிடித்து, விரைவாக மருதானை ரயில் நிலையத்தை அடைந்தாள். அங்கு ரீனாவின் கண்கள் நயனாவைத் தேடின. சுற்றுமுற்றும் சல்லடை போட்டுத் தேடியதில் ஒரு மூலையில் சோர்ந்து போய், அரை மயக்கத்தில் நயனா அமர்ந்திருப்பதை ரீனா பார்த்துவிட்டாள்.
'நயனா!' என்று அவளிடம் ஓடிச்சென்ற ரீனா, தோழியின் கையைப் பற்றிக்கொண்டாள்.
'நீ என்ன காரியம் செய்துவிட்டாய் நயனா?'
நயனாவால் பதில் சொல்ல முடியவில்லை. ரீனா ஒரு கணமும் தாமதிக்கவில்லை. அருகிலிருந்த தனியார் மருத்துவ நிலையத்திற்கு நயனாவை அழைத்துச் சென்று, மருத்துவரிடம் விடயத்தை சுருக்கமாகச் சொன்னாள். விபரமறிந்த மருத்துவர் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினார். நயனாவுக்கு உடனடி முதல் உதவியாக நச்சுப் பொருளின் தாக்கத்தைக் குறைக்க திரவச் சிகிச்சையும், வாந்தி எடுப்பதற்கான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டன. ஒரு மணித்தியாலமாக நயனா அந்த மருத்துவ நிலையத்தில் இருந்தாள். மருத்துவர் ஒருவாறு அவளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். கொஞ்ச நேரத்தில் நயனா சுதாகரித்து நிமிர்ந்து எழுந்தாள்.
'சட்டப் பரீட்சையில் மூன்று மார்க்ஸ் குறைந்ததற்காக வாழ்க்கையை முடித்துவிட நினைத்தாயா?' என்று மருத்துவர் அமைதியாகக் கேட்டார். நயனாவால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவளது கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது.
'சட்டப் பரீட்சையில் ஏற்பட்ட தோல்வி என்பது வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியல்ல. ஒரு வாய்ப்பு தவறியிருக்கலாம். பல வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன' என்ற மருத்துவரின் அன்பான வார்த்தைகள் மருந்தைவிட ஆழமாக நயனாவின் மனத்தில் இறங்கின. சிறிது நேரத்தில் அவளுடைய உடல்நிலை ஓரளவு சீரானது. அவசரத்தில் எடுத்த முடிவு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போனது என்பதை நயனா அப்போது உணரத் தொடங்கினாள்.
ரீனா அவளுக்கு ஒரு தோழியாக மட்டும் இருக்கவில்லை. நயனா வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிக்கொண்டிருந்த போது அவளைக் காப்பாற்ற வெகு விரைவாக செயற்பட்டு நயனாவின் மனதில் உயர்ந்த இடத்தில் இடம்பிடித்தாள்.
மதியம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. 'நயனா, உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்' என்று ரீனா அவளைத் தனது கரங்களால் பிடித்துக்கொண்டு மீண்டும் மருதானை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாள். களுத்துறைக்குச் செல்லும் ரயிலில் இருவரும் ஏறினார்கள்.
'இவளுடைய வீட்டுக்குச் சென்று, இவளுடைய அம்மாவிடம் இவளை ஒப்படைத்து விட்டுத்தான் திரும்ப வேண்டும்' என்ற ஒரே ஒரு எண்ணம்தான் அப்போது ரீனாவின் மனதில் இருந்தது.
புகையிரதம் களுத்துறையை அடைந்ததும், நயனா காட்டிய வழியில் அவளுடைய வீட்டைத் தேடி ரீனா சென்றாள். வீட்டின் முன் வாசலில் நயனாவின் தாயார் நின்றிருந்தார். பர்தா அணிந்திருந்த முஸ்லிம் பெண்ணான ரீனாவோடு தன் மகளைப் பார்த்ததும் அவர் ஆச்சரியமாக நோக்கினார்.
ரீனா நடந்த அனைத்தையும் நயனாவின் தாயாரிடம் கூறினாள். நயனாவின் உடல் நிலை குறித்து அவளின் பெற்றோர் சற்று அச்சமடைந்ததால் அவளை உடனடியாக நாகொடயிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
'இவ்வளவு தூரம் நீங்கள் வீடுவரை நயனாவைக் கூட்டிக்கிட்டு வந்து உதவி செய்ததற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்கிறோம். இனி நாங்கள் மகளைப் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம்' என்று அவளுடைய பெற்றோர் ரீனாவைப் பார்த்துக் கூறினர். அந்த வார்த்தையைக் கேட்டபோதுதான் ரீனாவின் மனது சற்றே அமைதியானது. ஆனால் அடுத்த கணமே அவளை இன்னொரு பயம் தொற்றிக்கொண்டது. 'காலையில் வகுப்புக்குப் போகிறேன் என்று உறவினர் வீட்டில் சொல்லிவிட்டு வந்தேன். இந்நேரம் வீட்டில் என்னைத் தேடிக்கொண்டிருப்பார்களே' என்று சிந்தித்தவள், விரைவாக நயனாவிடமும் அவர்களது பெற்றோரிடமும் பயணம் சொல்லிவிட்டுத் திரும்பினாள். அன்று ரீனாவின் உள்ளத்தில் ஒரு விஷயம் மட்டும் ஆணித்தரமாகப் பதிந்திருந்தது. ஒரு மனித உயிரின் மதிப்பு அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது.
நாகொட வைத்தியசாலையிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, நயனாவின் வாழ்க்கை மீண்டும் வழக்கமான பாதைக்குத் திரும்பியது. அவள் மீண்டும் சட்டக் கல்வியைத் தொடர்ந்தாள். ஒவ்வொரு சனிக்கிழமையும் களுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் ரயிலில் நயனாவின் பயணம் வழமைபோன்று தொடர்ந்தது. ரீனாவும் தனது கல்விக்காக அதே ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தாள். அந்த சூழ்நிலைக்குப் பிறகு களுத்துறையிலிருந்து புகையிரதத்தில் ஏறிய நயனா, ரீனாவின் அருகில் அமர்ந்து எதிர்காலத்தைப் பற்றி நிதானமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
'நயனா, அன்று நீ அந்த மூன்று மார்க்ஸ் குறைந்ததற்காக எடுத்த முடிவு இப்போது என் நினைவுக்கு வரும்போதும் எனக்கு உடம்பு முழுவதும் நடுங்குகிறது' என்றாள் ரீனா.
அதற்கு நயனா சிரித்தாள்.
'ரீனா அந்த மூன்று மார்க்ஸ்தான் எனக்கு வாழ்க்கையின் மதிப்பைக் கற்றுக்கொடுத்தது. ஒரு பரீட்சையில் குறையும் மார்க்குகள் வாழ்க்கையில் குறைந்த மதிப்பல்ல. ஆனால் அப்போது அதை நான் புரிந்துகொள்ளவில்லை'
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தனர்.
அடுத்த வருடம் நயனா மீண்டும் சட்டப் பரீட்சை எழுதினாள். இந்த முறை அவள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சட்டக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாள்.
காலம் தன்பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தது. சட்டக் கல்லூரியை நிறைவு செய்திருந்த நயனா அவளது ஊரிலிருந்த பிரபலமான சட்டத்தரணியிடம், பயிலுனர் சட்டத்தரணியாக இணைந்து பயிற்சி பெற்று வந்தாள். மறுபுறம் ரீனாவும் தனது உயர் கல்வியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, மாத்தறையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியில் சேர்ந்திருந்தாள். இருவருமே தங்களது வாழ்க்கையில் நல்லதொரு நிலையை அடைந்திருந்தனர்.
அதற்கிடையில் ஒரு நாள் ரீனாவின் வாழ்க்கையிலும் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவளுடைய தாயாருக்கு திடீரெனக் கடுமையான சுகயீனம் ஏற்பட்டது. உடனடியாக ரீனாவின் தாயாரை கராப்பிட்டிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். தாயாரின் சுகயீனம் ரீனாவை முற்றிலும் உடைத்துவிட்டது. மருத்துவமனையில் தாயாரின் படுக்கையருகில் அமர்ந்திருந்த அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அப்போது அவளுக்கு நயனா நினைவுக்கு வந்தாள். அதனால் அவளைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
மருத்துவமனையிலிருந்த ஒருவரின் கைத்தொலைபேசியைப் பெற்று நயனாவுக்குத் தகவல் சொன்னாள்.
நயனா எல்லா விபரங்களையும் தெளிவாகக் கேட்டுக்கொண்டு தொலைபேசியைத் துண்டித்தாள்.
மறுநாள் காலை, 'ரீனா...' என்ற குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள். அங்கே அவளுக்குப் பின்னால்
நயனாவும் அவளுடைய சகோதரனும் நின்றுகொண்டிருந்தார்கள். ரீனாவுக்கு நம்பவே முடியவில்லை.
'நயனா... நீ எப்படி வந்தாய்?'
நயனா மிகவும் அருகில் வந்து ரீனாவின் கையைப் பற்றிக்கொண்டாள்.
'உன் தாயாருக்கு உடம்பு சரியில்லை என்றால் நான் எப்படி வராமல் இருக்க முடியும்?'
'நேற்றுத்தானே உனக்குச் சொன்னேன். ஆனால்... நீ இன்றே அவசரமாகக் களுத்துறையிலிருந்து இவ்வளவு தூரம்...'
நயனா புன்னகையோடு, 'நீ என் உயிரைக் காப்பாற்றியபோது, நேரத்தைப் பார்த்தாயா? நான் சொன்ன உடனே எதுபற்றியும் யோசிக்காமல் அவசரமாக வந்தாய் தானே?'
ரீனாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.
அருகில் நின்றிருந்த நயனாவின் சகோதரன், 'அக்கா, நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் தாயாரைப் பார்த்துக்கொள்ள நாங்களும் இருக்கிறோம்' என்றான்.
நயனா ரீனாவின் தாயாரின் படுக்கைக்கு அருகே சென்று, 'அம்மா... நான் நயனா. ரீனாவின் தோழி' என்றாள்.
நோயின் சோர்விலும் ரீனாவின் தாயார் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
'ரீனா உங்களைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாள். அப்போ களுத்துறையிலிருந்தா வந்திருக்கிறீர்கள்?'
'ஆம் அம்மா'
அந்த வார்டில் இருந்தவர்களுக்கெல்லாம் அது வியப்பாக இருந்தது. ஒருவர் ரீனாவிடம் மெதுவாகக் கேட்டார்: 'இவர் யாரு?'
'என் தோழி நயனா'
'எங்கிருந்து வந்திருக்கிறார்?'
'களுத்துறையிலிருந்து'
அந்தப் பெண்ணின் முகத்தில் ஆச்சரியம்.
'களுத்துறையிலிருந்து... உங்க அம்மாவைப் பார்க்கவா வந்திருக்காங்க?'
ரீனா தலையசைத்து, 'ஆம். இவர் ஒரு பயிலுனர் சட்டத்தரணி. பிரபலமான ஒரு சட்டத்தரணியாகப் போகிறவர்' என்றாள் சற்றுப் பெருமையோடு.
அந்த நாளில் மருத்துவமனை வார்டில் இருந்தவர்களுக்கு, ரீனாவுக்கும் நயனாவுக்கும் இடையிலான நட்பு ஒரு சாதாரண நட்பாகத் தோன்றவில்லை. மதம் வேறு, ஊர் வேறு, குடும்பப் பின்னணி வேறு. ஆனால் அவர்களது அன்பில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை.
0000000000
காலம் உருண்டோடியது. நயனா இன்று ஒரு திறமையான சட்டத்தரணியாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறாள். ஏதாவது விசேட நிகழ்வுகளின் போது அவளுக்குக் கிடைத்த ஒவ்வொரு மேடைகளிலும், ரீனா என்ற ஒரு பெயரை மட்டும் அவள் மறக்காமல் நன்றியோடு நினைவுபடுத்திச் சொல்வாள்.
'என் வாழ்வில், நான் மறக்க முடியாத ஒரு நண்பி இருக்கிறாள். அவள் மாத்தறையைச் சேர்ந்த முஸ்லிம் தோழி. நான் என்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்த அந்த நாளில், ரீனா என்ற அந்த முஸ்லிம் தோழிதான் என்னைத் தேடி வந்து உயிரோடு மீட்டாள். அந்த நேரத்தில் அவள் எனக்கு உதவி செய்யாவிட்டால் இன்று நான் உயிரோடு இருந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்' என்று அவள் சொல்லும் ஒவ்வொரு முறையும், மதங்களுக்கிடையே சுவர்கள் எழுப்ப முயல்பவர்களுக்கு மனிதநேயத்தின் மூலம் ஒரு சிறிய பதில் அங்கே கிடைத்தது.
காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. நாட்டின் ஒரு பகுதியில் இனவாதத்தின் நெருப்பு பற்றிய நாட்கள் வந்தன. மனிதர்களின் பெயர்கள் மதங்களால் பிரிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. அச்சமும் சந்தேகமும் மனிதர்களின் மனங்களுக்குள் ஊடுருவின. இனத்தின் பெயரில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் பிரித்துக்கொண்டிருந்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில் ஒரு இரவு ரீனாவின் ஊரிலும் சில அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. அவளுடைய குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். அப்போது ஒரு வாகனம் அவர்களுடைய வீட்டின் முன் வந்து நின்றது. கதவு தட்டப்பட்டது. அவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டே கதவைத் திறந்தார்கள்.
அங்கே வாகனத்திலிருந்து சட்டத்தரணி உடையில் நயனா வந்திறங்கினாள்.
'ரீனா! பயப்படாதே. நாங்கள் இருக்கிறோம்'
ரீனா அவளைப் பார்த்ததும் சில நொடிகள் பேச முடியாமல் நின்றாள்.
'நீ எப்படி இங்கே வந்தாய்...?'
நயனா அவளுடைய கையைப் பற்றிக்கொண்டாள்.
'இருபது வருடங்களுக்கு முன்பு, மருதானை ரயில் நிலையத்தில் என் உயிரைக் காப்பாற்றினாய். இன்று உன் வீட்டு வாசலில் நான் நிற்கிறேன். நட்பு என்பது மதம் பார்த்து வருவதில்லை ரீனா...'
ரீனாவின் கண்கள் கசிந்தன. 'நயனா... நான் உனக்கு அன்று மனிதாபிமான ரீதியில்தான் உதவி செய்தேன். உனக்கு பல தோழிகள் இருந்த போதும் ஏதோ என்மீது நம்பிக்கை வைத்து அன்று நீ என்னைத்தானே தொலைபேசியில் அழைத்தாய். அந்த நம்பிக்கையைத்தான் நான் காப்பாற்றினேன்'
நயனா புன்னகைத்து, 'அதனால்தான் ரீனா உனக்கு ஒரு பிரச்சினை என்ற போது நான் உடனே கிளம்பி வந்திருக்கிறேன்' என்றாள்.
காலி புகையிரத நிலையத்தில் எஞ்சினைத் திருப்பி, பெட்டிகளோடு இணைத்துக்கொண்ட பின்னர் ஒரு சிறிய அதிர்வுடன் ரயில் நகரத் தொடங்கியது. ரீனா பழைய நினைவிலிருந்து மீண்டாள். தென்திசைக் காற்றுக்கு ஹார்ன் ஓசை எழுப்பி பிரியாவிடை சொல்லிக்கொண்டு, ருகுணுகுமாரி மருதானை நோக்கி தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்துகொண்டிருந்தது.
(முற்றும்)
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
No comments:
Post a Comment