Saturday, February 15, 2014

பணம் பந்தியிலே 01

கதீஜா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவளுக்கு உலகத்தை நினைத்தால் வியப்பாக இருந்தது. எத்தனை விதமான மனித மனங்கள் விசித்திரமாகக் காணப்படுகின்றன என்பதை எண்ணும்போதே வியப்பில் புருவம் நெற்றியைத் தொட்டது.
வெளியிலும், மேடைகளிலும் காட்டும் முகத்தில், தனிப்பட்ட ரீதியில் முகமூடி அணிந்திருக்கும் சிலர் அல்லாஹ்வை மறந்து தம்பட்டமடித்துக் கொண்டிருக்கிறார்களே. இவர்கள் மறுமையில் எப்படி பதில் சொல்லப் போகிறார்களோ?


கதீஜா இவ்வாறு எண்ணுவதற்கு முக்கியமான காரணம் இருந்தது. அதுதான் அவளுக்கு ஏற்பட்ட அந்த மனதை வருத்தும் நிகழ்வு. இன்றைய காலத்தைக் கலி காலம் என்று சொல்வார்களே அதில் எத்தனை நிதர்சனம் இருக்கிறது?
ஒரு மனிதன் எத்தனை விதமான கஷ்டங்களை அனுபவிக்கின்றான்? குடும்பத்தை காப்பாற்ற எவ்வாறெல்லாம் யோசிக்கின்றான்?. ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உதவி பெற்றவர்கள் உபத்திரவம்  செய்கையில் அந்த மன உணர்வுகள் எப்படியிருக்கும்?

கதீஜா மிகவும் இளகிய மனம் படைத்தவள். அவளது வாழ்க்கையே சோக மயமானது. ஆனாலும் மற்ற எல்லோரைம்விட அல்லாஹ் அவளுக்கு நல்ல குணத்தை கொடுத்திருந்தான். அதுதான் தயாள குணம். எனினும் அதே தயாள குணம் அவளை இத்தனை ஆபத்தில் சிக்க வைக்கும் என்று அவள் அறிந்திருக்க மாட்டாள்.

கதீஜா சிறு வயதிலிருந்தே நற்குணத்தைப் பெற்றிருந்தாள். உறவினர்கள் தனக்கென தருகின்ற ஒரு சில உடைகளையும் தனது தங்கையருக்கு கொடுத்து விடுவாள். காலப்போக்கில் அவள் சிறந்த கல்வியைப் பெற்று நல்லதொரு தொழில் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டாள்.

அந்தக் கம்பனியில் பணிபுரிபவர்களுக்கும் கதீஜாவை மிகவும் பிடித்திருந்தது. அவளது எளிமையை பலரும் மெச்சினார்கள். அப்படி இருக்கையில்தான் கதீஜா பல புதியவர்களின் அறிமுகங்களையும் பெற்றாள். அதில் ஒருத்தி தான் சமீரா. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். என்றாலும் குணம் என்பது மறுபக்கம். எதிலும் பொய். அதை கதீஜா அறிந்திருக்காமையினால் அவளுடன் சகஜமாகப் பழகினாள்.

ஒருநாள் சமீரா கதீஜாவிடம் வந்து,

'கதீஜா. எனக்கு நல்லதொரு ஐடியா. எங்கள் நானாவின் நண்பன் பெரிய பிஸ்னஸ் பன்றார். அவங்களுக்கு ஒரு தொகை காசு கொடுத்தால் ஏதாவது லாபம் பெறலாம்' என்றாள்.

இதுவும் நல்ல உத்தியாகத் தோன்றிது கதீஜாவுக்கு.

'அதில் பிரச்சினையில்லை சமீரா. ஆனால் உங்கள் நானாவின் நண்பனை எனக்குத் தெரியாதே' என்றாள்.

'உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இருக்கிறதுதானே? அதுக்கு நான் பொறுப்பு. சரியா?'

'ம்;.. ஆனா கவனம் சமீரா' என்ற கதீஜா இரண்டு வாரங்களின் பின்னர் இரண்டு இலட்சங்களை சமீராவிடம் கையளித்தாள்.

மாதங்கள் சில கழிந்தன. கதீஜாவுக்கு சமீராவுக்கு  கொடுத்த பணம் தேவைப்பட்டது. சமீராவிடம் கேட்டாள். சமீராவும் கேட்ட தினத்துக்கு முதல் நாளே பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள். நம்பிக்கை அதிகமானது. பல தடவைகள் இது போல் நடந்துவிட்டன.

அப்போதுதான் சமீராவின் கணவருக்கு தொழிலில் சில பிரச்சனைகள் நிகழத்தொடங்கின. இலாபம் எப்படிப் போனாலும் முதல் காசும் சேர்ந்து கரையத் தொடங்கியது. வியாபாரம் மெல்ல மெல்ல நஷ்டமடைந்து கொண்டு வந்தது.

தலைநகரில் வாழ்ந்து கொண்டிருந்தமையால் செலவுகள் கூடிக்கொண்டே சென்றன. குடும்பத்தை எப்படிக் கரைசேர்ப்பது என சமீராவுக்கும் புரியவில்லை. அவளின் வருமானம் எந்த மூலைக்கு? சமீரா இது பற்றி கதீஜாவுக்கு அலுவலக மதிய இடைவேளையின் போது கூற நேர்ந்தது.

'ம்.. கதீஜா ஒரு விஷயம் கதைக்கனும்'

'ஏன் சமீரா ஒரு மாதிரி இருக்கீங்க? தயக்கமில்லாமல் கதைங்க சமீரா.. எதுவானாலும் பரவாயில்ல சொல்லுங்க?'

'இல்ல தலவலி.. அதான். விஷயத்த எப்படி சொல்லுவதென்று தான் புரியவில்ல'

'உங்க முகமே உங்க மனசை காட்டுதே. எதுனாலும் சொல்லுங்க. முடிஞ்சா ஏதும் பண்றேன்' என கதீஜா கூறியபோது சமீராவுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.

'கதீஜா இவருட பிஸ்னஸ் எல்லாம் நஷ்டமாகிக்கிட்டே போகுது. என் சம்பளம் புள்ளைகள்ட செலவுக்கே பத்தல. அவரும் இதனால மனசுடஞ்சி போயிட்டாரு. உங்களால முடிஞ்சா... காசு கடனாகத் தந்தீங்க என்டா பெரிய உதவியாயிருக்கும்...' என சமீரா கூறியதற்கு

'சமீரா உங்க பிஸ்னஸ்க்கு எவ்வளவு காசு தேவப்படுது?' என கதீஜா கேட்டதும் மலைத்தேவிட்டாள் சமீரா. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. யாராவது இந்தக் காலத்தில் பண உதவி புரிவார்களா? ஆம் இதோ கதீஜா அதற்கு உதாரணமாச்சே. அவள் உதவுகிறாளே.

'கிட்டத்தட்ட ஐந்து இலட்சங்கள் தேவப்படுது. ஆனா இந்தப் பெரிய தொகையை எங்க நானாமாரு கூட தர விரும்ப மாட்டாங்க'

'சமீரா இன்னும் மூன்று நாள்ல நான் கோல் பண்றேன். நீங்க என்னை நான் குறிப்பிடும் இடத்துக்கு வந்து சந்திக்க வேணும்' எனக் கூறினாள்.

கதீஜா ஏன் இப்படி கூறுகிறாள் என்றுகூட சமீராவுக்கு தெரியவிலலை. எனினும் மூன்று நாட்களின் பின்னர் சமீராவுக்கு கதீஜாவிடமிருந்து தொலைபேசி வந்தது.

இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படியும், தான் அவ்விடத்தில் காத்திருப்பதாகவும் கதீஜா சொன்னாள். உடனே சமீரா என்ன ஏது என அறிவதற்காக தனது கணவருடன் மோட்டர் பைக்கில் விரைந்து வந்தாள். எதிர்பாராத நேரத்தில் சமீராவின் கணவரும் வந்தமை கதீஜாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்திது. ஆனாலும் அவள் காட்டிக் கொள்ளவில்லை.

கதீஜா தலைநகரில் தங்கியிருந்து தொழில் புரிபவள். பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் அவளுக்கு குறிப்பிட்ட அளவுதான் காசு கிடைக்கும். எனினும் கதீஜா நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்தவளாயிற்றே. ஆதலால் அவ்வப்போது சிலரிடம் கடனுதவி பெற அவளுக்கு முடியுமாயிருந்தது.
இப்போது கொண்டு வந்திருக்கும் பணத்தொகை ஐந்து இலட்சம் கூட அவளது நண்பியின் வாப்பாவிடமிருந்து பெற்றதுதான். இதற்காக கதீஜா தனது நகைகளை நம்பிக்கையின் பெயரில் தனது நண்பியின் வாப்பாவுக்குக் கொடுத்து வைத்திருந்தாள். அந்த சூழ்நிலையில் கதீஜாவுக்கு அந்த வீட்டில் நடந்த சம்பாஷனை நினைவுக்கு வந்தது.

'சொல்லுங்க மகள். ஏதோ தயக்கமா இருக்குறீங்க போலிருக்கு?'

'இல்ல அங்கிள். எல்லாம் காசு விடயம்தான். ஆனா இது தொகை அதிகம்.'

'அவ்வளவு காசு எதுக்கு.. ம்மா?'

'என் தோழியின் கணவர் தொழிலில் கடுமையாக நஷ்டப்பட்டுள்ளார் அங்கிள் அதான்...'

'ஓகே மகள் உங்க மேல எனக்கு நம்பிக்க இருக்கு. என் மகள்ட குளோஸ் பிரண்டு நீங்க. கேளுங்க எவ்வளவு வேணும்?'

அவர் அப்படி கேட்டதும் கதீஜா தொகையை குறிப்பிட்டாள். அவருக்கே புதினமாயிருந்தது. இந்தத் தொகைக்கு தானே பொறுப்புதாரி என கதீஜா கூற அவர் அதைக் கையளித்தார். அந்த பணத்த கொடுக்கத்தான் சமீராவை வரச் சொல்லியிருந்தாள் கதீஜா.

'கதீஜா என்ன யோசின?'

'ஆ.. வந்து அது என்னான்னா இதப் புடிங்க. உங்க யாவாரத்த பாத்துட்டு இதை ஆறு மாசத்தில திருப்பித் தந்தால் போதும்'

பிரித்துப் பார்த்த சமீராவுக்கு கைகள் நடுங்கின. குரல் தளும்பியது. கால்கள் பலவீனமடைந்தன. கட்டுக் கட்டாக பணம். ஐந்து லட்சங்கள். சுப்ஹானல்லாஹ் கதீஜாவா இப்படி உதவி செய்வது? இவள் எனக்கு யார்? என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

சமீராவின் கணவர் அமீரும் ஸ்தம்பித்துவிட்டார். தொங்குவதற்கு கயிறு தேடிக்கொண்டிருக்கையில் பணவுதவி செய்வது இந்த சிறிய பெண்ணா? என எண்ணினார்.

'தங்கச்சி அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யனும். கட்டாயமா நீங்க கேட்கும்போது இந்த காச உங்களுக்கு நாங்க திருப்பித் தருவம். எனக்கும் ஒரு கொமரு இருக்கு. உங்களுக்கு அநியாயம் செஞ்சா அது என் மகளைத்தான் பாதிக்கும்' என அமீர் கூற சமீரா அதனை ஆமோதித்தாள். பிறகு அவர்கள் இருவரும் நன்றியுடன் விடைபெற்றனர்.

கதீஜாவுக்கு மனதில் பெரிய நிம்மதியாக இருந்தது. ஒரு குடும்பம் பிழைக்க தன்னால் இயன்ற உதவியை அவள் துணிந்து செய்துவிட்டாள். ஒருவேளை அந்தப் பணத்தை அவர்கள் திருப்பித் தராவிட்டால்..? என அவள் சிந்திக்கவில்லை. நல்ல எண்ணம் கொண்டு கொடுத்த காசு, தடங்கள்களின்றி வந்து சேரும் என்ற தீராத நம்பிக்கை அவளுக்கு. சமீராவினதும், அமீரினதும் மகிழ்ச்சி வதனம்.. அதில் கண்ட திருப்தி இது கதீஜாவுக்கு பெரிய திருப்தியை அளித்தது. சில காலங்களின் பின்னர் கதீஜா வேறு கிளைக்கு மாற்றலாகி போனதோடு, சமீராவும் வேறொரு வேலைக்காக அந்த நிறுவனத்திலிருந்து விலகிச் சென்றிருந்தாள்.

********************

ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. கதீஜா கோல் பண்ணினாள். மறுமுனையில் பதிலில்லை. கோலுக்கு மேல் கோல். ஒருவாறு ஒரு பெண் குரல் கேட்டது. கேட்டு பழக்கப்பட்ட குரல். ஆனால் தெளிவில்லை போல இருந்தது. ஏனெனில் அந்த அன்பும், பாசமும் ஒட்டியிருந்த சமீராவின் குரலில் அகங்காரம் தொனித்தது.

கதீஜாவுக்கு முதலில் அது பெரிய தாக்கத்தைத் தரவில்லை. எனினும் தொடர்ந்து பேசிக்கொண்டு சென்றபோதுதான் சுயரூபம் கக்கினாள் சமீரா. தனக்கு இப்போது பணத்தை தர முடியாது எனவும், இன்னும் தமக்கு கஷ்டகாலம்தான் எனவும் கூறிவிட்டு படாரென போனை வைத்துவிட்டாள்.
இதயம் கலங்கியது கதீஜாவுக்கு. அதுகூட சமீரா இப்படிப் பேசிவிட்டாளே என்று அல்ல. இன்னும் அவள் கஷ்டப்படுகிறாளே என்றுதான். ஆதலால் தனது தோழியின் வாப்பாவிடம் கொஞ்சம் பொறுக்குமாறு மன்றாடிவிட்டு இன்னும் ஆறு மாதங்கள் வரை பொறுத்திருக்கலாம் என திடசங்கற்பம் பூண்டாள்.

என்ன ஆச்சரியம்! இத்தனை மாதங்களுக்கும் ஒருமுறைதானும் சமீராவோ, அவளது கணவனோ கதீஜாவுக்கு கோல் பண்ணவில்லை. பணம் பற்றி கதைக்கவுமில்லை. குணம் மாறும்போது எடுத்த பணம் கூட யாருக்கும் நினைவில் இல்லையே.

இல்லாதபோது மன்றாடிக் கெஞ்சுவதும், எல்லாம் சரிவந்தபின் கடன் கொடுத்தவரையே மிஞ்சுவதும் இன்றைய உலகின் புதிய நடைமுறை அல்லவே.

கதீஜா பலமுறை சமீராவுக்கும், அமீருக்கும் கோல் பண்ணினாள். ஆனால் அவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதிகாரத் தோரணையில் பேசுவதும், சிறிய பெண்தானே என அவளை அதட்டுவதும் வாடிக்கையாகிப் போனது. இன்னொரு நாள் அவர்களின் வீட்டுக்கே சென்று கதீஜா பணத்தைக் கேட்ட போது,

'இப்ப எங்களுக்கு காசு தர ஏலாது. உங்களுக்கு ஏலுமெண்டால் பொலிஸுக்குப் போய் எடுத்துக்கோங்க' என வெடுக்கென மனசாட்சியில்லாமல் சமீராவும், அமீரும் சொல்லிவிட்டார்கள்.

கதீஜா சமூகத்தைப்பற்றி மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தாள். இன்று காசு எடுத்தவன் பயப்படத் தேவையில்லை. காசு கொடுத்தவன்தான் பயப்பட வேண்டும். ஆம் கதீஜாவுக்கும் பயம் பிடித்தது. தோழியின் வாப்பாவின் பெரிய கடன் தொகையை தான் எவ்வாறு சமாளிப்பது என்ற யோசனை, கதீஜாவுக்கு தொடர்ந்து தலைவலி ஏற்பட காரணமாயிற்று.

என்ன செய்வது என யோசித்த கதீஜா வேறு வழியில்லாமல் சமீரா சொன்னதையே செய்ய நேர்ந்தது. அதுதான் காவல் துறைக்கு சென்று பணத்தை மீளப்பெறுவது. கால்கள் பின்ன.. இதயம் வேண்டாம் என்று அடம் பிடித்து அழ.. உள்ளத்தை கல்லாக்கிக் கொண்டு அந்தக் காரியத்தை கதீஜாவால் செய்ய வேண்டியதாயிற்று.

சமூகம் இதைக் கண்டால் என்னவெல்லாம் சொல்லும்? ஆனால் கதீஜாவின் பிரச்சனை சமூகத்துக்கு தெரியாததால் அவள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை தானே. சமூகமா வந்து பணத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறது, ஆதலால் அவள் காவல் நிலையம் போகத் துணிந்துவிட்டாள்.
கதீஜா கொடுத்த புகாரின் பெயரில் அமீர் காவல் நிலையத்துக்கு வந்தான். அமீரின் தோற்றம் முற்றாக மாறியிருந்தது. அகங்காரம் அவர் நடையில் தெறித்தது. ஆனாலும் பயனென்ன? பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்காமல் என்ன பந்தா வேண்டிக்கிடக்கிறது? அவரது வாக்குமூலம் கதீஜாவை குற்றவாளியாகவே முதலில் சித்தரித்தது. ஒரு கட்டத்தில் அமீர் பணம் பெறவே இல்லை என்று வாதிடும் அளவுக்கு சென்றுவிட்டான். சரிக்கு சரியாக கதீஜாவுடன் வாக்குவாதப்பட்டான். கதீஜாவை அவமானப்படுத்தி அழ வைத்தான். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என சும்மாவா சொன்னார்கள்? கொடுத்த காசைக் கேட்கப் போய் கெட்ட பெயரையும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமா?

கதீஜாவால் இதனைத் தாள முடியவில்லை. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நல்ல வேளை சமீரா ஐந்து இலட்சம் பெற்றுக்கொண்டதாக ஒரு கடிதத்தை கதீஜாவுக்கு கொடுத்திருந்தாள். அக்கடிதத்தில் அமீரும் கையெழுத்துப் போட்டிருந்தான். கதீஜாவிடமிருந்த அந்தக் கடிதத்தை உடனே எடுத்து காவல் துறை அதிகாரிக்குக் காட்டினாள். அதனால் காவல் துறையினருக்கு உண்மை விளங்கிவிட்டது. ஒரு பெண்ணால் இப்படி பொய்யாக அழ முடியாதல்லவா? தவணை முறையில் பணம் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் ஆயிற்று. உதவி செய்யப்போய் உபத்திரவம் வந்துவிட்டது. ஆனால் அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். அவன் கதீஜாவை கைவிடப் போவதில்லை. அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை தங்கு தடையின்றி அல்லாஹ்விடம் சென்றுவிடுகிறது.

காவல் நிலையத்தைவிட்டு வெளியேறும்போதும் கதீஜாவின் செவிகளில் அமீர் பணம் பெறும்போது சொன்ன அந்த வாசகமே திரும்பத் திரும்ப ஒலித்தது.

'தங்கச்சி அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யனும். கட்டாயமா நீங்க கேட்கும்போது இந்த காச உங்களுக்கு திருப்பித் தருவன். எனக்கும் ஒரு கொமரு இருக்கு. உங்களுக்கு அநியாயம் செஞ்சா அது என் மகளைத்தான் பாதிக்கும்'!!!

(முற்றும்)