அன்று பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த நண்பர் என்னைப் பார்த்து,
'காவ்யா புதுசா ஒரு எழுத்தாளர் நல்லா கவிதை எழுதி வாராங்க. சூப்பரா இருக்கு' என்று கூறியதும் கொப்பித் தாளில் எழுதி அனுப்பப்பட்ட அந்த கவிதையை நான் கையில் எடுத்து வாசித்தேன். பாலகுமாரி என்று எழுதியவரின் பெயர் இருந்தது. உண்மையில் முதிர்ந்த ஒரு எழுத்தாளரின் கவிதை என்று எண்ணிக்கொண்டு இவர்களெல்லாம் ஏன் இவ்வளவு காலம் எழுதாமல் விட்டார்கள் என்ற ஐயத்தை அவரிடம் கேட்டேன். அவரும் அதை ஆமோதித்தார். அந்த கவிதைத் தாளில் எழுதப்பட்டிருந்த விலாசத்தை மனதில் இருத்திக்கொண்டு போன காரியத்தை முடித்துக்கொண்டு வந்துவிட்டேன்.
நான் கொழும்பில் தொழில் செய்வதினால் ஒரு வாடகை அறையையே தெரிவு செய்து அதிலே தங்கியிருந்தேன். என்னுடன் ரேகா, கீதா என்ற இரு நண்பிகளும் தங்கியிருந்தனர். நான் இலக்கியத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால் இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வது, பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசுவது, இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடுவது என்று எனது காலம் மிகவும் மகிழ்ச்சியாகவும், பிரயோசமாகவும் கழிந்து கொண்டிருந்தது. ரேகா அதைப்பற்றி அடிக்கடி கிண்டலடிப்பதுண்டு.
'கவி.. லீவு நாளெண்டாலும் நீ தமிழ்ச் சங்கம் அங்க இங்கன்டு ஓடுறாய். பேசாமல் எங்களுடன்; இரு' என்பாள். ஏதாவது எழுத்துலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்ததால் என்னால் போகாமல் இருக்க முடியவில்லை. இப்படியிருக்க மனதில் துருத்திக்கொண்டிருந்த அந்த விலாசத்துக்கு ஒரு சிறிய மடல் எழுதினேன்.
நான் காவ்யா. ஒரு எழுத்தாளர். இலக்கிய விடயங்கள் பற்றி பேச வேண்டியிருக்கிறது. முடிந்தால் எனது தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.
என்று சுருக்கமாக எழுதி அனுப்பி வைத்தேன். ஒரு சில நாட்களுக்குப் பிறகு எனக்கு அறிமுகமில்லாத இலக்கித்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்து கதைத்ததும் பத்தொன்பது, இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணின் குரல் கேட்டது. யாராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு பேசினேன்.
'நான் பாலகுமாரி கதைக்கிறேன்' என்றாள்.
என்னது பாலகுமாரியா? இவ்வளவு இளமையான குரல் கொண்டவளாக இருக்கின்றாளே என்று வியந்தேன். பிறகு தான் தெரிந்தது பாலகுமாரி பத்தொன்பது வயதுடையவளே என்று. இவளா பத்திரிகையில் அந்தக் கவிதைகளை எழுதினாள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. மிகவும் அன்பாகவும், பவ்வியமாகவும் கதைத்து அவளுக்கு பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு போனை சைவத்துவிட்டேன். அலுவலக வேலைகள் அதிகமாக இருந்ததினால் அப்படி பாதியில் வைத்துவிட்டாலும் இரவில் எடுத்துப் பேசலாம் என்று எண்ணிக்கெண்டு வேலையில் மூழ்கினேன்.
உண்மையில் அன்று எனக்கு பாலகுமாரியை நினைவு வரவேயில்லை. அடுத்த நாளும் வேiலைப் பளுக்களுக்கு இடையில் சிக்கியிருந்ததால் பாலகுமாரியுடன் பேசியது குறித்து அடிக்கடி ஞாபகம் வந்தாலும் பேசுவதற்கான சூழ்நிலை எனக்கு இருக்கவில்லை.
அன்று மாலை பஸ்ஸில் போகும்போது பாலகுமாரிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தேன். உடனே குதூகலமாக மறுமுனையிலிருந்து பாலகுமாரி ஹலோ என்றாள்.
'அக்கா நா உங்களுக்கு கோல் பண்ண நினச்சன். ஆனா நீங்க பிஸி எண்டதால பேசல்ல' என்றாள்.
அவளது கூற்றில் பொய் இருக்கவில்லை. அதனால் நானும் எதுவித வேறுபாடும் இன்றி பேசினேன். இப்படியே போனில் வளர்ந்த நம் இலக்கிய நட்பு, கடித்திலும் தொடர்ந்தது. அந்தக் காலத்தில் போனுக்கு செலவழிப்பதற்காக என்றே வேறு உழைக்க வேண்டியிருந்ததால் நிறைய கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ள கடிதம் உதவியது.
ஒருநாள் திடீரென பாலகுமாரி தொலைபேசியில்,
'அக்கா நாளைக்கு நாங்க கொழும்புக்கு வர இருக்கிறோம். உங்களை சந்திக்கலாமா?' என்று கேட்டாள். நானும் நேரத்தை ஒதுக்கி சந்திக்கச் செல்லலாம் என்றமுடிவுடன், 'சரி. உங்கள் அலுவல்கள் முடிந்ததும் கோல் பண்ணுங்க. நான் இடத்தைச் சொல்றேன்' என்றேன். நாளை பாலகுமாரியை முதன் முதலாக சந்திக்கப் போகிறேன் என்ற சந்தோஷம் உள்ளுக்குள் நிலவியது உண்மைதான். சொன்னது போலவே மாலை முன்றரை மணிக்கு பாலகுமாரி தொலைபேசினாள். நான் சரியாக நான்கு மணிக்கு கங்காராம என்ற இடத்துக்கு வருவதாகக் கூறினேன். அவ்விடத்தில்தான் அவளது மாமியின் வீடும் அமைந்திருப்பதால் இருவருக்கும் அந்த இடத்தில் சந்திப்பது உசிதமாகப்பட்டது.
நான்கு மணிக்கு நான் சரியாக அங்கு செல்வதாக எண்ணிக்கொண்டு சென்றேன். ஆனால் அதற்கு முதலே அவள் தனது தாயுடனும், தந்தையுடனும் அங்கு வந்து எனக்காகக் காத்திருந்தாள். ஏற்கனவே அறிமுகம் இல்லாத காரணத்தால் அவ்விடமே இருந்து தொலைபேசி அழைப்பை எடுத்துக்கொண்டே அந்தப் பெண்ணை நோட்டமிட்டேன். அவள் அவளது தொலைபேசியை எடுத்து கதைத்ததும் அறிமுகமாகி இருவரும் சிநேகபூர்வமாக புன்னகைத்தபடியே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
'அம்மா அதோ அவங்கதான் காவ்யா அக்கா' என்று என்னைக் காட்டியபடி என் அருகே வந்தாள். அவளையும், அவளது பெற்றோரையும் அன்றுதான் நான் முதன் முதலாக சந்தித்தேன். அவர்களது ஊரில் விசேடமாக தயாரிக்கப்படும் தீன் பண்டங்களை எனக்காக சுமந்து வந்திருந்தாள். என்னிடம் அவற்றைக் கையளிக்கும்போது பாலகுமாரியின் கண்களைப் பார்த்தேன். மகிழ்ச்சி ததும்பியிருந்தது. நான் பார்த்ததை அவள் காணவில்லை என்பதில் எனக்கு ஏக திருப்தி. தான் நாளைக்கு மீண்டும் ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, இதுவரை தான் எழுதிய கவிதைகள் அனைத்தையும் நான் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க போட்டோகொப்பி செய்துகொண்டு வந்து எனக்குத் தந்தாள்.
'அக்கா உங்களுக்கு வசதி கிடைக்கிறப்போ இதை வாசித்து பிழை திருத்துங்க. முடிஞ்சால் பத்திரிகைகளுக்கும் கொடுத்திடுங்க' என்று பாலகுமாரி பணிவாகக் கூறினாள்.
உயர்தரப் பரீட்சை முடித்துவிட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அவள் கொழும்பில் தொழில் செய்ய ஆர்வமாக இருப்பதை அவளது பேச்சு காட்டிக்கொடுத்தது. நான் அவசரப்பட்டு எதுவும் சொல்லாமல் பிரியமாகப் பிரிய விடைகொடுத்தேன்.
இரு தினங்களுக்குப் பிறகு மீண்டும் தொலைபேசினாள். கவிதைகள் எப்படி இருக்கின்றன? என்று கேட்டாள். ஆறுதலாக வாசித்துவிட்டுச் சொல்கின்றேன் என்று கூறி பொதுவாகப் பேசிவிட்டு வைத்தேன்.
சனிக்கிழமை மாலை வேளையில் ஒருநாள் பாலகுமாரி தந்த கவிதைகளை வாசித்தேன். பிரமித்துப் போனேன். ஒரு சின்னப் பெண்ணுக்கா இத்தனை வீச்சான கருத்துக்கள்! அழமான சிந்தனைகள்! அவளது சிந்தனைக்குள் கருக்கொண்டிருந்த கவிதைகளில் என் மனம் ஒட்டிக்கொண்டது. கூடவே பாலகுமாரி குறித்த மரியாதை அன்பாக மாறியது. அவளது கவிதைகளில் விரக்தியும், தாக்கமும், தாழ்வுச் சிக்கலும் காணப்பட்டமை எனக்கு மனதில் ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது. இவை இந்த வயதில் வரவேண்டியவைதான் என்று எனக்குள்ளே ஒரு போலி சமாதானத்தைக கூறிக்கொண்டு இதுகுறித்து அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
ஒருநாள் அவளிடம் கேட்டபோது, ஷஅதெல்லாம் கற்பனை| என்றாள். பிறகு ஷகொஞ்சம் நிஜம்| என்றாள். இறுதியில் அவள் பற்றிய சில உண்மை விடயங்களை அறியக் கிடைத்தது. ஆம் பாலகுமாரி மிகவும் நேசித்த அவளது அம்மம்மாவினதும், தாத்தாவினதும் மரணம், ஒரு நண்பி அவளுக்கு செய்த துரோகம், பாலகுமாரி தன் சொந்த சகோதரனாய் எண்ணிய பெரியம்மாவின் மகன் ஆரம்பத்தில் பாசத்தைப் பொழிந்துவிட்டு இடையில் காசு வந்ததும் எல்லோரையும் தூக்கியெறிந்து விட்டார். இப்படி அடிப்படையான சில காரணங்கள் அவளை மிகவும் பாதித்திருந்து. அவற்றிலிருந்து முழுமையாக விடுபட அவளால் இயலாமல் துணைக்கென இலக்கியத்தை நாடியிருக்கின்றாள். அந்த இலக்கியத்தின் மூலமாகவே மனதில் உள்ள துயரங்களை ஆற்றிக்கொள்வதாகக் கூறினாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரவர்க்கு அவரவர் பிரச்சினை பெரிது. வாழ்க்கையில் எத்தனையோ விடயங்கள் இருக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று கேட்கத் துணிந்தாலும், ஏற்கனவே நொந்து போனவளுக்கு வாழ்வு குறித்த பயத்தை இன்னும் ஏற்படுத்தலாமா? என்று எண்ணி அவளுக்கு மிகவும் ஆறுதல் சொன்னேன்.
அதில் திருப்தி கண்டவளாய் அவள் என்னை ஒரு நல்ல தோழியாக ஏற்கத் தொடங்கினாள். நிறைய விடயங்கள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். எப்ரல் விடுமுறையில் தங்கள் ஊருக்கு வருமாறு அன்பாக அழைப்பு விடுத்தாள். அதை என்னால் மறுக்க முடியவில்லை. எனவே நான் அங்கு சென்று பத்து நாட்கள் தங்கியிருந்தேன். ஒரு அன்பான குடும்பத்தைச் சந்தித்த மகிழ்ச்சி நெஞ்சில் நிலைத்தது. பாலகுமாரியின் தாழ்வுச்சிக்கல்கள், விரக்தி ஆகியவற்றை எல்லாம் தூக்கியெறியுமாறு பல புத்திமதிகள் சொன்னேன். பத்துத் தினங்களின் பின்பு ஏற்பட்ட பிரிவு என் உள்ளத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது உண்மை. அக்கா அக்கா என்று மிகவும் பாசமாக இருந்த பாலகுமாரிக்கு சொந்த சகோதரி போல் இருந்து வழிகாட்டுவேன் என்ற உறுதிப்பாட்டை மனதில் எண்ணிக்கொண்டேன்.
சிறிது நாளில் இறைவனின் உதவியால் கொழும்பில் பாலகுமாரிக்கு ஒரு தொழிலைப் பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதை அவளிடம் சொன்னபோது அகமகிழ்ந்து போனாள். அவளது வீட்டாருக்கும் என்னிடம் அவளை அனுப்புவதில் எதுவித ஆட்சேபணை இருக்கவில்லை.
நான் வரச்சொன்னதொரு தினத்தில் தன் தாய், தந்தையுடன் கொழும்புக்கு வந்துசேர்ந்தாள் பாலகுமாரி. அவளுக்கே தெரியாமல் அவளது விருப்பத்துக்கு ஏற்றாற்போல நான் பல ஏற்பாடுகளை செய்திருந்தேன். அந்தச் சிறிய பெண்ணின் சந்தோசத்தில் நானொரு தாயாக நின்று சந்தோசப்பட்டேன். அவள் எனக்கு ஏற்கனவே தந்துவைத்திருந்த அவளது ஆரம்பகால கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை பிரசுரமான பத்திரிகை பிரதிகளை எடுத்துக்காட்டினேன். அவள் மிகவும் பூரித்துப்போனாள்.
இப்படியே இருக்க அவளுக்கு சிறுகதையிலும் ஆர்வம் இருப்பதை அவதானித்தேன். என்னிடமிருந்த பல சிறுகதைப் புத்தகங்களை அவள் முன் எடுத்துப்போட்டேன். வாசிப்பதில் அதிக நாட்டம் இருந்ததால் சலிக்காமல் அவள் அந்த சிறுகதை நூல்கள் யாவற்றையும் வாசித்தாள். வாசிக்கும் வேகத்தைப் பார்த்து நான் மிகவும் அதிர்ந்து போயிருக்கிறேன். காரணம் சராசரியாக யாரும் வேகமாக வாசித்தால் நினைவுத்திறனில் அது பதிவதில்லை. ஆனால் பாலகுமாரிக்கு ஞாபக சக்தியும் அதிகம். எதையும் பார்த்ததும் கற்றுக்கொள்வாள். அதனால் விமர்சனத்துறையிலும், சிறுவர் ஆக்கத்திலும் அவளுக்கு நிறைய வழிகாட்டி அதில் பலரது அறிமுகங்களையும் பெற்றுக்கொடுத்தேன். ஒரு சிறிய விண்மீனாக இருந்தவள் இன்று இலக்கியத் துறையில் பிரசாசித்துக்கொண்டிருக்கிறாள்.
நான் சிறிதாக செய்த வழிகாட்டலில் அவள் பெரிய வெற்றிப் படிகளை எட்டிப் பிடித்துவிட்டாள். இப்போதுகளில் எனது படைப்புக்களைப் பார்த்து விமர்சனங்கள் சொல்லி, அதில் குறைகள் இருந்தால் கண்டுபிடித்துக் கூறுவாள். நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டோம். எம்மைப் பார்த்து பொறாமைபட்ட சில கண்களும் இருந்தன. எமது பிரிவை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் இறைவனின் நாட்டத்தால் நமக்குள் போட்டியோ பொறாமையோ இல்லாததால் நாம் சாதனையை நிலைநாட்டலாம் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டிருக்கின்றது. என்றும் எப்போதும் மனங்கோணாமல் நாம் வாழ்வதற்கு வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என்பதே எனது பேரவா!!!